

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க கால நூல்களிலேயே தேர் பற்றிய தகவல்கள் உள்ளன! அக்காலத்தில் ஆலயத் திருத்தேர்களுடன், மன்னர்களின் தேர்களும் புழக்கத்தில் இருந்தது. தற்போது திருவிழாக்காலத்தில் இறைவன் வீதி உலா வரும் தேர்கள் மட்டுமே உள்ளது!
அழகிய கலை நயம் மிக்க கோயில்களைக் கட்டிய மன்னர்கள், இறைவன் பவனி வர அழகிய தேர்களையும், சப்பரங்களையும் உருவாக்கினார்கள். பின்னர் தேர் ஓடுவதற்கு வசதியாக அகலமான தெருக்களையும் அமைத்தனர். இத்தெருக்களும் கீழ ரத வீதி, மேல ரத வீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி என்றே அழைக்கப்படுகிறது.
கி.பி. 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தில் "ஓரிடத்தில் தேரோடும்.... நெடுவீதித் திருவாரூர் வாழ்வாரும்' என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து அப்பொழுதே நல்ல நீண்ட, அகலமான தேர் ஓடும் வீதிகள் இருந்ததை அறிந்து கொள்ளலாம்! மேலும் கோயிலையும், சுற்றியுள்ள வீதிகளையும் மையமாகக் கொண்டே சிதம்பரம், காஞ்சி, மதுரை, திருநெல்வேலி, திருவாரூர், ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல நகரங்களும் ஊர்களும் அமைந்துள்ளன.
தற்போது தமிழகத்தில் சுமார் 866 தேர்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும் பல விட்டுப்போயிருக்கலாம்) இந்தத் தேர்களில் திருவாரூர் தியாகேசர் தேரே மிகவும் பெரியதாம்! இரண்டாவது தேர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர். மூன்றாவது திருநெல்வேலி நெல்லையப்பர் தேர் ஆகும்!
திருவாரூர் ஆழித்தேர்!
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் தமிழகத்தின் பெரிய சிவன் கோயில்களில் ஒன்றாகும்.16.22 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்ற இக்கோயிலில் 9 கோபுரங்கள், 80 விமானங்கள், 12 உயர மதில்கள், 3 பிரகாரங்கள், 13 மண்டபங்கள், 24 உட்கோயில்கள் கொண்டது.
இக்கோயிலின் கமலாலயம் தெப்பக்குளமும் கோயிலின் அளவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரும் இங்குள்ளது!
இக்கோயிலுக்குச் சொந்தமான ஆழித்தேர் 1927இல் தீக்கிரையானது. அதனால் 1930இல் புதிய தேர் செய்யப்பட்டது. அத்தேர் 1970இல் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு 2010இல் சிதிலமடைந்ததால் 2011இல் தேர் பழமை மாறாமல் செப்பனிடும் பணி தொடங்கப்பட்டு 2016இல் முடிவடைந்தது.
இதற்காக 9 ஆயிரம் கன அடி கொங்கு, தேக்கு, பூவரசு உள்ளிட்ட உயர் ரக மரங்களைக் கொண்டு ரூ.2.17 கோடியில் செப்பனிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர் "கட்டுத் தேர்' வகையைச் சேர்ந்தது. அதாவது கீழுள்ள பகுதி மட்டும் நிரந்தரமாக அமைக்கப்பட்டு, மேற்பகுதி தேர்த்திருவிழாவிற்கு முன்னர் கட்டி அலங்காரம் செய்யப்படும்!
இந்தத் தேரின் 3 நிலைகளை (அடுக்குகள்) கொண்ட அடிபாகமானது 30 அடி உயரமும் 31 அடி அகலமும் கொண்ட எண்கோண வடிவில் இருக்கும். 300 டன் எடை கொண்ட இதில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள், சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் புராணக் காட்சிகள் என அழகிய கலை நயத்துடன் கூடிய 200க்கும் மேற்பட்ட மரச் சிற்பங்கள் உள்ளன!
