அரங்கம்: தங்க வளையல்!

துளசி ஒன்பதாம் வகுப்பு மாணவி, ஏழைக் குடும்பம். அவளைப் பார்க்க அவளுடைய பள்ளித் தோழி பொற்கொடி வருகிறாள்.
அரங்கம்: தங்க வளையல்!


காட்சி - 1   

இடம் - துளசி வீடு,   மாந்தர் - துளசி, 
துளசியின் தாய் வடிவு, பொற்கொடி. 

(துளசி ஒன்பதாம் வகுப்பு மாணவி, ஏழைக் குடும்பம். அவளைப் பார்க்க அவளுடைய பள்ளித் தோழி பொற்கொடி வருகிறாள்)
பொற்கொடி: துளசி, நான் போனவாரம் நம்ம தமிழ்ச்செல்வி வீட்டுக்குப் போனேன்....அவ அவங்க அப்பா அம்மாவிடம் உன்னைப் பற்றி எவ்வளவு உயர்வா பேசினா தெரியுமா,....துளசி நல்லா படிக்கிறா....ஆனா, வசதி
யில்லே.....அவளுடைய படிப்புக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நாம் செய்யணும்னு சொன்னா....அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க....அதனால நீ படிப்பில கவனம் செலுத்து....மற்றதை அவங்க பார்த்துக்குவாங்க...
(அதைக் கேட்டு துளசி மகிழ்ந்தாள். பொற்கொடி பேசியது, உள்ளே அறையில் படுத்திருந்த வடிவின் காதிலும் விழுகிறது.)

காட்சி - 2   

இடம் - பொற்கொடி வீடு,....
மாந்தர் - பொற்கொடி, துளசி.

(துளசி பொற்கொடி வீட்டுக்குப் போகிறாள்)
பொற்கொடி: துளசி, குறிஞ்சி நகர்ல இருக்கிற என் உறவுப் பெண் வசந்தா காலையிலே இங்க வந்தா....அவ சொன்ன செய்தியைக் கேட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு....
துளசி: (கவலையோடு) என்ன செய்தி?
பொற்கொடி: நம்ம தமிழ்ச்செல்வி அம்மாவோட ரெண்டு தங்க வளையலைக் காணோமாம்!.....ரெண்டு பவுன் 
மதிப்பாம்!....
(துளசி வருந்துகிறாள்) 
துளசி: அவங்க ரொம்ப நல்லவங்க....யார் என்ன உதவின்னு வந்தாலும் கொடுத்து அதிலே மகிழ்ச்சி அடைவாங்க.....அவங்களோட பொருளை யார் எடுத்தாலும் அவங்க நல்லா இருக்க முடியாது. 
பொற்கொடி: வீட்டில் ஒரு இடம் விடாமத் தேடிட்டாங்க....கிடைக்கலே...
துளசி: எந்தச் சூழ்நிலை வந்தாலும் பதற்றம் இல்லாம நிதானத்தைக் கடைப்பிடிப்பாங்க...அவங்களுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்....பார்க்கலாம்...

காட்சி - 3   

இடம் - துளசியின் வீடு,   மாந்தர் - துளசி, வடிவு.

