

சிவகங்கை மாவட்டம் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒன்று. 1985 இல் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் உருவாக்கப்பட்டது. 1997 இல் சிவகங்கை மாவட்டம் எனப் பெயர் பெற்றது.
4189 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தினை சுற்றிலும் திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் மதுரை மாவட்டங்கள் சூழ்ந்துள்ளன.
இந்தியாவில் மொத்தம் 640 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 250 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 மாவட்டங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அந்த ஆறில் சிவகங்கை மாவட்டமும் ஒன்று.
நிர்வாகத்திற்காக சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி என 7 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் சிவகங்கை, மற்றொரு பெரிய நகரம் காரைக்குடி. இதன் எல்லைக்குள் 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
வரலாற்றுத் தகவல்கள்
கீழடி தொல்லியல் களம்! -- வைகைக் கரையில் உள்ளது கீழடி கிராமம். இங்கு நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தய பழந்தமிழரின் பெருநகரம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இங்கு 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், யானைத் தந்தத்தால் ஆன பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணிகள், இரும்பு ஆயுதங்கள், எடைகற்கள், சதுரங்கக் காய்கள், சங்க கால நாணயங்கள் உள்ளிட்ட 5300 பொருட்கள் கிடைத்துள்ளன.
மேலும் கட்டிடங்களின் தரைத்தளங்கள், மதில்சுவர், கால்வாய்கள், பெரும் தொட்டிகள்...அவற்றிற்கு தண்ணீர் உள்ளே செல்வதற்கு மற்றும் வெளியே செல்வதற்கான அமைப்புகளும், சுட்ட செங்கல் கொண்டு கட்டப்பட்ட வட்ட வடிவ உறைகிணறுகள், மூடிய மற்றும் திறந்த வடிகால்கள், சுடுமண் குழாய்கள் போன்றவை தமிழகத்தில் முதன்முறையாக அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நன்கு வளர்ச்சியடைந்த, மேன்மையான வாழ்க்கை முறை கொண்ட நகர்ப்புற அமைப்போடு கூடிய குடியிருப்புப் பகுதியாக இப்பகுதி இருந்துள்ளது தெரிய வருகிறது.
110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழடி தொல்லியல் மேட்டில், இதுவரை 50 சென்ட் பரப்பில் மட்டுமே அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிடைத்த பொருட்களை எல்லாம் இப்பகுதியிலேயே அருங்காட்சியகம் அமைத்து காட்சிக்கு வைக்க முயற்சி செய்கிறார்கள்.
சிவகங்கைச் சீமை
17 ஆம் நூற்றாண்டில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டதாகவே சிவகங்கை இருந்தது. மன்னர் விஜயரகுநாத சேதுபதி, தன் மகளை சசிவர்ணத்தேவருக்கு மணமுடித்துக் கொடுத்தபோது, சிவகங்கை உள்ளிட்ட சில பகுதிகளை சீதனமாக அளித்தார். வரி வசூலிக்கும் உரிமை இருந்தபோதும், ராமநாதபுரத்திற்கு கட்டுப்பட்ட பகுதியாக சிவகங்கை இருந்தது.
சிறிது காலத்திற்குப் பின் ராமநாதபுரம் சமஸ்தானத்தில் வாரிசு உரிமைப் போர் வந்தபோது, பல மாற்றங்கள் ஏற்பட்டு, சிவகங்கை சுதந்திரமான தனி சமஸ்தானமாக மாறியது. சசிவர்ணத்தேவரே முதல் மன்னரானார்.
இவரது மகன் முத்துவடுகத்தேவர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாரை மணந்தார். இவரது ஆட்சியில் டச்சுக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை வழங்கினார். இதனை விரும்பாத பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், ஆற்காடு நவாபுடன் இணைந்து 1772 இல் சிவகங்கை மீது படையெடுத்தனர். போரில் வெற்றியும் பெற்றனர். முத்து வடுகத் தேவர் கொல்லப்பட்டார்.
இதனால் வேலுநாôச்சியார் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் ஆதரவில் மறைந்து வாழ்ந்தார். அங்கு மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆதரவு கிடைத்தது.