9அடி விட்டமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட இரும்புச் சக்கரங்கள், இரண்டு இரும்பு அச்சுகளில், தேரின் அடிப் பீடத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடைபெறும் தேரோட்டத்திற்கு ஒரு மாதம் முன்பு, மூங்கில் பனஞ்சப்பைகள் செருகி தேரின் மேல் பாகம் கட்டும் பணி நடைபெறும். பின் அதில் குதிரைகள், ரிஷப வாகனம், பாம்பு, துவாரபாலகர், பெரிய கத்தி, கேடயம், பூக்குடம், ராஜா, ராணி, கிழவன், கிழவி உள்ளிட்ட பொம்மைகள், அலங்காரத்தட்டிகள், கலசங்கள், சீலைகள் எல்லாம் கட்டப்படும். இப்பொழுது ஆழித்தேர் 350 டன் எடையும், 96 அடி உயரமும் கொண்டு பேரழகுடன் பிரம்மாண்டமாய் வண்ணமயமாய்க் காட்சியளிக்கும்!
இத்தேரில் கட்டப்படும் நான்கு குதிரை பொம்மைகளும் 32 அடி நீளம், 11அடி உயரத்துடன் தேரினை இழுத்துச் செல்வது போன்ற பாவனையில் இருக்கும்! மேலும் மூலவரான தியாகராஜ சுவாமியே உற்சவராகத் தேரில் அமர்ந்து நான்கு வீதிகளையும் வலம் வருவார்!
தாரை, தப்பட்டைகளும், அதிர்வெடிகளும் முழங்க "ஆரூரா!...தியாகேசா!'' என்ற பக்தி கோஷத்துடன் வீதி அதிர ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும்!
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களில் பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த இடம். பல நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரமே தமிழ்நாடு அரசு முத்திரையில் உள்ளது!
இக்கோயிலின் திருத்தேர் பழமையானது. கலைநயம் மிக்க பல மரச்சிற்பங்களும், ஒன்பது மரச்சக்கரங்களும், அலங்காரப் பதாகைகளும், உச்சியில் கும்ப கலசமும், பட்டுக்கொடி, ஒன்பது பெரிய வடமும் கொண்டு 1950க்கு முன் பிரம்மாண்டமாய் கோயிலைச் சுற்றி ரதம் வலம் வந்தது. அந்நாட்களில் கோயிலின் கோபுரமும், ரதத்தின் கொடியும், பத்து கி.மீ. தொலைவில் இருந்து பார்த்தாலும் தெரியும்.
அதன்பின் மரச்சக்கரங்கள் சேதமுற்றதால் 18 ஆண்டுகள் பெரிய தேர் ஓடாது இருந்தது. அதற்கு பதிலாக சிறிய மாற்றுத் தேர் பயன்படுத்தப்பட்டது.
1974இல் தேர் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் நடத்தப்பட்டபோது மேலடுக்கு சரிந்ததினால் தற்போது மேலடுக்குகள் குறைக்கப்பட்டு உயரம் குறைந்து விட்டது. மேலும் விசைத்தடை அமைப்பு கொண்ட இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டு இயந்திரங்களின் உதவியுடனே தேரோட்டம் நடத்தப்படுகிறது. அக்காலத்தில் பல நாட்கள் நடந்த தேரோட்டத் திருவிழா, இன்று 3 மணி நேரத்திற்குள் முடிந்துவிடுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் தேர்!
தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரான இதற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. கி.பி. 1505இல் வெள்ளோட்டம் விடப்பட்டது. அந்த ஆண்டு முதல் தற்போது வரை தேரோட்டம் ஆண்டுதோறும் ஆனி மாதம் தடைப்படாமல் நடைபெற்று வந்திருக்கிறது. மேலும் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்கள் தற்சமயம் இயந்திரங்களின் உதவியுடன் இயக்கப்படுகின்றது. ஆனால் நெல்லையப்பர் தேர் தொடங்கிய ஆண்டு முதல் முழுமையான மனித சக்தியாலேயே இழுக்கப்படுகிறது.
