ராகவேந்திர ராவ் வெகுநாட்களாக வயிற்று வலி! அவரால் தாங்க முடியவில்லை! மருத்துவர் கூறியபடி மருந்துகளை உட்கொண்டார். என்றாலும் நோய் குணமடையவில்லை. இறைவனிடம் பக்தி மிகுந்த சமயக் குரவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். ராகவேந்திர ராவின் நோய் குணமாகவும், உடல் நலம் பெறவும் மனம் உருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அனைவரையும் அழைத்தார்.
அனைவரும் அவ்வாறே செய்யத் தொடங்கினர்.
அந்தக் கூட்டத்தில் ஒரு நாத்திகன் இருந்தான். சமயக் குரவர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் சிரிக்கத் தொடங்கினான்.
" வெறும் வார்த்தைகள் நோயிலிருந்து ஒருவனைக் காப்பாற்றுமா? வெறும் சொற்கள் மாற்றதை ஏற்படுத்துமா?'' என்று கூறிச் சிரித்தான்.
அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள்,...மூடன் ,....மூர்க்கன்,....நீங்கள்தான்'' எனச் சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் ""நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள்! இல்லையேல் உங்களைத் தாக்கவும் தயங்க மாட்டேன்'' என்று முறைதான்.
சமய குரு பதற்றமேயில்லாமல், " முட்டாள்....,மூடன்..., மூர்க்கன்...என்பதெல்லாம்கூட சொற்கள்தானே!....அவை எப்படி உங்களைத் தூண்ட முடிகிறதோ, அதே போலத்தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்'' என்றார்.
இதிலுள்ள உண்மையை அந்த நாத்திகன் உணர்ந்து கொண்டான். ராகவேந்திர ராவின் உடல் குணமடைய அவனும் வேண்டிக்கொண்டான்.
- மயிலை மாதவன்.