மரங்களின் வரங்கள்! அத்தி மரம்

நான் தான் அத்தி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஃபைக்கஸ் என்பதாகும். நான் மோரேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். சங்க காலத்தில் எனது பெயர் அதவம்.
மரங்களின் வரங்கள்! அத்தி மரம்
Updated on
2 min read

என்ன குழந்தைகளே
 நலமாக இருக்கிறீர்களா ?
 
 நான் தான் அத்தி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஃபைக்கஸ் என்பதாகும். நான் மோரேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். சங்க காலத்தில் எனது பெயர் அதவம். நான் கொடுக்கும் கனி அராபிய, ஐரோப்பிய பகுதியில் பண்டைய காலத்திலிருந்தே அனைவராலும் விரும்பப்படும் கனியாக இருக்கிறது. என்னுடைய ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும். எனது உடம்பு மிகவும் வலிமையானது. நான் சுக்ரனுடைய அம்சம் என்று ஆன்மிக அன்பர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது சுக்ராச்சாரியார் நேரிடையாக மோத மாட்டாராம். மறைந்திருந்து தான் தாக்குவாராம். அதனால் தான் "கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும்' என்ற பழமொழி எனக்குண்டு. அத்தி மர பலகைக்கு மிகவும் சக்தி உண்டுன்னும் சொல்றாங்க. மதுரையில் கம்பராமாயணத்தை அரங்கேற்றியது அத்திமர பலகையின் மீது தான்.
 நான் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமா இருந்திருக்கிறேன். என்னைப் பற்றி பைபிளில் குறிப்பு இருக்கு, குரானில் குறிப்பு இருக்கு. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்திம் செய்து சொல்வதாக உள்ளது. "அத்தி மரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள் அதிலே இளங்கிளை தோன்றி துளிர் விடும்போது வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்' எனவும், விவிலியம் அறிவிக்கிறது. நான் இன்னொன்னையும் சொல்லட்டா குழந்தைகளே, என்னை விஷ்ணுவின் அம்சம்னும் சொல்றாங்க.
 ஒரு இடத்தில் நான் இருக்கிறேன் என்றால் அதற்கு கீழே நீரோட்டம் நன்றாக இருக்கும். நகரேஷு காஞ்சி என அழைக்கப்படும் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 100 கால் மண்டபத்திற்கு வடக்கே உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், நீருக்கு அடியில் கருங்கல்லாலான பாறைக்குள் மிகப்பெரிய அத்தி மரத்தாலான அத்தி வரதராஜப் பெருமாள் சயன நிலையிலுள்ளார். இவர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வருவார். கடைசியாக 1979-ஆம் வருடம் ஜுலை 2-ஆம் தேதி குளத்திலிருந்து வெளியே வந்தார். வரும் 2019-இல் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது. மறக்காம போய் பாருங்க.
 என்னுடைய மரப் பட்டையை தண்ணீர் போட்டு கொதிக்க வச்சு குடிச்சால் உடம்புக்கு நல்லது. இரத்தம் சுத்திகரிப்பாகும். என்னுடைய பிஞ்சு, காய் ஆகியவைகளை சமைத்து உண்டால் எல்லா சக்தியும் உங்களுக்கு நான் கொடுப்பேன்.
 குழந்தைகளே ! குறிப்பா, உங்களில் சிலருக்கு தொங்கு தசை இருக்கும், தசை இருகி போயிருக்கும் இதை எல்லாத்தையும் நான் நீக்கி உங்களின் எலும்பை வலுவாக்குவேன். என்னுடைய பழம் சாப்பிட்டால் உங்களின் அசதி, சோர்வு, இளைப்பு போன்றவைகளை நீக்குவேன். சிறுநீர்ப்பையில் புண், கல் வராது. வாயில் துர்நாற்றம் வராமல் காப்பதுடன், முடி அடர்த்தியாக வளருவதற்கும் நான் உதவுவேன். என் கிட்டே நிறைய வைட்டமின் சத்துகள் இருப்பதாலே மூட்டு வலி என்னைக் கண்டாலே பயந்து ஓடிடும். நான் கொடுக்கும் ஒரு பழத்தில் புரத சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து, தயாமி ஆகிய சத்துகள் உள்ளன. நான் கல்லீரல் வீக்கத்தை குணமாக்குவேன். மூல நோயை போக்குவேன். என்னுடைய இலையை சிலர் உணவு உண்ணவும் பயன்படுத்தறாங்க.
 நான் சென்னை, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர், கடலூர் மாவட்டம், கானாட்டுமுள்ளூர் அருள்மிகு பதஞ்சலி ஈஸ்வரர் ஆகிய திருக்கோவிலில் தலவிருட்சமாக உள்ளேன். என்னுடைய ராசி ரிஷபம். நட்சத்திரம் கார்த்திகை. வாழ்க்கை வளமா இருக்கனும்னா ஒவ்வொரு வீட்டிலும் மரம் இருக்கனும். மரம் உண்ணும் உணவாகி நம் உயிரைக் காக்கின்றன. எனவே, குழந்தைகளை மரங்களை வளர்ப்பதும், பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமை. மரம் வரம் மட்டுமல்ல, உயிரின் ஆதாரம். நன்றி குழந்தைகளே ! சந்திப்போம்!
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com