இத்தேரின் அடிப்பாகம் 450 டன் எடையுடன், 28ஷ்28 அளவுடன் சதுர வடிவில் உள்ளது. 4 பெரிய சக்கரங்கள் வெளிப்புறமாகவும், சிக்கலான சூழ்நிலையில் அவசரத்திற்கு உதவும் வகையில் 4 உள் சக்கரங்களும் கொண்டது. ஆரம்பத்தில் சக்கரங்களுக்கு இடையிலான அச்சு மரத்தினால் ஆனதாகவே இருந்தது. அது பழுதானதால் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்காட்லாந்தில் தயாரித்து இந்தியாவிற்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு அச்சுகள் பொருத்தப்பட்டன. அவையே இன்றும் தேரில் உள்ளது. 2004ஆம் ஆண்டு நான்கு மரச்சக்கரங்களும் இரும்புச் சக்கரங்களாக மாற்றப்பட்டன.
இதனைத் தவிர 150டன் எடையும் தனிச்சிறப்பு வாய்ந்த பல மிக அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சிற்பங்கள் கொண்ட அம்மன் தேரும் உள்ளது. மேலும் சுமார் 70 முதல் 80 டன் எடை கொண்ட (விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்) 3 சிறிய தேர்களும் இருக்கின்றன. 5 தேர்களுமே தேரோட்டத்தின் போது வீதி உலா வரும்.
பெரிய தேரிலும், அம்மன் தேரிலும் கலை நயமிக்க புராண நிகழ்வுகளை சித்தரிக்கும் நடன மாதர்கள், அல்லி ராணி, பவளக்கொடி, மகிஷாசுரமர்த்தினி,குறவன், குறத்தி, அர்ச்சுனன், ராமர், யானை, குதிரை உள்ளிட்ட மரச்சிற்பங்கள் கண்ணைக் கவரும்!
ஆனி மாதம் நடைபெறும் தேரோட்டத்திற்கு ஒரு மாதம் முன்பே தேர்களைச் சுத்தப்படுத்தி அலங்காரங்கள் செய்வார்கள்! தேரோட்டத்தின்போது தேர் நகர சிரமப்பட்டால் தேரின் பின் சக்கரங்களை பெரிய மரத்தடியினைக் கொண்டு உந்தித் தள்ளுவார்கள். மேலும் கனமான மரச்சறுக்கு கட்டைகளைப் பக்கவாட்டில் தேவைக்கேற்ப செருகி தேரை நிறுத்தவும், பக்கவாட்டில் திருப்பவும், பாதை விலகி விடாமல் தடுக்கவும் செய்வார்கள்.
தேரோட்டத்திற்கு முதல் நாள் இரவு, ஓட தயார் நிலையில் இருக்கும் தேர்களை, சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து பார்வையிடும் "தேர் கடாட்சம்'' என்ற சம்பிரதாய நிகழ்வு நடைபெறும்!
தேரோட்டம் அன்று காலை மந்தம், பாணி, சொம்பு, சங்கு, சின்னம் என்ற பஞ்ச வாத்தியங்கள் முழங்க பெருத்த ஆரவாரத்திற்கு இடையே "ஹரஹர மகாதேவா!'' என்ற பக்தி கோஷத்துடன் பல்லாயிரக் கணக்கான மக்கள் புடைசூழ தேர் ஆடி அசைந்து வரும் அழகு ஆனந்தம்தான்! வயது, பொருளாதாரம், சாதி, மத பேதமின்றி கூடி நிற்கும் மக்களைக் காண்பதும் பேரானந்தம்தான்!
தேர் சிறியதோ, பெரியதோ தேரோட்டம் எந்த ஆலயத்தில் நடந்தாலும் ஆனந்தம் கரைபுரண்டோட ஒற்றுமையாக மக்கள் கூடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். தேர்த்திருவிழாக்கள் நம் நாட்டின் கலைத்திறனையும், கலாசாரத்தையும் உலகறியப் பறை சாற்றுகின்றன!
தொகுப்பு: கே.பார்வதி,
திருநெல்வேலி டவுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.