அரங்கம்: திரையில் ஓர் ஓவியம்!

(இரமணன், சுகுமார் படிக்கும் பள்ளியின் மாணவன் என்று தெரிந்ததும் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான்)....நானும் ஆறாம் வகுப்பிலேயிருந்து வள்ளலார் பள்ளியிலேதான் படிக்கிறேன்....
அரங்கம்: திரையில் ஓர் ஓவியம்!


காட்சி - 1 
 
இடம் - பூங்கா,   மாந்தர் - இரமணன், சுகுமார்.
(இருவரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள்)

சுகுமார்: (இரமணன், சுகுமார் படிக்கும் பள்ளியின் மாணவன் என்று தெரிந்ததும் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறான்)....நானும் ஆறாம் வகுப்பிலேயிருந்து வள்ளலார் பள்ளியிலேதான் படிக்கிறேன்....
இரமணன்: இது வரைக்கும் உன்னைப் பார்க்கிற சூழ்நிலை வரலே.....நான் இந்தப் பள்ளியிலே சேர்ந்து நாலு மாசம்தான் ஆகுது....
சுகுமார்: எனக்கு ஓவியம்னா ரொம்பப் பிடிக்கும்....ஆனா சுமாராத்தான் வரைவேன்.....இப்போ அந்த மரத்திலே இருக்கிற ஒரு குருவியை வரைஞ்சேன்.....ஆனா பார்த்தா காகம் மாதிரி இருக்குது....
இரமணன்: அதனாலென்ன...."சித்திரமும் கைப்பழக்கம்' னு சொல்லுவாங்க....ஆர்வத்தோடு அன்றாடம் வரைய, வரைய அதிலே நல்லா தேர்ச்சி வந்திடும்.....அதிலே அனுபவம் உள்ளவங்ககிட்டே வழிகாட்டல் கிடைச்சா ரொம்ப நல்லது....
சுகுமார்: எங்க தெருவிலே மணியரசன்னு ஓவிய ஆசிரியர் ஒருத்தர் இருந்தார்.....ஒரு நாள் இந்தப் பூங்காவிலே குழந்தைகளுக்குப் படம் வரைஞ்சு காண்பிச்சார்....வரைய ஆசையா இருக்குன்னு சொன்னேன்....வீட்டிலே வந்து பார்க்கச் சொன்னார். ஆனா நான் போகலே....
இரமணன்: இது அருவியிலே நீர் கொட்டும்போது குற்றாலம் போனேன்.....குலிக்கத் தடையும் இல்லே......ஆனா குளிக்காம வந்துட்டேன்கற மாதிரி இருக்கு....
சுகுமார்: அவரும் தூரத்திலே வேறே இடத்துக்குப் போயிட்டார்.....
இரமணன்: அவர் நான் படிச்ச திருப்பூர் குமரன் பள்ளியிலே ஆசிரியர்....எனக்கு அவரை நல்லாத் தெரியும்....உன்னை நான் அவரிடம் அழைச்சிக்கிட்டுப் போறேன்.....
(சுகுமார் மகிழ்ச்சி அடைகிறான்)
சுகுமார்: எப்போது போகலாம்?...
இரமணன்: நாளைக்குக் கூட விடுமுறைதான்....அவர் வீட்டிலேதான் இருப்பார்....நான் அவருக்குத் தகவல் சொல்லிடறேன்....நாளைக்குக் காலையிலே பத்து மணிக்கு அவரைப் பார்க்கப் போறோம்!....

காட்சி - 2  

இடம் - கடைத்தெரு,  மாந்தர் - 
இரமணன், சுகுமார். 

(மாலையில் கடைக்கு வந்த இரமணன் அங்கே சுகுமார் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதைப் பார்க்கிறான்..)

இரமணன்: சுகுமார்,....உனக்கு என்ன ஆச்சு?....
சுகுமார்: நான் நல்லாத்தானே இருக்கேன்!....
இரமணன்: மறந்திட்டியா?....நேற்று நாம் என்ன திட்டம் போட்டோம்?....
(சுகுமாருக்கு அப்போதுதான்...." ஓவிய ஆசிரியர் மணியரசனைப் பார்க்கப் போவதாக இருந்தோமே'....என்று  நினைவுக்கு வருகிறது.)
சுகுமார்: காலையிலே நினைச்சேன்.....கொஞ்ச நேரத்திலே கோபுங்கற நண்பன் கிரிக்கெட் மட்டையோட வந்தான்....விளையாடக்  கூப்பிட்டான்.....நம்ம திட்டத்தை மறந்திட்டு அவன் பின்னாலேயே போயிட்டேன்.....என்னை மன்னிச்சிடு!......
இரமணன்: நாம் அவரைப் பார்க்க வருவதாகத் தகவல் கொடுத்திட்டேன்.....நம்ம ஆர்வத்தைத் தெரிஞ்சிக்கிட்டு அவரும் வரச்சொல்லிட்டார்!..... சொல்லைக் காப்பாற்ற வேண்டாமா?....பெரியவர்களுக்கு நாம கொடுக்கிற மரியாதை இப்படியா இருக்கிறது?....
சுகுமார்: இனிமே இப்பிடி நடக்காது.....கவனமா இருப்பேன்....
இரமணன்: சரி,.... நாளைக்கு மாலை நாலு மணிக்குப் பூங்காவுக்கு வா....சேர்ந்து ஒரு ஓவியக் கூடத்திற்குப் போகலாம்....அங்கே ஒரு முக்கியமான நிகழ்ச்சி!...விட்டிலேயும் சொல்லிடு....
(இரமணன் வீட்டுக்குச் செல்கிறான்....வழியில் மற்றொரு நண்பன் சாமுவேல் வருகிறான்....சுகுமாரைப் பற்றிப் பேச்சு வருகிறது.)
சாமுவேல்: அவனா,....எப்போது பார்த்தாலும் மறந்திட்டேன்....மறந்திட்டேன்னு சொல்வான்....கடிகாரம் இருந்தாலும் பார்க்க மாட்டான்....காலத்தோட அருமை அவனுக்குத் தெரியாது....அவனை ஒரு இடத்துக்கோ....வேலைக்கோ அழைச்சா நம்ம தாவு தீர்ந்திடும்!....
இரமணன்: அவனை இப்படியே விடலாமா?....நம்ம நண்பனாயிட்டானே.....நாம முயன்று எப்படியாவது அவனை நல்ல வழிக்குத் திருப்பணும்!....
சாமுவேல்: முயற்சி செய்யலாம்.....

