கருவூலம்: யானை!

கடவுளின் படைப்பில் பார்த்த உடனேயே மனிதனை பிரமிப்பில் ஆழ்த்தும் விஷயங்களில் யானை மிக முக்கியமானது!
கருவூலம்: யானை!

கடவுளின் படைப்பில் பார்த்த உடனேயே மனிதனை பிரமிப்பில் ஆழ்த்தும் விஷயங்களில் யானை மிக முக்கியமானது! இயற்கையின் படைப்பில் பிரம்மாண்டம், அழகு என இரண்டும் இணைந்த ஒரே உயிரினம் யானை மட்டுமே! யானைகள் இந்து மற்றும் புத்த மதத்தில் புனிதமாகக் கருதப்படுகின்றன.
 மனிதர்கள் ஒருவித பயம் கலந்த உணர்வுடனே யானைகளை அணுகுகின்றனர். அவற்றின் உருவத்தைப் போலவே யானைகளின் பெருமையும் மிகவும் பெரியது தான்.
 நன்கு வளர்ந்த வயது முதிர்ந்த யானைகள் 13 அடி உயரத்துடனும் துதிக்கை முதல் வால் வரை 30 அடி நீளத்தில் மிக பிரம்மாண்டமாக காணப்படும். யானைகள் "ஆசிய யானைகள‘ ...."ஆப்பிரிக்க யானைகள்' என இரண்டு வகைப்படும். பாலூட்டி இனத்திலேயே மிகப்பெரிய விலங்கு யானை மட்டுமே! இயற்கையின் படைப்பில் குதிக்க முடியாத உயிரினம் யானை! யானையின் சிறப்பு உறுப்பு அதன் "துதிக்கை' என்று அழைக்கப்படும் மிக நீளமாக வளர்ந்த அதன் மூக்கு ஆகும்.இதன் சிறப்பை "யானைக்கு தும்பிக்கை மனிதருக்கு நம்பிக்கை' என்ற பழமொழி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
 யானையின் துதிக்கையில் 16க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. அதன் நுனியில் சிறிய நீண்ட பட்டையான அமைப்பு ஒன்று காணப்படும். இதை கொண்டே யானைகள் மிகச்சிறிய குண்டூசியையோ அல்லது ஒற்றைப் புல்லையோ தரையிலிருந்து எளிதாக எடுத்துவிடும்.
 யானையின் உருவ அமைப்பு!
 யானைகளின் உருவத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றின் மூளை மிகவும் சிறியது ஆனால் மிக மிக சக்திவாய்ந்தது என்றே கூற வேண்டும். இவற்றின் இதயத்துடிப்பு மிக மிகக் குறைவாகவே இருக்கும்.ஒரு நிமிடத்திற்கு 27 முறை மட்டுமே யானையின் இதயம் துடிக்கும். ஆசிய யானைகளின் முன்னங்கால்களில் ஐந்து நகங்களும் பின்னங்கால்களில் 4 நகங்களும் இருக்கும். ஆனால் ஆப்பிரிக்க யானைகளின் முன்னங்கால்களில் 4 நகங்களும் பின்னங்கால்களில் மூன்று நகங்களும் மட்டுமே காணப்படும். யானையின் தோல் கரடுமுரடாக அதிக சுருக்கங்களுடன் காணப்படும். இது அவற்றின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இயற்கை செய்த உபாயமாகும்.
 யானைகள் நீரில் விளையாடுவதையும் தன்மீது மணலை வாரி தூற்றி கொள்வதையும் மிகவும் விரும்பும். இப்படி செய்வதன் மூலம் அவற்றின் தோல்களுக்கு இடையே உள்ள சுருக்கங்களில் நீரோ மணல் துகளோ தங்கிவிடும் . இதன் மூலம் எத்தகைய கடினமான வெப்ப நிலையிலும் யானையின் உடல் குளிர்ச்சியாகவே இருக்கும்.
 யானைகளின் கண்கள் மிக மிக சிறியவை. ஆனால் மிகக் கூர்மையான பார்க்கும் திறன் கொண்டவை. கண்களை விட அவற்றின் கண் இமைகள் மிகப்பெரியதாகவும் 5 அங்குல நீள இமை முடியுடனும் காணப்படும். இதன் காரணமாக கண்களில் தூசு விழாமலும் கண்கள் வறண்டு போகாமலும் இருக்கிறது.
