
கருவூலம்
(சென்ற வாரத் தொடர்ச்சி...)
ஏற்காடு
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று இது! சேலம் மாநகரிலிருந்து 36கி.மீ தூரத்தில் சேர்வராயன் மலைத்தொடரில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அழகிய இடத்தை ஆங்கிலேயர்கள் 1862இல் கோடை வாசஸ்தலமாக அறிவித்தனர்.
1623 மீ. உயரத்தில் இருக்கும் 383 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த ஊருக்கு 20 வளைவுகளைக் கொண்ட மலைப்பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இப்பகுதியில் காப்பி, பலா, அத்தி, ஆரஞ்சு, கொய்யா, மிளகு, ஏலக்காய், போன்ற பல பொருட்கள் விளைகின்றன. இதில் காப்பிச் செடியும், ஆப்பிள் மற்றும் சில பழவகைகளும் இங்கு ஆங்கிலேயர்களால்தான் முதலில் பயிரிடப்பட்டன. இதைத்தவிர மலைச்சரிவுகளில் வனப்பகுதிகளும் உள்ளன.
மரங்களின் நிழலும், இதமான தென்றல் காற்றும், வெயிலின் தாக்கம் தெரியாத ரம்மியமான சூழலும் சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கின்றன. இங்குள்ள மரகத ஏரி, தேசிய தாவரவியல் பூங்கா, "வியூ பாயின்ட்' எனப்படும் காட்சி முனைகளும் குறிப்பிடத்தக்கவை!
மரகத ஏரி (EMERALD LAKE)
ஏற்காடு குன்றினை ஒட்டி 383 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த "மரகத ஏரி' இருக்கிறது! இந்த ஏரிக்கு நடுவில் ஒரு நீரூற்றும், அருகில் சிறுவர்கள் விளையாடி மகிழ பூங்காவும், அண்ணா தாவரவியல் பூங்காவும் அமைந்துள்ளன. இந்தத் தாவரவியல் பூங்காவில் சுமார் 3000 வகையான மரங்கள், மற்றும் 1800 வகையான செடிகளும் வளர்த்து பராமரிக்கப்படுகின்றன. இங்கு கோடைக்காலத்தில் தமிழக சுற்றுலாத் துறையால் "கோடை விழா'வும் நடத்தப்படுகிறது.
இதைத்தவிர ஏற்காடு மலைப்பகுதியில் கரடியூர் காட்சி முனை, பக்கோடா முனை, லேடிசீட் ஆகிய இடங்களிலிருந்து அழகிய சமவெளிப் பகுதியையும், பசுமையான மலைச் சரிவுகளையும் பார்த்து ரசிக்கலாம்.
இங்குள்ள வனப்பகுதியில் சந்தனம், தேக்கு, சில்வர் ஓக் உள்ளிட்ட ஏராளமான மரங்களும், மற்றும் காட்டெருமை, மான், நரி, முயல்கள், கீரிப்பிள்ளை, அணில், பாம்புகள் மற்றும் பலவகையான பறவையினங்களும் காணப்படுகின்றன.
கோடைக்காலத்தில்தான் ஏற்காடு மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள் என்றபோதும் குளிர்காலத்தில் மூடுபனி மலைகளை மூடியிருக்கும் காட்சி அற்புதமானது!
ஏற்காடு பகுதியில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த அருவியில் மரகத ஏரி நிரம்பும்போது நீர் கொட்டும்!
பனைமரத்துப்பட்டி ஏரி
500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இயற்கையாக உருவான இந்த ஏரி சேலத்தின் வேடந்தாங்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. மரங்கள் நிறைந்த பசுமையான சூழலும், ஏராளமான பறவை இனங்களும் காண்பவர் மனதை கவர்பவை. மேலும் பருவ காலத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவையினங்களும் வலசை வந்து செல்கின்றன.
