முத்திரை பதித்த முன்னோடிகள்! கவியரசர் கண்ணதாசன்

தமிழகமும் தமிழ் மொழியும் பெருமை கொள்ளும் ஈடில்லா கவிஞர் இவர்! 24.6.1927 அன்று சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் தமது 17வது
முத்திரை பதித்த முன்னோடிகள்! கவியரசர் கண்ணதாசன்
Updated on
3 min read

"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!'

இந்த வரிகளை எழுதியவர் அதன் பொருள் போலவே என்றென்றும் சாகாவரம் பெற்று மக்கள் மனதில் வாழ்கிறார்!
தமிழகமும் தமிழ் மொழியும் பெருமை கொள்ளும் ஈடில்லா கவிஞர் இவர்! 
24.6.1927 அன்று சிறுகூடல்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த இவர் தமது 17வது வயதில் எழுதத் தொடங்கினார். இயற்பெயர் முத்தையா. தம் குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாகப் பிறந்த இவர் படித்தது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே!தமது எட்டாவது வயதில
"கடைக்குப் போனேன்!
காலணா கொடுத்தேன்!
கருப்பட்டி வாங்கினேன்!' என்பது இவர் எழுதிய முதல் கவிதை!
புலவர் அப்பாதுரை என்பவரிடம் இலக்கணமும் இலக்கியமும் கற்றார். தமது பதினேழாவது வயதில் முழுமையாக கவிதைகள் மற்றும் கட்டுரைகள் புனையும் ஆற்றல் பெற்றார்.
ஒரு சமயம் ஒரு பத்திரிகையில் வேலை வேண்டி பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். தனது பெயர் வயது முதிர்ந்தவரின் பெயரை போல இருப்பதாக நினைத்த அவர் ஒரு புனைப்பெயரை சூட்டிக்கொள்ள விரும்பினார். மகாவிஷ்ணு வசுதேவருக்கும் தேவகிக்கும் கண்ணன் எட்டாவது மகன்! தானும் எட்டாவதாகப் பிறந்ததனால் தனது பெயரை "கண்ணன்'என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அந்தப் பெயரை பெரும்பாலும் சிறுவர்களுக்கு மட்டுமே வைப்பார்கள். எனவே அத்துடன் "தாசன்' என்ற சொல்லை இணைத்து "கண்ணதாசன்' என்று வைத்துக்கொண்டார். பேருந்தில் பயணம் செய்த "முத்தையா' இறங்கும்போது "கண்ணதாசன்'ஆக மாறினார்.
பிறகு அந்த புதுப் பெயர் பிரபலமாகி பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு "கண்ணதாசன்' என்று பெயர் சூட்டத் தொடங்கினர். மேலும் காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன, ஆரோக்கியசாமி என பல புனைப் பெயர்களில் இவர் எழிதினார். 
அரிய கருத்துக்கள் யாவற்றையும் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய சொற்களால் திரைப்படப்பாடல்களை எழுதினார். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் ஆனார்! எண்ணற்ற கவிஞர்கள் இவரையே ஒரு மானசீக குருவாக நினைத்து கவிதைகள் எழுதினர். "சூரியனின் பாதிப்பு இல்லாத ஒரு பொருள் இந்த உலகத்தில் இல்லை'என்பது ஒரு பழமொழி
"கவியரசர் கண்ணதாசனின் பாதிப்பு இல்லாத திரை இசை கவிஞர்கள் இல்லை!'என்பது புது மொழியாகும். நீங்கள் பல திரைப்பட பாடல்களை கேட்டிருப்பீர்கள்!
"முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்?
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்!'
"உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'
என்பன போன்ற வரிகள் துயருறும் மனதுக்கு ஆறுதலாக அமைந்தன.இத்தகைய பாடல்களை "தத்துவப் பாடல்கள்' என்பர். கவியரசர் கண்ணதாசன் அளவிற்கு தத்துவப் பாடல்களை எழுதியவர் எவரும் இல்லை எனலாம். திரை இசைப் பாடலாசிரியர்களை நாம் நட்சத்திரங்களாக கொண்டால் இவர் திரை இசை என்னும் கலை வானில் ஒரு ஆதவன்!
கவிதை புனையவதையே தமது தொழிலாகக் கொண்ட இவர் ஒரு தலைசிறந்த இலக்கியவாதியும் கூட! சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல் திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.
இவர் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், பல நவீனங்களையும் மற்றும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் நினைத்த அடுத்த நொடியேஇவர் மனதில் தமிழ்ச் சொற்கள் கைகட்டி அணிவகுத்து நின்றன. இதனால்தான் இவர் எழுதிய திரைப்படப் பாடல்கள் அனைத்தும் காலத்தை வென்று நிற்கின்றன.
இவர் எழுதிய 1944 முதல் 1981 வரையிலான காலகட்டம் தமிழ் இலக்கியத்துறையின் பொற்காலமாகும். ஏனெனில் அந்த சமயத்தில் தான் தமிழில் அதிகமாக எழுத்தாளர்களும், சிந்தனாவாதிகளும், கவிஞர்களும் இருந்தனர்.
தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த இவர் வட மொழியையும் கற்றுக் கொண்டார். அதன்படி "பொன் மழை'(ஆதிசங்கரர் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு) மற்றும் "பஜகோவிந்தம்'ஆகிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தார்.
இது மட்டுமா இஸ்லாமியர்களின் புனித நூலாகிய திருக்குர்ஆனின் தோற்றுவாய் எனப்படும் "அல்ஃபாதிஹா' முதல் அத்தியாயத்துக்கு எளிய நடையில் இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்தார்.
மேலும் அனார்கலி, சிவகங்கை சீமை, ராஜ தண்டனை போன்ற நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய "சேரமான் காதலி' என்ற நூலுக்கு "சாகித்ய அகாடமி' பரிசு வழங்கப்பட்டது. இக்கவிஞர் பெருமகனார் தமிழக சட்டசபையில் அரசவைக் கவிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
மாட்டு வண்டி போகாத ஊரிலும் தன் பாட்டு வண்டியை உலா அனுப்பிய இப் பெருமகனார் 17.10.1981 அன்று உடல்நலக்குறைவால் தனது 54வது வயதில் காலமானார்.

