கருவூலம்: பிங்க் சிட்டி - ஜெய்பூர்

இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூர் நகரம் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரமாகும். ஜெய்ப்பூர் நகரம் 1727 இல் ஆமர் பகுதியை ஆண்ட "இரண்டாம் ஜெய் சிங்' என்பவரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது
கருவூலம்: பிங்க் சிட்டி - ஜெய்பூர்
Published on
Updated on
3 min read

இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்பூர் நகரம் இந்தியாவின் முதல் திட்டமிடப்பட்ட நகரமாகும். ஜெய்ப்பூர் நகரம் 1727 இல் ஆமர் பகுதியை ஆண்ட "இரண்டாம் ஜெய் சிங்' என்பவரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்திய வாஸ்து சாஸ்திரம் மற்றும் சிற்ப சாஸ்திரப்படி ஜெய்பூர் நகரம் வித்யாதர் பட்டாச்சார்யா என்பவர் நிர்மாணித்தார். 
இளஞ்சிவப்பு வண்ணம் விருந்தோம்பலைக் குறிக்கும். வேல்ஸ் இளவரசர் மற்றும் ராணி விக்டோரியா ஆகியோர் 1876 ல் ஜெய்பூருக்கு வருகை தந்த போது அவர்களை வரவேற்கும் விதமாக மகாராஜா சவாய் ராம் சிங் ஜெய்பூர் நகர கட்டடங்களுக்கு இளஞ்சிவப்பு வர்ணம் தீட்டி வரவேற்க முடிவு செய்து அதற்கான உத்தரவினை பிறப்பித்தார். இளவரசர் ஜெய்பூரை "இளஞ்சிவப்பு நகரம்' என்று வர்ணித்தார். 
மகாராஜா சவாய் ராம் சிங் பெரும் பணக்காரராகவும் அதிகாரம் மிக்க ஆட்சியாளராகவும் திகழ்ந்தார். அவர் ஜெய்பூரின் ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதும் இளஞ்சிவப்பு வண்ணத்தை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று 1877 ஆம் ஆண்டில் ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். அந்த சட்டம் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிங்க் சிட்டி சோராவார் சிங்க தர்வாஸô, சூரஜ் போல், சந்த்போல், கிஷன் போல், நயா போல், ஷிவ் போல், ராம் போல் என்று ஏழு நுழைவாயில்களைக் கொண்டது. 
ஆமர் கோட்டை (Amer Fort)
ஆமர் கோட்டை ஆம்பர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இது 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆமர் நகரத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. ராஜா மான் சிங் அவர்களால் இக்கோட்டை 1592 ல் கட்டப்பட்டது. பின் வந்த அரசர்களின் வழித்தோன்றல்களால் மேம்படுத்தப்பட்டது. இக்கோட்டை நான்கு பகுதிகளைக் கொண்டது. நான்கு முக்கிய வாசல்களையும் கொண்டது. ஜெய்பூர் பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் இக்கோட்டையினை விரும்பிக் கண்டு களிக்கிறார்கள்.
ஜெய்கர் கோட்டை (Jaigarh Fort)
ஜெய்கர் கோட்டை ஆமர் பகுதியில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. தனது போர் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் மன்னர் இரண்டாம் சவாய் ஜெய்சிங் இக்கோட்டையினை 1726ல் கட்டினார். ஆம்பர் கோட்டையின் வடிவத்தில் அமைக்கப்பட்ட ஜெய்கர் கோட்டை வடக்கு தெற்காக மூன்று கிலோ மீட்டர் நீளமும் கிழக்கு மேற்காக ஒரு கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. 
இக்கோட்டை வளாகத்தில் ஆயுத சாலை, அருங்காட்சியகம் போன்றவை அமைந்துள்ளன. ஜெய்கர் கோட்டையை ஒரு சுரங்கப்பாதை ஆம்பர் கோட்டையுடன் இணைக்கிறது. ஜெய்பூர் நகரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்கர் கோட்டை அமைந்துள்ளது. 
நகார்கர் கோட்டை (Nahargarh Fort)
ஆராவல்லி மலையில் அமைந்துள்ள மற்றொரு கோட்டை நகார்கர் கோட்டையாகும். இக்கோட்டை முதலில் சுதர்ஷன்கார்க் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நகார்கர் கோட்டை என்று அழைக்கப்பட்டது. நகார்கர் என்றால் புலி என்று பொருள். இக்கோட்டை டைகர் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோட்டை 1734 ஆம் ஆண்டில் மகாராஜா சவாய் ஜெய்சிங் ஆல் கட்டப்பட்டது. சவாய் ராம்சிங் 1868 ல் இக்கோட்டையினைப் புதுப்பித்தார். ஜெய்பூரின் பாதுகாப்பு அரணாகத் திகழ்கிறது. 
நகர அரண்மனை (City Palace)
ஜெய்பூர் மன்னர் இரண்டாம் ஜெய்சிங் இந்த அரண்மனையை 1729 முதல் 1732 காலங்களில் கட்டி முடித்தார். இதனை வடிவமைத்துக் கட்டியவர் வித்யாதர் பட்டாச்சாரியா. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு மணல் கற்களைக் கொண்ட இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜெய்பூர் மன்னரின் இருப்பிடம் இந்த நகர அரண்மனையாகும். இந்த அரண்மனை பதாமி சாளுக்கியர் மற்றும் முகலாயக் கட்டிடக் கலைகளின் கலவையாகத் திகழ்கிறது. இந்த அரண்மனையில் முபாரக் மஹால் மற்றும் சந்திர மஹால் என்ற இரண்டு கட்டிடங்கள் அமைந்துள்ளன. 