 யானைகளின் ஜீரண சக்தி மிக மிக குறைவு. அவை உண்ணும் உணவில் 50 சதவிகிதம் மட்டுமே இரைப்பை மற்றும் குடலால் உறிஞ்சப்படும். எஞ்சியுள்ள 50 சதவிகித சக்கைப் பொருட்கள் சாணமாக வெளியேறிவிடும். ஒரு நாளைக்கு 250 பவுண்டுகள் வரை ஒவ்வொரு யானையும் சாணம் போடும். ஜீரண சக்தி குறைவாக இருப்பதால் யானைகள் மிக அதிக அளவு அபான வாயுவை வெளியேற்றும். அதிலும் ஒரு நாளைக்கு பலமுறை அபான வாயுவை வெளியேற்றிய படியே இருக்கும். யானை வெளிவிடும் அபான வாயுவில் "மீத்தேன்' அதிகம் இருக்கும். அபான வாயுவை வெளியேற்றுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் யானை தன் பின்னங்கால்களை வளைத்து நாற்காலியில் அமர்ந்து இருப்பது போல் வெகு நேரம் நிற்கும். வாயுவை வெளியேற்றிய பிறகு தான் பழைய நிலைக்கு திரும்பும்.
 விலங்கினங்களிலேயே யானைகளுக்கு தான் மிக நீண்ட கர்ப்பகாலம். ஏறத்தாழ 22 மாதங்கள் கர்ப்பம் அடைந்து இருக்கும்.
 யானைகளின் தகவல் பரிமாற்றம்!
 யானைகளின் தோல் கரடு முரடாகவும் கடினமாகவும் இருந்தாலும் அவை அவை ஒன்றுக்கொன்று தொடு உணர்வின் மூலம் செய்திகளை பரிமாறிக் கொள்கின்றன. யானைகள் கூட்டம் கூட்டமாகவே வாழும். ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு ஆண் யானை தலைவனாக இருந்து கூட்டத்தை வழிநடத்திச் செல்லும். ஒரு கூட்டத்தைச் சேர்ந்த யானை மற்றொரு கூட்டத்தைச் சேர்ந்த எந்த யானையையும் தொட அனுமதிக்காது. அதேபோன்று தாய் யானை தனது குட்டிகளை முன்பின் அறிமுகம் இல்லாத பிற யானைகள் தொட அனுமதிக்காது.
 யானைகளின் உணர்ச்சிகள்!
 மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் இயல்புடையவை. சந்தோஷமாக இருக்கும் சமயத்திலும் சோகமாக இருக்கும் சமயத்திலும் பிளிரலை வெளிப்படுத்தும். தமது கூட்டத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு யானை இறந்து விட்டால் கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீர் சிந்தும். இறந்த யானைகளுக்கு பிற யானைகள் அஞ்சலி செலுத்தும் வகையில் வட்டமாக நிற்கும். ஓராண்டு கழித்த பிறகு அந்த இடத்தில் சிதறிக்கிடக்கும் யானையின் எலும்புகளை கூட்டத் தலைவன் ஒன்று சேர்த்து வைக்கும். பிற யானைகள் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தபடியே இருக்கும். யானைகள் இறந்த உடல் மண்ணில் புதையுண்டு இருந்தாலும் அந்த இடத்தை தோண்டி எலும்புகளை சேகரிக்கும். பின்னர் கூட்டத் தலைவன் சைகை செய்தவுடன் பிற உறுப்பினர்கள் அந்த இடத்தைச் சுற்றி வட்டமாக சிறிது நேரம் சுழன்றபடியே இருப்பார்கள். இது கிட்டத்தட்ட மனிதர்கள் மெüன அஞ்சலி செலுத்துவது போன்று இருக்கும். சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை விட்டு அகன்று செல்லும். இது வேறு எந்த விலங்கினங்களிலும் காணமுடியாத அற்புதமான செய்கையாகும்.
 யானைகளின் சமூக அமைப்பு!
 மிகச்சிறிய யானைக் கூட்டம் என்றால் அதில் எட்டு யானைகள் வரை இருக்கும். மிகப்பெரிய யானை கூட்டத்தில் ஏறத்தாழ 80 யானைகளுக்கு மேல் இருக்கும். ஒரு பெண் யானைக்கு குட்டி பிறந்து விட்டால் அதை அந்தக் கூட்டத்தில் இருக்கும் அத்தனை யானைகளும் பாதுகாக்கும். ஆண் யானை குட்டி 12 வயது ஆனவுடன் தமது கூட்டத்தை விட்டு பிரிந்து செல்லும் அப்படி பிரிந்து செல்லும் ஆண் யானையை கூட்டத்தைச் சேர்ந்த எல்லா யானைகளும் தனது துதிக்கையால் தொட்டு வழியனுப்பும். இது ஒரு காணக்கிடைக்காத காட்சியாகும். தாம் நடமாடும் பாதையை யானைகள் ஒரு போதும் மறப்பதில்லை. அதிலும் கூட்டத் தலைவன் அடர்ந்த காடுகளில் நீர் கிடைக்கும் வழிகளை ஒரு போதும் மறக்காது.