பின் 1780 இல் ஹைதர் அலியின் படை உதவியுடன் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றியும் பெற்றார். சிவகங்கைச் சீமையின் மூன்றாவது அரசியாகப் பொறுப்பும் ஏற்றார்.
மீண்டும் 1790 இல் சிவகங்கை பிரிட்டிஷாரின் வசம் சென்றது. அவர்களுக்குக் கப்பம் கட்டும் சமஸ்தானமானது.
1801 இல் பிரிட்டிஷார் மன்னராட்சி முறையை ஒழித்து ஜமீன்தார் முறையை கொண்டு வந்தனர். கெளரிவல்லப பெரிய உடைய தேவர் முதல் ஜமீன்தார் ஆனார்.
1892 இல் ஜமீன்தார் முறையும் ஒழிக்கப்பட்டது. சென்னை மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்கள் உருவானது. இதனால் சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியானது. அதன்பின் 1985 இல் தான் சிவகங்கை நகரத்தை தலைநகரமாகக் கொண்டு தனி மாவட்டமானது.
செட்டி நாடும் நகரத்தார் சமூகமும்
சிவகங்கை மாவட்டத்தின் 56 ஊர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் 20 ஊர்களும் அடங்கிய பகுதியே செட்டிநாடு என்றழைக்கப்படுகிறது. இங்கு நாட்டுக் கோட்டை செட்டியார் இன மக்கள் அதிகம் வசித்ததால் செட்டி நாடு எனப் பெயர் பெற்றது.
சோழ நாட்டின் காவிரிப் பூம்பட்டினமே இச்சமூகத்தின் பூர்வீகம் ஆகும். இம்மக்கள் கலாச்சாரம், பண்பாடு, என பல விதங்களிலும் சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். வணிகமும், நிதி சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வந்தனர். திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப பர்மா, இந்தோனேஷியா, போன்ற நாடுகளிலும் இவர்கள் வியாபாரம் செய்து வந்தனர்.
நீர் வளம்
வைகை ஆறு
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி கம்பம், பள்ளத்தாக்கு வழியாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்கள் வழியாக பாக் நீரிணையில் கலக்கிறது. இந்நதிக்கரையில்தான் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் உள்ளது. இம்மாவட்டத்தில் பழையனூர் மற்றும் கானூர் கால்வாய் வழியாக நதிநீர் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
பாம்பாறு
புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருங்குணாறு பகுதியில் தோன்றி 50 கி.மீ. பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது.
இவற்றைத் தவிர தேனாறு, மேல் குண்டாறு, சாறுகனியாறு என பருவ கால சிற்றாறுகளும் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
விவசாயமும், பிற பிரதானதொழில்களும்
72 சதவீதம் மக்கள் விவசாயமே செய்து வருகின்றனர். நெல், கரும்பு, வேர்க்கடலை, பருப்பு வகைகள், மற்றும் சோளம், தினை போன்ற தானியங்களும் இங்கு அதிகம் விளைகின்றன.
புளி, மிளகாய், மஞ்சள் போன்ற மசாலா பொருட்கள் உற்பத்தியில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் "நியூ ஸ்பைசிஸ் பார்க்' என்ற தொழில் பூங்காவை அரசு அமைத்துள்ளது.
சக்தி சர்க்கரை ஆலை, விடியோகான் கம்பெனி, காளீஸ்வரர் நூற்பாலை போன்ற தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன,.
கைத்தறி நெசவு, செங்கல் தயாரித்தல், தென்னை நார் கயிறு திரித்தல் என பல தொழில்களும் நடைபெறுகின்றன.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஆலயம்
திருப்பத்தூர் - குன்றங்குடி சாலையில் உள்ள பிள்ளையார்பட்டி சிற்றூரில் இவ்வாலயம் உள்ளது. இங்குள்ள சிறிய குன்றின் அடிவாரத்தில்தான் இந்த ஆலயம் குடைவரை கோயிலாக அமைந்துள்ளது.
இந்த கோயிலில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு உள்ளது.