துளசி: (தாயிடம்) என்னம்மா இது!....கொடுமையா இருக்கு!....
வடிவு: என்ன?...
துளசி: நம்ம தமிழ்ச்செல்வி வீட்டிலே ரெண்டு தங்க வளையல் காணோமாம்....நீ அங்கேதானே வேலை பார்க்கிறே....உனக்கு விஷயம் தெரியாதா?...
வடிவு: எனக்குத் தெரியாதே....அவங்க சொந்தக்காரங்க வந்திருக்காங்க.....பிள்ளைங்களுக்கு எட்டும் இடத்தில் வெச்சிருப்பாங்க....பிள்ளைங்க விளையாடறதுக்கு எடுத்து எங்கேயாவது போட்டிருப்பாங்க....
துளசி: மூணு நாளைக்கு முன்னால தமிழ்ச்செல்வியைப் பார்க்க அவங்க அம்மா நாங்க படிக்கிற பள்ளிக்கு வந்தாங்க....எங்க டீச்சர் பரிமளாவைப் பார்த்து என்னைப் பத்தியும் விசாரிச்சாங்க....துளசியும் என்னோட இன்னொரு பொண்ணு.....அவளை நல்லாப் பார்த்துக்குங்க.... அவளுக்கு எது தேவைன்னாலும் 
சொல்லுங்க....உடனே செய்யறேன்னு சொன்னாங்க....
 (வடிவு அமைதியாக இருக்கிறாள்) ...என்னம்மா எதுவுமே பேசமாட்டேங்கிறே....அவங்க எவ்வளவு நல்லவங்க....அவங்க நிம்மதி கெடலாமா....
வடிவு: எனக்கு உடம்பு சரியில்லே....
துளசி: (அம்மாவின் உடலைத் தொட்டுப் பார்க்கிறாள்...)...காய்ச்சல் எதுவும் இல்லே....உடம்பு அசதியா இருந்தா வீட்டிலே இரும்மா.... நான் தமிழ்ச்செல்வி வீட்டுக்குப் போயிட்டு வர்றேன்....நீ வேலைக்குப் போகலே ,...தகவலும் சொல்லலே....விருந்தாளி வந்திருக்கிற நேரத்திலே உதவி தேவைப்படும்....நான் வேலை செஞ்சு கொடுத்திட்டு வர்றேன்...
வடிவு: வேண்டாம்.... நீ படிக்கிற வேலையைப் பாரு....அவங்களே பார்த்துப்பாங்க.....
(துளசி ஒன்றும் புரியாமல் விழிக்கிறாள்)

காட்சி 4   

இடம் - தமிழ்ச்செல்வி வீடு,   மாந்தர் - தமிழ்ச்செல்வி, தாய் கற்பகம், தந்தை மணிமாறன். 

கற்பகம்: வடிவு மூணு நாளா வேலைக்கு வரலே....எந்தத் தகவலும் சொல்லலே....வளையலைப் பல தடவை தேடிப் பார்த்திட்டேன்....சொந்தக்காரங்க யாரும் எடுக்க வழியே இல்லை....
மணிமாறன்: எனக்கு வடிவுமேலேதான் சந்தேகமா இருக்கு....நம்ம குறிஞ்சி நகர் காவல் நிலையத்திலே ஒரு புகார் குடுக்கறேன்... 
தமிழ்ச்செல்வி: (ஓடி வந்து...)  வேண்டாம்ப்பா....சந்தேகத்தை வெச்சு ப் புகார் கொடுக்க வேண்டாம்!....
துளசி ரொம்ப கஷ்டப்படுவா....அழுவா....அவ மனசு பாதிக்கும்!....
மணிமாறன்: சரிம்மா....இன்னும் ஒரு நாள் பொறுத்திருக்கலாம்....
தமிழ்ச்செல்வி: துளசி ரொம்ப நல்லவ....அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது....குணத்திலே தங்கம்....
அவளுக்கு எல்லாம் நல்லதாவே நடக்க நான் கடவுளை வேண்டிக்கிறேன்....

காட்சி - 5    

இடம் - தமிழ்ச்செல்வி வீடு,    மாந்தர் - தமிழ்ச்செல்வி, மணிமாறன், கற்பகம், துளசி, வடிவு.