அறிந்து கொள்வோம் வாருங்கள்
(1) இவர் எழுதிய முதல் திரைப்பட பாடல்
"கலங்காதிரு மனமே! உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!'என்பதாகும்.
(2) "பத்தாயிரம் கவிதைகளை முத்தாக அள்ளிவைத்த கம்பனுக்கு ஈடு இன்னும் வித்தாகவில்லை என்றே நீ பாடு!'இது கவியரசர் கம்பனைப் பற்றி நம் கவியரசரின் கவிதை.
கண்ணதாசன் மிகவும் மதித்துப் போற்றிய அறிஞர் பெருமகனார் நீதியரசர் திரு. மு.மு. இஸ்மாயில் ஆவார். இருவரையும் ஒன்றிணைத்த ஒரே விஷயம் கம்பராமாயணம் ஆகும. ஆம்! இருவரும் கம்பராமாயணத்தை தம் உயிருக்கும் மேலாக நேசித்தனர்.
(3) காலத்தால் அழியாத திரைப்பட பாடல்கள் போலவே இவர் எழுதிய ஒரு நூலும் காலம் கடந்து நிற்கிறது. அதுதான் "அர்த்தமுள்ள இந்துமதம்' என்ற கட்டுரைத் தொகுப்பு நூலாகும். இந்நூல் இன்றளவும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் இந்நூல் இப்பொழுதும் விற்பனை ஆகிக்கொண்டிருப்பது ஒன்றே அதன் சிறப்புக்கு காரணமாகும்.
(4) இவர் தனது சுயசரிதையை "வனவாசம் மனவாசம்'என்ற பெயரில் எழுதியுள்ளார்.
(5) இவர் எல்லா மதங்களையும் நேசித்தார்.அதனால்தான் "அர்த்தமுள்ள இந்துமதம்' நூலை எழுதிய இவரால் "இயேசு காவியம்' என்ற நூலையும் படைக்க முடிந்தது.
(6) தமிழகத்தின் முன்னாள் முதல்வர் திரு எம் ஜி ஆர் இவர் எழுதிய "அச்சம் என்பது மடமையடா!' என்ற பாடலை மிகவும் விரும்பினார்.
(6) இவருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு.அதுதான் தமிழகத்தின் எல்லா முதல் அமைச்சர்களுடனும் நெருங்கிப் பழகி பணிபுரியும் வாய்ப்பு ஆகும்.
(7) கண்ணதாசன் சில திரைப்படங்களையும் தயாரித்தார். அவர் தமிழகத்தின் கர்மவீரர் திரு காமராசரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்பினார் ஆனால் அது ஏனோ கைகூடவில்லை.
(8) இவர் பிறந்த ஊராகிய சிறுகூடல்பட்டியிலும் காரைக்குடியிலும் இவருக்கு மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com