காட்சி - 3   

இடம் - ஓவியக்கூடம்,   மாந்தர் - மணியரசன், இரமணன், சுகுமார், திருமால், பயிற்சி மாணவர்கள்.

(சுகுமார் வியர்க்க விறுவிறுக்க மிதிவண்டியில் பூங்காவுக்கு வருகிறான்)

சுகுமார்: எங்க தெருவிலே நாலஞ்சு குரங்கு வந்திடுச்சு....ஒரே சத்தம்!....அதை வேடிக்கை பார்க்கப் போனேன்.....உன்னை மறந்திட்டேன்!.....நல்லவேளை!....சாமுவேல் அந்தப் பக்கமா வந்தான்....ஞாபகப்படுத்தினான்.....
இரமணன்: சரி, வா!....குரங்குக் கதையை அப்பறமா பேசலாம்....தாமதமானா கதவை மூடிடுவாங்க!.....
(ஓவியக் கூடத்திற்கு விரைகிறார்கள்....அவர்கள் உள்ளே சென்றதும் நிகழ்ச்சி தொடங்குகிறது......--கூடத்தின் பொறுப்பாளராக அங்கே தோன்றியவரைப் பார்த்ததும் சுகுமார் திகைக்கிறான்....அவர் ஓவிய ஆசிரியர் மணியரசன்!----)
மணியரசன்: ஓவியம் ஒரு சிறந்த கலை. நாம் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் மொழியின் சொற்கள் மூலமாகச் சொல்ல முடியுமா?....சில சமயம் சொற்கள் சொல்லாத,....அவற்றால் வெளிப்படுத்த இயலாத,....உணர்வையும், கருத்தையும்கூட ஓவியம் வெளிப்படுத்தும்!....முதலில் உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் ஒரு பயிற்சி....திரையில் தெரியும் இந்த ஓவியத்தைப் பார்த்து ஒரு தாளில் சில வரிகள் எழுதுங்கள்....
(ஓவியத்தைப் பார்க்கிறார்கள்....இயற்கைச் சூழல்....ஓர் ஆறு கால்வாய்....வாய்க்கால்!....நீர் வயலில் உள்ள நெற்பயிருக்குப் பாய்கிறது. ....சிந்தித்துத் தோன்றியதை எழுதுகிறார்கள்.....அவர் அவற்றை வாங்கியபின் ஒவ்வொன்றாய்ப் பார்க்கிறார்.....ஒரு தாளை எடுக்கிறார்....)
மணியரசன்: மாணவர்கள் பலரும் இந்த ஓவியத்தின் அழகை நன்றாகச் சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்....எல்லோருக்கும் என் பாராட்டும் வாழ்த்தும்......திருமால் என்ற மாணவர் எழுதிய குறிப்பு நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது.  (மாணவர்கள் அதை அறிய ஆர்வமாக இருக்கிறார்கள்) நீர் செல்லும் அழகையும் பயிருக்கு அதன் பயனையும் கண்ட திருமால், வயலுக்குச் செல்லும் வாய்க்காலில் சிறு ஓட்டைகள் வழியாகத் தண்ணீர் வீணாவதையும் கவனித்திருக்கிறார்......(மாணவர்களின்ஆர்வம் கூடுகிறது!)... கடவுள் அந்தத் தண்ணீரைப்  போல எல்லோரும் இருபத்து நான்கு மணி நேரத்தைத் தருகிறார்.....அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நம் வாழ்க்கை என்ற வயலில் முன்னேற்றம் என்ற கதிர் விளையும்....கடமைகளை மறத்தல்,.... வீண் அரட்டை,.... குறிக்கோள் இல்லாமல் வேடிக்கை,....வீண் வேலை,...எனறு பொழுதைக் கழித்தல் இவையெல்லாம் காலத்தை வீணாக்கும் ஓட்டைகள்!.....இவற்றைச் சரி செய்தால் காலம் பொன்னாகும்!....வாழ்வில் ஒளி சேரும்....இது அவருடைய குறிப்பு!.....
(எல்லோரும் கையொலி எழுப்புகிறார்கள்....அவர் திருமாலை மேடைக்கு அழைத்துப் பாராட்டுகிறார்.......கூட்டம் முடிந்து இரமணனும் சுகுமாரும் வெளியே வருகிறார்கள்.)
சுகுமார்: இது போல ரெண்டு மூணு இடத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போ!....நான் நீ நினைக்கிறபடி மாறிடுவேன்!....
இரமணன்: அடுத்த ஆண்டு உனக்கு நிச்சயமா இங்கே இடம் கிடைக்கும்!.....அதற்கு நான் பொறுப்பு!....
(சுகுமார் மகிழ்ச்சி அடைகிறான்!)

திரை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com