

ராணியின் கிணறு என்பது மழைநீர் சேமிப்பதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய படி கிணறு.
மழை நீர் சேமிப்பும், படி கிணறும்.
நமக்கு நீரின் தேவையோ ஆண்டு முழுவதும் எல்லா நேரத்திலும் இருக்கிறது. ஆனால் மழையோ குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பெய்கிறது. அத்துடன் அதன் அளவும் இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளது. அதனால் மழை நீரை சேமித்து பாதுகாப்பாக வைப்பது பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
அதற்கான அறிவு பூர்வமான பல வழிமுறைகளைப் பின்பற்றி பயன் பெற்றுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்த இடத்திற்கு ஏற்ப பாரம்பரியமான மழைநீர் சேமிப்பு முறைகள் இருந்திருக்கின்றன.
அவ்வகையில் ஏரிகளும், குளங்களும் தென்னிந்தியாவின் பாரம்பரியமாகக் காணப்படும் முறைகள். அதே போல் வட இந்தியாவில் "படி கிணறுகள்'
(STEP WELLS) மூலம் மழைநீர் சேமிக்கப்படுகின்றன.
படி கிணறுகள் மழை நீரை பாதுகாப்பாக தேக்கி வைப்பதற்கானது. இவற்றை இன்னும் ராஜஸ்தான்,குஜராத், தில்லி, உள்ளிட்ட வட மாநிலங்களில் இப்போதும் பார்க்கலாம்.
இதற்காக மழைநீர் இயற்கையாக வடிந்து வரும் பாதையில் உள்ள பள்ளமான பகுதியில் பூமி மட்டத்திற்கு கீன் பள்ளம் தோண்டி அதனைச் சுற்றி சுவர்களைக் கட்டி நீரைத் தேக்கினர். மேலும் புழுதியும் குப்பையும் தண்ணீரை மாசுபடுத்தாமல் இருக்க நிலத்திற்கு மேலும் வேலிபோல் சுவர்களை எழுப்பினர். இதனால் நீர் ஆவியாவது குறைந்தது. மேலும் நிலத்திற்குள் செல்லும் நீரால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு முன்பே சிறந்த கட்டுமான அமைப்புடன் கூடிய இவ்வகை கிணறுகளைக் கட்டியுள்ளனர். சிறிதளவு மழை பெய்தாலும் உடன் கிணற்றில் விழுமளவிற்கு வடிகால் அமைப்புடன் இவை இருந்துள்ளது.
முன்காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய் ஜோத்பூரில் இத்தகைய கிணறுகள் 200க்கும் மேல் ஆங்காங்கே இருந்திருக்கின்றன.
இத்தகைய கிணறுகளில் "ராணியின் கிணறு' மிகவும் சிறப்பானது. படி கிணறுகளின் ராணியாகவே இன்றுவரை புகழப்படுகிறது.
ராணியின் கிணறு!
மனைவி மும்தாஜ் மீது கொண்ட அன்பினால் மனைவியின் நினைவாக மன்னர் ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹால் அனைவருக்கும் தெரிந்தது. அதேபோல் கணவன் மீது கொண்ட அன்பினால் மனைவி கட்டிய கலைநயத்துடன் கூடிய படிகிணறுதான் "ராணியின் கிணறு!'
இந்தக் கிணறு குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத்தில் சரஸ்வதி நதியின் கரையில் உள்ளது. இதனை 1050இல் சோலாங்கி அரசை நிறுவியவரும், மன்னர் மூலராஜனின் மகனுமாகிய முதலாம் பீமதேவனின் (1022-1063) மனைவியும் பட்டத்தரசியுமான உதயமதியும், மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து கட்டியுள்ளனர்.
இந்தக் கிணற்றை பற்றிய தகவல்கள் 1304இல் வாழ்ந்த சமணத்துறவி "மெருங்க சூரி' என்பவர் எழுதிய "பிரபந்த சிந்தாமணி' என்ற நூலில் காணப்படுகிறது. இக்கிணறு இடைப்பட்ட காலத்தில் சரஸ்வதி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மூழ்கி, வண்டல் மண் படிந்து தூர்ந்து போனது. 1980களில் தொல்லியல் துறையினர் இப்பகுதியைத் தோண்டியபோது, கிணறு பழைய அழகுடன், மெருகு குறையாமல் நல்ல நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இந்தக் கிணற்றுக்கு 2016இல் இந்தியன் சானிடேஷன் கான்ஃபரன்ஸ் (INDOSAN) இன் சுத்தமான சிற்பங்கள் நிறைந்த இடம் (CLEANEST ICONIC PLACE) என்ற விருது கிடைத்துள்ளது. மேலும் 2014ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டட அமைப்பு!
