குரு பக்தி!

ஒரு காட்டில் ரிஷி ஒருவர் குடில் அமைத்துக் கொண்டு ஜபத்திலும், யாகத்திலும், பூஜைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
குரு பக்தி!

ஒரு காட்டில் ரிஷி ஒருவர் குடில் அமைத்துக் கொண்டு ஜபத்திலும், யாகத்திலும், பூஜைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். குடிலின் அருகே ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது. குடிலுக்கு மறுகரையிலிருந்த ஒரு பெண்மணி ரிஷியிடம் மிகுந்த பக்தி பூண்டிருந்தாள். பூஜை முடிவில் நிவேதனம் செய்வதற்காக தினமும் அவருக்கு பசும்பாலை எடுத்துக்கொண்டு வருவாள். ஆற்றோரம் இருக்கும் மலர்களையும் அவள் ஒரு கூடையில் பறித்து வருவாள். ஆற்றில் சிறிதளவே தண்ணீர் இருந்ததால் அவளால் எளிதாக ஆற்றைக் கடக்க முடிந்தது. தினமும் இதை ஒரு பாக்கியமாகக் கருதி அவள் பக்தியுடன் செய்துவந்தாள். இந்தக் காரியத்தால் அவளுக்கு மனநிறைவும், நிம்மதியும் ஏற்பட்டது. 
ஒரு நாள் கனத்த மழை பெய்தது!....ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. பசுவிடமிருந்து கறந்த பாலையும், பக்தியுடன் பறித்த புஷ்பங்களையும் எவ்வாறு ரிஷியிடம் சேர்ப்பது என்று அவளுக்குப் புரியவில்லை. மிகுந்த பக்தியுடன் ரிஷியை நினைத்தாள். கண்களை மூடி ரிஷியின் உருவத்தைத் தியானம் செய்தாள். அவரிடம் சரணடைந்தாள். தனக்கு ஆற்றைக் கடந்து வர உதவி செய்யும்படி ரிஷியிடம் வேண்டிக் கொண்டாள். 
ஆற்றின் அக்கரையிலிருந்த ரிஷி தனக்குள், "இந்தப் பெண் எப்படி இன்று வருவாள்?...ஆற்றில் இப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறதே....பூஜைக்கு பஷ்பங்களும், பாலும் இன்று வருமா?' என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். 
அப்போது அந்தப்பெண் மெல்ல பால்குவளையுடன் ஆற்றில் இறங்கினாள்! என்ன ஆச்சரியம்! ஆறு வழிவிட்டது! சரியான நேரத்திற்கு பாலும் புஷ்பங்களும் ரிஷியைச் சென்று அடைந்தன. 
ரிஷிக்கு ஆச்சரியம்..... 
""எப்படி இது சாத்தியமாயிற்று? ஆற்றில் இவ்வளவு நீர் பெருக்கு இருக்கிறதே?''
""உங்களை பக்தியோட நினைச்சேன்....பாலும், புஷ்பமும் உங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க வழி செய்ய உங்ககிட்டேயே வேண்டிக்கிட்டேன்....எல்லாம் உங்க அருள்தான் சாமி'' 
தனக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதா என்று ரிஷி யோசனை செய்தார். இத்தனை நாள் பூஜை புனஸ்காரங்கள், ஜப, ஹோமங்கள் செய்த பலனாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டார். சற்றே கர்வம் தலைக்கேறியது. தன் சக்தியைப் பரிசோதிக்க ஆற்றுக்குச் சென்றார். 
ஆற்றில் வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. ரிஷி காலை ஆற்றில் வைத்தார். கால் தண்ணீருக்குள் சென்றது. இரண்டாவது அடியில் வெள்ளம் அவரை இழுத்தது. விழுந்துவிட்டார். பக்கத்தில் சாய்ந்திருந்த ஒரு மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு கரையேறினார். உடலும் உடையும் ஈரமாகித் தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.
கடவுளிடம், ""இதென்ன ஆச்சரியமாயிருக்கிறது?....என்னை பக்தியுடன் நினைத்த பெண்மணிக்கு வழிவிட்ட ஆறு எனக்கு வழிவிட ஏன் மறுக்கிறது?'' என்று சத்தமாகக் கேட்டார். 
அப்போது ஒரு தேவதை, "" உனக்கு இது கூடப் புரியவில்லையா? அவள் அவளது குருவான உன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருந்தாள். அது அவளுக்குப் பயனளித்தது. நீ உன் குருவை மறந்து விட்டாய்!....உனக்கே சக்தியிருப்பதாய் நினைத்துக் கொண்டாய்...அதன் விளைவுதான் இது!'' என்று கூறியது.

(நம்பிக்கையின் சக்தி அளவிடமுடியாதது.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com