இந்த ஆலயம் இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒரு பகுதி முற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைகோயில். மற்றொரு பகுதி பிற்காலத்தில் (1091 - 1238) பாறைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கற்றளியாக இருக்கிறது. குடைவரை கோயிலில் 14 கற்சிற்பங்கள் உள்ளன. மேலும் கோயிலுக்குள் அதே கல்லிலேயே செதுக்கப்பட்ட 6 அடி உயரமான உயர கம்பீரமான கற்பக விநாயகர் சிலை உள்ளது.
விநாயகர் சதுர்த்தியன்று இங்கு நிவேதனம் செய்யப்படும் கொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, நெய் 1 படி எலக்காய் 100 கிராம், வெல்லம் 40 கிலோ என அனைத்தையும் சேர்த்து ஒரே கலவையாக ஆக்கி, ஒரு பிரமாண்டமான கொழுக்கட்டையாக செய்கிறார்கள்.
திருக்கோளங்குடி கோயில்கள்
திருக்கோளங்குடியில் உள்ள குன்றில் மூன்று பழமையான ஆலயங்கள் உள்ளன. குன்றின் அடிவாரத்தில் கல்கட்டுமானத்தில் சிவன் கோயில் ஒன்று உள்ளது.
அடிவாரத்திலிருந்து 125 படிகள் ஏறிச் சென்றால் குன்றின் உச்சியில் இருக்கும் முருகன், மற்றும் விநாயகர் கோயில்கள் குடைவரைக் கோயில்களாக உள்ளன. கலை நுணுக்கத்துடன் கூடிய பல சிற்பங்கள் உள்ள மண்டபங்கள் இருக்கின்றன. இவ்வாலயங்கள் 1300 ஆண்டுகள் பழமையானது! குன்றின் மத்தியப் பகுதியில் குடைவரை சிவன் கோயிலும் உள்ளது.
குன்றங்குடி - முருகன் கோயில்
பிள்ளையார்பட்டிக்கு 5 கி.மீ. தூரத்தில் உள்ளது குன்றங்குடி. இங்குள்ள 40 மீ. உயரமும் 6 3/4 ஏக்கர் பரப்பளவும் கொண்ட ஒரு குன்றின் உச்சியில்தான் இம்முருகன் கோயில் உள்ளது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். அழகான புடைப்புச் சிற்பங்கள் கொண்டது.
பிரான்மலை - கொடுங்குன்றநாதர் ஆலயம்
அக்காலத்தில் திருக்கொடுங்குன்றம் என அழைக்கப்பட்ட ஊர்தான் இன்று பிரான்மலை எனப்படுகிறது. முல்லைக்குத் தேர் கொடுத்த "பாரி' மன்னன் ஆண்ட பறம்ப நாடு இதுதான். மலையின் அடிவாரம், மத்தியப் பகுதி, உச்சி என மூன்று நிலைகளிலும் 3 கோயில்கள் உள்ளன. அடிவாரத்தில்தான் பாடல் பெற்ற தலமான கொடுங்குன்ற நாதர் கோயில் இருக்கிறது. மலை உச்சியில் சிற்ப வேலைப்பாடுகள் கூடிய குடைவரை கோயிலாக மங்கைபாகர் கோயில் இருக்கிறது.
இடைக்காட்டூர் தேவாலயம்
பண்டை ஜெர்மானிய கட்டிடக்கலை பாணியில் பிரான்ஸில் உள்ள "ரீம்சு' தேவாலயம் போன்று அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அனைத்துச் சிற்பங்களும் பிரான்ஸிலிருந்து கொண்டு வரப்பட்டவை. இத்தேவாலயத்தில் இயேசு தன் இதயத்தைத் திறந்து காட்டிய நிலையில் இருப்பார்.
மேலும் சில கோயில்கள்
திருக்கோஷ்டியூர் செளமியநாராயணன் ஆலயம், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ஆலயம், திருப்பத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் ஆலயம், திருப்புவனம் புவனேஸ்வரர் ஆலயம், பிரமனூர் கைலாசநாதர் ஆலயம், மடப்புரம் பத்திரகாளி அம்மன் ஆலயம், கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல புகழ் பெற்ற பழமையான கோயில்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.