இக்கிணறு "மரு குர்ஜரா' (MARU GURJARA) கட்டிடக் கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. இது மேலே அகண்டும், கீழே போகப்போக குறுகிய அமைப்புடனும் இருக்கும். 64மீ நீளமும் 20மீ அகலமும் 27மீ ஆழமும் கொண்டது. படிக்கட்டுகளுடன் கூடிய கேலரி (GALLARY) போன்ற அமைப்பைக் கொண்டது. பல தூண்களுடன் கூடிய 7 அடுக்குகள் அமைந்தது! பக்க சுவர்கள் முழுவதும் 800க்கும் மேற்பட்ட அழகிய நேர்த்தியான சிற்பங்களில் அழகு படுத்தப்பட்டுள்ளது.
அடுக்கடுக்காகவும், படிப்படியாகவும் கல் பதித்து கலை நயத்துடன் கட்டப்பட்ட இதன் கட்டுமானம் மிகவும் சிறப்பானது.
தண்ணீர் எடுக்க வருபவர்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக படுக்கட்டுகளை அமைத்துள்ளனர். மேலும் சிறிது நேரம் இளைப்பாறவும், காலார நடக்கவும், மற்றவர்களுடன் அமர்ந்து உரையாடவும் வசதியாக தாழ்வாரங்கள் உள்ளன. மேலும் ஒரு பொழுதுபோக்கு பூங்கா போன்று உருவாக்கப்பட்டுள்ளது. நீர் தேங்கி உள்ளதால் கோடையிலும் குளுமையாக இருப்பது இதன் சிறப்பு!
கல் படிகளும், கல்லால் செய்யப்பட்டு விதானங்களும், ஓரே சீரான இடைவெளியில் தூண்கள் வைத்துக் கட்டப்பட்ட தாழ்வாரங்களும், ஜன்னல் போன்ற சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய சாளரங்களும், அலங்கார வளைவுகளும், இவற்றில் உள்ள கலைநயங்களும் காண்பவர் கண்களைக் கவர்பவை! இப்பொழுதும்கூட இக்கிணறுகளின் சில பகுதியில் மண் மூடியே உள்ளது!
இங்குள்ள பெரும்பாலான சிற்பங்கள் விஷ்ணுவின் தசாவதாரங்களைச் சித்தரிப்பவை! ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், கல்கி, வராஹி, மகிஷாசுரமர்த்தினி, காளி, நாக கன்னி, யோகினி, கெளதம புத்தர், சாதுக்கள், 16வகையான அலங்காரங்களுடன் கூடிய அப்சரஸ் எனப்படும் தேவமங்கைகள் எனப் பலவகையான சிற்பங்கள் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. நீர் மட்டத்தை ஒட்டி உள்ள ஆதிசேஷனில் பள்ளிக்கொண்ட விஷ்ணுவின் சிற்பம் குறிப்பிடத்தக்கது.
கடைசி படிக்கட்டுக்கு கீழே ஒரு சிறிய கதவும் அதனைத் தொடர்ந்து சுரங்கப்பாதையும் உள்ளது. 30கி.மீ. நீளம் உள்ள இச்சுரங்கப்பாதை பதான் அருகில் உள்ள (SIDHPUR) சித்பூர் நகரம் வரை நீள்கிறது. இது போர்க்காலத்தில் அரச குடும்பத்தினர் தப்பி வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.தற்போது இச்சுரங்கம் மண் மற்றும் கல் கொண்டு மூடப்பட்டுள்ளது.
சமதளத்தில் தொடங்கும் படிகளில் கீழே இறங்க ஆரம்பித்ததுமே குளிர்ந்த காற்று நம்மை வருடிச் செல்கிறது. எண்ணற்ற தெய்வ வடிவங்களுடன் கூடிய பக்கச் சுவர்கள் கீழே செல்கையில் படிப்படியாகக் குறுகிக்கொண்டே வருவது ஒரு கோயில் கோபுரத்தையை தலை கீழாகக் கட்டியது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது.
சொல்லில் அடங்கா அழகு கொண்ட பார்த்து பரவசப்பட வேண்டிய ஒரு பழமையான கலைப் பொக்கிஷங்கள் கொண்டதுதான் "ராணியின் கிணறு'...! இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் பலவற்றில் ஒன்றான இக்கிணறு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும் உள்ளது!
தொகுப்பு: கே.பார்வதி,
திருநெல்வேலி டவுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.