முபாரக் மஹால் எனும் வரவேற்பு மண்டபம் நகர அரண்மனையின் முகப்பில் அமைந்துள்ளது. இந்த மஹால் 19ம் நூற்றாண்டில் மஹாராஜா சவாய் மதோ சிங் எனும் மன்னரால் கட்டப்பட்டது. முபாரக் மஹால் இஸ்லாமிய ஐரோப்பிய கட்டட அமைப்பில் கட்டப்பட்டது.
ஜெய்பூர் மன்னரின் குடும்பத்தினர் தங்கும் இடமாகத் திகழ்ந்தது சந்திரமஹால் ஆகும். ஏழு தளங்களைக் கொண்டது. இந்த அரண்மனை கலை நயம் மிக்கதாகத் திகழ்கிறது. தற்போது இந்த அரண்மனையில் ஜெய்பூர் மன்னர் பரம்பரையினர் வசிக்கின்றனர்.
சந்திர மஹால் தற்போது அருங்காட்சியமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்து மணிவரை பார்வையிட அனுமதிக்கிறார்கள். ஒருவருக்கு கட்டணமாக நூற்றி முப்பது ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஹவா மஹால் (Hawa Mahal)
ஹவா மஹால் என்றால் "காற்று அரண்மனை" என்று பொருள். 1799ஆம் ஆண்டில் ஹவா மஹாலை இரண்டாம் ஜெய்சிங்கின் பேரனும் மஹாராஜா ஸவாய் மாதோஸிங்கின் மகனுமான சவாய் ப்ரதாப் ஸிங் என்பவர் உருவாக்கினார். இந்த அரண்மனை உஸ்தா லால் சந்த் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சவாய் ப்ரதாப் ஸிங் கிருஷ்ண பக்தி உடையவர். இதன் காரணமாக இந்த மஹால் கிருஷ்ணரின் கிரீட வடிவில் அமைக்கப்பட்டது. இந்த அரண்மனையில் சிறிய ஜன்னல்கள் 953 உள்ளன. ஜரோக்கள் என்று அழைக்கப்படும் இந்த ஜன்னல்கள் சிக்கலான பின்னல் வேலைப்பாடுகளால் அமைந்தவை. இந்த அரண்மனையின் ஐந்தடுக்குக் கட்டடம் தேன்கூட்டைப் போன்று அறுகோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இராஜவம்சத்தைச் சேர்ந்த பெண்கள் இந்த அரண்மனைக்குள் நின்று அவர்கள் நிற்பது வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாத வண்ணம் வெளியில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளை அவர்கள் கவனிக்கும் விதத்தில் இந்த அரண்மனை ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மணை ஜெய்ப்பூர் நகரத்தின் முக்கிய வணிகப் பகுதியில் அமைந்துள்ளது. அதிகாலை வேளையில் இந்த அரண்மனை சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னும். ஹவா மஹாலின் கட்டட அமைப்பு ஹிந்து இராஜபுத்திர கட்டடக்கலையும் இஸ்லாமிக் முகலாயக் கட்டடக்
கலையும் கலந்த ஒரு கலவையாகும். ஹவா மஹால் இராஜஸ்தான் அரசு தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படுகிறது.
ஹவா மஹால் ஜெய்ப்பூர் நகரத்தின் வடக்கில் பிரதான சாலை கூடும் பதி செüபத் என்ற இடத்தில் (பெரிய நான்கு சதுரம்) அமைந்துள்ளது.
ஜல் மகால் (Jal Mahal)
ஜல் மஹால் என்றால் நீர் அரண்மனை என்று பொருள். இது ஜெய்பூர் நகரத்தில் மான் சாகர் ஏரியின் நடுவில் அமைந்த அழகிய அரண்மனை ஆகும். 
இதனை மன்னர் சவாய் பிரதாப் சிங் 1799 ல் கட்டினார். முகலாயக் கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டது.
ஐந்து அடுக்குகள் கொண்ட ஜல் அரண்மனை சிவப்புக் கற்களால் கட்டப்பட்டது. ஏரியில் நீர் முமுமையாக நிரம்பும் போது ஜல் மகாலின் முதல் நான்கு அடுக்குகள் நீரில் மூழ்கிவிடும். ஐந்தாம் அடுக்கு மட்டும் வெளியே காட்சியளிக்கும்.
இந்த அரண்மனையின் மேற்கூரையின் நான்கு முனைகளில் உள்ள விதானங்கள் நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
கனக் விருந்தாவன்
கனக் விருந்தாவன் என்பது ஜெய்பூர் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அழகிய தோட்டம். 
ஆராவல்லி மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்த ஒரு சிறிய பள்ளத்தாக்கில் இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 
ஆமர் கோட்டைக்குச் செல்லும் வழியிலும் நகார்கர் கோட்டையின் கீழ்ப்பகுதியிலும் இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 
ஜெய்பூரின் வடக்கு திசையில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த கனக் விருந்தாவன் அமைந்துள்ளது. 
ஜெய்பூர் நகரின் முக்கிய சுற்றுலாத்தலங்களின் ஒன்றாக இது திகழ்கிறது.
தொடரும்... 
தொகுப்பு: ஆர்.வி.பதி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com