முத்திரை பதித்த முன்னோடிகள்! நீதியரசர் மு.மு.இஸ்மாயில்!

சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள்  பன்முக திறமை கொண்டவர்களாக விளங்கினர் .
முத்திரை பதித்த முன்னோடிகள்! நீதியரசர் மு.மு.இஸ்மாயில்!

சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகள்  பன்முக திறமை கொண்டவர்களாக விளங்கினர் . திரு பம்மல் சம்பந்த முதலியார், நீதிபதி ரங்க வடிவேலு மற்றும் சீனிவாச அய்யங்கார் போன்றோர்  நாடகத் துறைக்கு அருந்தொண்டு ஆற்றி உள்ளனர்.

நீதிபதி ஈ. கிருஷ்ண ஐயர் பரத நாட்டியத்தை மேம் படுத்தினார். நீதிபதிகள் டி . வி . சுப்பா ராவ் மற்றும் டி. எல் வெங்கட் ராமன் போன்றோர் கர்நாடக சங்கீதத்திற்கு புத்துயிர் ஊட்டினர்.

நீதிபதி  டி. ஜி. ஆராவமுதன் சென்னை அருங்காட்சியகத்தின் காப்பாளராக விளங்கினார். நீதிபதி  பி. வி. ராஜ மன்னார் சங்கீத்  நாடக அகாதமியின் தலைவராக விளங்கினார். நீதிபதி பி . என். அப்புசாமி அறிவியலை குழந்தைகள்  அறியும் வண்ணம் எளிய தமிழில் சிறுவர் இலக்கியமாக வழங்கினார். நீதிபதி  வி. கிருஷ்ணசாமி அய்யர் சென்னையில் சமஸ்கிருத கல்லூரியை தோற்றுவித்தார். நீதிபதி பி எஸ்.  சிவசாமி அய்யர் பெண்களுக்கென தனி கல்வி நிறுவனங்களை நிறுவினார். நீதிபதிகள்  பால் அப்பாசாமி,  வி.எல். எத்திராஜ் மற்றும் பஷீர் அஹமது சையது போன்றோர் கல்லூரிகளை தோற்றுவித்து பெரும் பங்கு ஆற்றி உள்ளனர்.

அந்த வகையில் நீதி அரசர் மு.மு. இஸ்மாயில் அவர்கள் மத ஒற்றுமைக்கு சான்றாக விளங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளார். பல்வேறு வழக்குகளில் நடுநிலைமை உடன் தீர்ப்பளித்தார் இந்த மாமனிதர்.

8.2.1921 அன்று நாகூரில்  பிறந்த இஸ்மாயில் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

சென்னை மாநில கல்லூரியில் கணிதம் பயின்ற பின்பு சென்னை சட்டக் கல்லூரியில்  சட்டக் கல்வியை 1945 ஆம் ஆண்டு முடித்தார். ஒரு   வழக்கறிஞராக தம் சேவையை தொடர்ந்தார்.1967 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக (additional judge) நியமிக்கப்பட்டார்.1967 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவரது நேர்மை மற்றும் நடுநிலைமை ஆகிய பண்புகளால் பல வழக்குகளில் சிறந்த தீர்ப்பை வழங்கி உள்ளார்.

6.11.1979 ஆம் ஆண்டு சென்னை  உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தேங்கி இருந்த பல வழக்குகளை விரைந்து முடித்தார. "தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்' என்பதை உணர்ந்த இவர் வழக்குகளை விரைவில்  முடிக்குமாறு வழக்குரைஞர்களுக்கு உத்தரவிட்டார். இவர்  வழங்கிய பல்வேறு தீர்ப்புகள்  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். 1980 ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக இருந்த பிரபுதாஸ் பட்வாரி பதவி விலகினார். எனவே 22.10.1980 முதல் 4.11.1980 வரை  திரு.இஸ்மாயி ல்  தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஒரு தீவிர இஸ்லாமியராக இருந்த போதும் பிற மதங்களை நேசித்தார். அனைவரையும் சமமாக நடத்தினார். சட்டம் தவிர தமிழ் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த பற்று உடையவராக விளங்கினார். அதிலும் கம்ப இராமாயணத்தை முழுவதும் கற்று அறிந்தார். இந்துக்கள் கூட இந்த இலக்கியத்தை இவர் அளவு ஆழ்ந்து வாசித்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே!

இஸ்லாமியராய் இருந்து கொண்டு கம்ப ராமாயணத்தை வாசிப்பது முறையா? என்ற கேள்வி எழுந்த போது "கம்ப இராமாயணத்தின் இலக்கிய நறுஞ்சுவைக்காக படித்தேன்!

எல்லா மதத்தை சேர்ந்த மக்களும் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும்!' என்று கூறினார்.

1981 ஆம் ஆண்டு இவர் கேரளா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆக மாற்றம் செய்யப்பட்டார்.  பல்வேறு வழக்குகள் தீர்ப்பு வேண்டி நிலுவையில் இருந்த சமயத்தில்,

இந்த  பணிமாற்றம் அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது. எனவே 8.7.1981 அன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தமிழகத்தில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளில் இவரது பங்களிப்பு இருந்து உள்ளது. இம்மாமனிதர் தனது 84 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் 17.1.2005 அன்று சென்னையில் காலமானார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்.

(1) இவர் தனது 9 வயதில் தாயையும், 13 வயதில் தந்தையையும் இழந்தார். இதனால் உறவினர்களால் வளர்க்கப்பட்டார்.

(2)  சட்ட கல்லூரியில்  தனக்கு பேராசிரியராய் இருந்த கே. சுவாமிநாதன் உடன் ஏற்பட்ட உறவால் இவருக்கு காந்தியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது இதனால் தீவிர காந்தியவாதி ஆக விளங்கினார்.

(3) இவர் வழக்குரைஞர் தொழிலை தொடங்குவதற்கு முன் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார்.

(4) கம்ப இராமாயணத்தின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக  சென்னையில் கம்பன் கழகத்தை  நிறுவ விரும்பினார். எனவே, தினமணியின் முன்னாள் ஆசிரியர் திரு ஏ. என் சிவராமன், கம்பன் அடிபொடி சா. கணேசன், பேராசிரியர் ஆ.சா. ஞான சம்பந்தன்,  சி. எம். அழகர் சாமி,  பழ.பழனியப்பன் ஆகிய சான்றோர்களின் துணையோடு சென்னை கம்பன் கழகத்தை உருவாக்கினார்.

(5) "அல்லாவுக்கு ஆயிரம் நாமங்கள்', "வள்ளல் களின் வள்ளல்', 'செவி நுகர் கனிகள்' போன்ற பல நூல்களை இவர் எழுதி உள்ளார்.

(6) "கம்ப  ராமாயண கலங்கரை விளக்கம்', "இயல் செல்வம்', "சேவா ரத்தினம்', "ராமானுஜர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1979 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக் கழகம் இவருக்கு "முனைவர்' பட்டம் வழங்கி கெளரவித்தது.1992ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு "கலை மாமணி' விருது வழங்கி சிறப்பித்தது.

தொகுப்பு: என். லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,

கடுவெளி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com