சுதந்திர தினக் கவிதைகள்!

இதம் தரும் வாழ்வை இன்று நாம் காண சுதந்திரம் வந்ததுவே!
சுதந்திர தினக் கவிதைகள்!
Published on
Updated on
1 min read

சுதந்திரம் வந்ததுவே!

இதம் தரும் வாழ்வை 
இன்று நாம் காண 
சுதந்திரம் வந்ததுவே!
மதம் பலவோடு
மலர்ச்சியும் ஓங்க 
சுதந்திரம் வந்ததுவே!
இமையென நம்மைக் 
காப்பதற்காக 
சுதந்திரம் வந்ததுவே!
இமயமும் குமரியும் 
இணைந்திடும் வண்ணம் 
சுதந்திரம் வந்ததுவே!
படைபலத்தோடு 
பாரதம் மிளிர்ந்திட 
சுதந்திரம் வந்ததுவே!
மடை திறந்தாற்போல்
மனம் நிதம் மகிழ
சுதந்திரம் வந்ததுவே!
பரந்த வானிலே
தடங்களை வகுக்க 
சுதந்திரம் வந்ததுவே!
சிறந்த நம்கொடி
சிலிர்ப்புடன் பறந்திட 
சுதந்திரம் வந்ததுவே!

- செங்கை ரயிலடியான்

சுந்திரம்! சுதந்திரம்! சுதந்திரம்!

எந்தக் கருத்தைச் சொல்லவும்
எந்தத் தொழிலைச் செய்யவும்
எந்தப் பயமும் இன்றியே 
சொந்த நாட்டில் வாழவும்  ---(சுதந்திரம்....)
இந்த நாட்டில் வாழ்ந்திடும் 
அனைவருமே ஒர் இனம்!
இந்த நாட்டில் எவருமே 
எவர்க்கும் அடிமை இல்லையே! ---(சுதந்திரம்...)
நதிகளெல்லாம் சேர்ந்திடும் 
இறுதியாகக் கடலிலே!
மதங்களெல்லாம் சேர்ந்திடும்
இடத்தில் தேவன் ஒருவரே! --- (சுதந்திரம்)
மத நல் இணக்கம் கொண்டு  
மனிதம் போற்றி வாழுவோம்!
ஒருவருக் கொருவர் வாழ்விலே
உதவி செய்து மகிழ்வோமே! ---(சுதந்திரம்...)

- புலேந்திரன்

விடுதலையைக் கொண்டாடுவோம்!

அடிமை வாழ்வில் இருந்து மீள
அண்ணல் காந்தி தலைமையில் 
கொடியை ஏந்தி மக்கள் உரிமைக் 
குரலை உயர்த்தி முழங்கினர்!
சகிப்புக் குணமும், துணிவும், அறிவும்
சரித்திரத்தை மாற்றின!
அஹிம்சை முன்பு ஆயுதங்கள் 
அனைத்தும் தோற்றுப் போயின!
தூய்மை கொண்ட உள்ளத்தோடு
துன்பம் எல்லாம் தாங்கியே 
வாய்மை, நேர்மை, வழியில் நின்று 
வாங்கித் தந்தார் விடுதலை!
நாட்டிற்காகத் தியாகம் செய்த 
நல்லோர் தம்மைப் போற்றுவோம்!
கோட்டை தொடங்கி, வீடு தோறும் 
கொடியை ஏற்றி மகிழுவோம்!
பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் 
பேணிக்காக்கும் பாடத்தைக் 
கற்றுக் கொடுத்து இளைஞர் தம்மைக் 
கடமை ஆற்றச் செய்யுவோம்!
நாட்டை, மொழியை உயிரைப் போன்று 
நாளும் எண்ணிப் பார்ப்பதே
காட்டும் நன்றி...விழாக்கள் மூலம் 
கருத்தில் கொண்டு வாழுவோம்!

- அ.கருப்பையா

நடுநிலை நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடு
பல்கலை மிகுந்த இந்திய நாடு
சாதிகள் நிறைந்த சமத்துவ நாடு
சகோதர நட்புள நடுநிலை நாடு!
நீதி நேர்மை கொண்ட நாடு
நீண்ட சரித்திரம் படைத்த நாடு!
பண்பா டுடைய பண்டைய நாடு
பாரில் இதுபோல் உண்டா சொல்லு!
மண்ணில் வளரும் சந்தன மரம்போல்
மக்கள் வாழும் மானுட நாடு!
சுதந்திரம் பெற்றுத் தந்தவர் அண்ணல் 
உத்தமர்  காந்தியை வணங்குவோம்!
இதம் தரும் நமது விடுதலை நாளில் 
தேசியக் கொடியை ஏற்றுவோம்!

- அழகுதாசன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com