ஆத்தூர் கோட்டை
வசிஷ்ட நதிக்கரையில் உள்ள இக்கோட்டை கெட்டி முதலியார் வம்ச சிற்றரசர்களால் கி.பி. 1559 - 1585 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டது. எதிரிகள் உள்ளே நுழைந்து விடாமல் இருப்பதற்காக கோட்டையைச் சுற்றி அகலமான அகழிகளும், உயரமான மதிற்சுவர்களும், குறுகிய வாயில்களும் அமைக்கப் பட்டுள்ளன. உள்ளே ஓய்வு மண்டபம், நான்கு நெற்களஞ்சியங்கள், ராணியின் அந்தப்புரம், நீச்சல் குளங்கள், பல மண்டபங்களும் உள்ளன. மேலும் உள்ளே பெருமாள் கோயிலும் மற்றும் சிவன் கோயிலும் உள்ளன!
சங்ககிரிக் கோட்டை
தமிழகத்திலேயே உயரமான கோட்டை இதுதான்! சங்கு போன்ற தோற்றம் கொண்ட சங்ககிரி மலை மீது கட்டப்பட்டுள்ளது! இந்தக் கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்டது! அடிவாரத்திலிருந்து உச்சிவரை 9 வாயில்களுடன் பல சுற்றுகளாக அடுக்கடுக்காகக் கட்டப்பட்டுள்ளது. இதனுள் சிவன் கோயில், வரதராஜபெருமாள் கோயில், சென்ன கேசவ பெருமாள் கோயில், தஸ்தகீர் மகான் தர்கா உட்பட பல கட்டடங்கள் உள்ளது. தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டது இந்தக் கோட்டையில்தான்!
தாராமங்கலம் கைலாச நாதர் கோயில்
சேலம் தாலுக்கா தாராமங்கலத்தில் உள்ள இக்கோயிலில் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் அழகிய மண்டபங்களும் சிற்பங்களும் அவசியம் காண வேண்டியவை! இக்கோயிலின் ராஜ கோபுரம் 90 அடி உயரத்துடன், குதிரைகளும், யானைகளும் ஒரு பெரிய தேரை இழுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் மகாமண்டபத்தின் மேற்கூரையில் வேயப்பட்டுள்ள கற்களில் இருந்து சிறிதும் பெரிதுமான நீண்ட கல்லால் ஆன வளையங்கள் வெட்டப்பட்டு தொங்குவது போல் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டபச் சுவர்களில் மீன், ஆமை, முதலை போன்ற வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் உள்ள இரண்டு தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ராமன், வாலி சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை! ராமாயணக் கதைப்படி வாலி நிற்பது ராமனுக்குத் தெரியும். ராமன் நிற்பது வாலிக்குத் தெரியாது. இந்நிகழ்வின் படியே ராமன் சிற்பத்தின் அருகில் நின்றால் வாலி தெரியும். வாலி சிற்பத்தின் அருகில் நின்றால் ராமன் சிற்பம் தெரியாது!
இங்குள்ள சுழலும் கல் தாமரை மலர், ரதி, மன்மதன் சிற்பம் குறிப்பிடத்தக்கவை! இங்குள்ள சிங்க சிற்பத்தின் வாய்க்குள் உருளும் கல் ஒன்று உள்ளது! நம் விரலை வாய்க்குள் விட்டு கல்லை உருட்ட முடியும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. ஒரே கல்லில் மிகவும் திறமையாக, நுணுக்கமாக இச்சிற்பம் செய்யப்பட்டுள்ளது.
சுகவனேஸ்வரர் கோயில்
சேலம் மாநகரில் திருமணிமுத்தாறின் கரையில் கட்டப்பட்ட இந்தக் கோயில் பழமையானதும் சிறப்பான கலை வடிவமும் கொண்டது. 375 சுதைச் சிற்பங்கள் கொண்ட அற்புதமான ராஜகோபுரமும், சிற்பக்கலையின் உன்னதமான வெளிப்பாடாக விளங்கும் முன் மண்டபத்து எட்டுத் தூண்களும் சிறப்பானவை. தூண்களில் உள்ள யாளிச் சிற்பத்தின் வாயில் கல் உருண்டைகள் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் உருண்டையையும் நாம் விரலை விட்டு உருட்டமுடியும்!