(துளசி வருகிறாள்....பின்னால் 
தயங்கியவாறு வடிவு வருகிறான்.)
தமிழ்ச்செல்வி: வா...துளசி!... (அவளுடைய கண்கள் கலங்கியிருப்பதைப் பார்க்கிறாள்)....ஏன்  எதுக்குக் கண் கலங்கறே?....
துளசி: (பையிலிருந்து இரண்டு தங்க வளையல்களை எடுத்துக் கற்பகத்திடம் தருகிறாள்.)
துளசி: அம்மா....என்னை மன்னிச்சுடுங்கம்மா....
கற்பகம்: ஏன்....நீ என்ன செஞ்சே?....
(வடிவு கற்பகத்தின் கால்களில் விழுகிறாள்...அழுகிறாள்...)
துளசி: நல்லாப் பழகின இடத்திலே அவசரப்பட்டு எங்க அம்மா இந்தத் தப்பைச் செஞ்சிட்டாங்க...
கற்பகம்: (வடிவிடம்) உனக்கு என்ன உதவின்னாலும் செய்யறோம்னு சொல்லியிருக்கேன்....இருந்தும் ஏன் இப்படி நடந்துக்கிட்டே....
(அவள் அமைதியாக இருக்கிறாள்)
துளசி: ரெண்டு நாளா எனக்கும் அதே கேள்விதான்...எங்க தெருவிலே எல்லோரும் கலர் டி.வி. வெச்சிருக்காங்க....எங்க வீட்டிலே கறுப்பு வெள்ளைதான்....  கலர் டி.வி. வேணும்னு நான் கேட்கவே இல்லே....அதை வாங்கத்தான் இதை எடுத்தாங்களாம்....
மணிமாறன்: எங்களிடம் சொல்லியிருந்தா நாங்களே வாங்கிக் கொடுத்திருப்போமே....மாதாமாதம் உன்னால முடிஞ்ச தொகையை உன் சம்பளத்திலே கழிச்சிட்டு வருவோமே....
துளசி: எங்க அம்மாவோட பேராசை....அதனால அவங்க மேல நீங்க வெச்சிருந்த நம்பிக்கை பாழாகும்னு தெரியலே...
மணிமாறன்: இந்தச் சின்னவயசிலே தெளிவா இருக்கியே...
தமிழ்ச்செல்வி: ஆமாம்ப்பா,....துளசி கருத்தான பொண்ணுப்பா,.... 
(மகளின் பண்பு தனக்கு இல்லையே என வடிவு வருந்துகிறாள்...)
வடிவு: நீங்க காவல்துறையிலே புகார் கொடுக்கலே..... கொடுத்திருந்தா எனக்குப் பாதிப்பு.....என் மகளோட எதிர்காலமும் வீணாகும்.....அதை இப்போதான் நான் உணர்றேன்....என்னை மன்னிச்சதே போதும்.....எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு....நான் வேலையை விட்டு நிற்கிறேன்....
கற்பகம்: வேலை செய்யற இடத்திலே பொய் 
கூடாது....திருட்டு கூடாது....உன்னை நம்பி எத்தனை நாள் வீட்டுச் சாவியைக் கொடுத்திட்டு வெளியே போயிருக்கோம்.....பொன் முட்டை இடற வாத்தை அறுத்துப் பார்த்த பேராசைக்காரன் மாதிரி...நம்பிக்கை என்ற நல்ல வாத்தை அறுக்கலாமா?
வடிவு: டி.வி. ஆசை என் கண்ணை மறைச்சிடுச்சு....எது நிரந்தரம்கறதை மறந்திட்டேன்....எங்களுக்கு வாழ்வளிக்கிற உங்க நிம்மதிக்கு இடைஞ்சலா இனிமே எதுவும் செய்ய மாட்டேன்....
துளசி: (கற்பகத்திடம்) அம்மா,....உங்க நம்பிக்கையைக் காப்பாத்துவோம்....கவலைப்படாதீங்க....
கற்பகம்: வடிவு, வழக்கம்போல வேலைக்கு வரலாம்....அனுப்பு!

(தமிழ்ச்செல்வியின் உள்ளம் மகிழ்கிறது....துளசியைக் கனிவோடு பார்க்கிறாள்)

திரை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com