போளூர்-தான்தோன்றிநாதர் கோயில்
வசிஷ்டா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த சிவன் கோயிலிலும் தாராமங்கலம் கோயில் தூண் சிற்பங்கள் போன்ற சிறப்பு வாய்ந்த சிற்பங்கள் உள்ளன. இக்கோயிலில் உள்ள கிணற்றுக்கு செல்லும் வழி சிங்கத்தின் வாயில் புகுந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!
தம்மம்பட்டி நரசிம்ம பெருமாள் கோயில்
இக்கோயிலும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது. மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இச்சிற்பங்கள் "தம்மம்பட்டி சிற்பக்கலை' என்ற பெயரில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளன!
பொய்மான் கரடு
சேலத்திலிருந்து திருச்சி செல்லும் பாதையில் 9 கி.மீ. தூரத்தில் இந்த இடம் உள்ளது. ஒரு மலைத்தொடரின் கிழக்கு நோக்கிய குகை ஒன்றின் வாயிலை நாம் சமவெளிப் பகுதியிலிருந்து பார்த்தால் அங்கு இரு கொம்புகளுடன் மான் ஒன்று இருப்பது போல் தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் மான் ஒன்றும் இருக்காது. அதனாலேயே பொய்மான் கரடு எனப் பெயர் பெற்றது!
இவற்றைத் தவிர மேட்டூர் அணை, குருவம்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் மாநகரில் உள்ள அரசு அருங்காட்சியகம், கந்தாஸ்ரமம், சேலம் மாநகரை ஒட்டியிருக்கும் "பரவச உலகம்'..., "ட்ரீம் லாண்ட்' என்னும் பொழுது போக்கு பூங்கா என பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மொத்தத்தில் சேலம் மாவட்டம் இயற்கையையும், பழமையான சிற்பக்கலையையும் விரும்புபவர்களுக்கு அழகான பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய இனிய சுற்றுலாத் தலமாகும்.
சில சிறப்புத் தகவல்கள்
சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில்தான் இந்தியாவின் மிக நீளமான ரயில்வே நடைமேடை உள்ளது! மேலும் திப்பு சுல்தானால் கட்டப்பட்ட பழமையான ஜாமா மசூதியும் சேலத்தில் இருக்கிறது.
கோட்டை மாரியம்மன் கோயில்
புகழ்பெற்ற இக்கோயில் சேலத்திலிருந்து 16கி.மீ. தூரத்தில் சரபங்கா நதிக்கரையில் இருக்கும் ஓமலூர் கோட்டையில் இருக்கிறது.
இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கெட்டி முதலி வம்ச மன்னரான வணங்காமுடி என்பவரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கி.பி.1641 முதல் 1700 வரை நடந்த தொடர் போர்களால் கோட்டை சிதைவுற்றது. கோட்டைக்குள் இருந்த விஜய ராகவ பெருமாள், கோட்டை மாரியம்மன், வசந்தீஸ்வரர் கோயில்கள் மட்டும் கோட்டையின் சின்னங்களாக இருக்கின்றன.
வசந்தீஸ்வரர் கோயிலில் சரபங்கா முனிவரின் ஜீவ சமாதி உள்ளது. ராமாயண காலத்தில் இவ்விடம் "தண்டகாரண்யம்' என்ற பயங்கர காடாக இருந்ததாம்! காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்த சரபங்கா முனிவர் ராமரின் தரிசனம் பெற்று முக்தி அடைந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன!
சைலம் என்றால் "மலைகள்' என்று பொருள்படும்! "சைலம்' என்று முன்பு அழைக்கப்பட்டு பின் சேலம் என்ற பெயர் மருவியதாம்! மலைக்க வைக்கும் பற்பல சிறப்புகள் சூழ்ந்த இடம் சேலம் என்பதில் ஐயமில்லை!
(முற்றும்)
தொகுப்பு: கே. பார்வதி,திருநெல்வேலி டவுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.