 மிக வறண்ட கோடைக்காலத்தில் யானைகள் நீரைத் தேடி வெகுதூரம் அலையும். தரையில் நிலத்தடி நீர் இருப்பதை யானைகள் மிக எளிதாக கண்டுபிடிக்கும். அப்படி நீர் இருப்பதை கண்டுவிட்டால் தலைவன் யானை அந்த இடத்திலேயே படுத்துக்கொள்ளும். தமது கூட்டத்தினர் அனைவரும் வந்த பிறகு அந்த இடத்தை தமது தும்பிக்கை மற்றும் தந்தம் ஆகியவற்றால் மண்ணைத் தோண்டி நீரை கண்டெடுக்கும். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் யானைகள் தோண்டிய பள்ளத்தில் நீர் ஒரு ஊற்றுப் போல பெருகியபடியே இருக்கும். எத்தனை எடுத்தாலும் நீர் குறையவே குறையாது.
 யானைகள் தமது 50 வயது வரை குட்டிகளை ஈனும் . 70 முதல் 80 ஆண்டுகள் வரை உயிர் வாழும். யானைகள் அபாரமாக நீந்தும் தன்மை கொண்டவை. எத்தனை ஆழமான நீர் பரப்பிலும் தமது தும்பிக்கையை நீருக்கு மேலே நீட்டிக் கொண்டு நீந்தி சென்று விடும்.
 யானைகள் எதற்கு பயப்படும் தெரியுமா? எறும்புகளுக்கும் தேனீக்களுக்கும் மட்டும்தான்! எனவேதான் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு யானைகள் வராமல் தடுக்க தேனீக்களை வளர்க்கிறார்கள். இதன் மூலம் யானைகளால் ஏற்படும் ஆபத்துகள் குறைகின்றன. யானைகள் துதிக்கையை உயர்த்தினால் அவை முகர்ந்து பார்க்கின்றன என்று அர்த்தம். மிகக் கூர்மையான கண் பார்வை போலவே மிக அதிகமான மோப்ப சக்தியையும் கொண்டவை யானைகள் ஆகும். யானைகளின் உடல் அமைப்பில் அவற்றின் காதுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. முறம் போன்ற காதுகளை அசைத்துக்கொண்டே இருப்பதன் மூலம் அவை தமது உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்கின்றன. யானைகளின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்கும் ஒரே உறுப்பு அதன் தந்தங்கள் தான்! ஒரு ஆண்டுக்கு ஏழு அங்குலங்கள் வரை இவை நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கும்.
 இலக்கியங்களில் யானைகள்!
 இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இலக்கியங்கள் யானைகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியத்தில் களிறு புகர் முகம் கயவாய் பிடி வேழம், கைம் மா, ஒருத்தல், கயமுனி, கோட்டுமா, கயத்தலை, கயமா, பொங்கடி, பிணிமுகம், மதமா, தோல், கறையடி, உம்பல், வாரணம், நாகம், பூட்கை, குஞ்சரம், கரி என பல்வேறு பெயர்களால் யானைகள் அழைக்கப்படுகின்றன.
 யானைகள் குறித்த பழமொழிகள்:
 யானை அசைந்து தின்னும்
 வீடு அசையாமல் தின்னும்.
 யானை இருந்தாலும் ஆயிரம் பொன்
 இறந்தாலும் ஆயிரம் பொன்.
 யானை வரும் பின்னே
 மணியோசை வரும் முன்னே.
 சேற்றில் புதைந்த யானையைக்
 காக்கையுங் கொத்தும்.
 (திடீரென்று வறுமையில் வீழ்ந்த
 செல்வந்தனை ஏழையும் எள்ளி நகை
 ஆடுவான் என்பது இதன் பொருளாகும்).
 மானைக் காட்டி யானையை பிடிக்க முடியுமா?
 நூலைக் கட்டி மலையை இழுக்க முடியுமா?
 யானைப்படை!
 நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட படை "யானைப் படை'என்று அழைக்கப்படும். சங்க இலக்கியங்கள் யானைப் படைகளை பற்றி பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளன. மூவேந்தர்கள் நீங்கலாக "வேளீர்' என்று அழைக்கப்பட்ட குறுநில மன்னர்களும் யானைப்படை வைத்திருந்ததாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
 யானைப்படை வைத்திருப்பது பெருமையாக கருதப்பட்டது. தற்கால போர்களில் பீரங்கி வண்டிகள் செயல்பட்டதை போன்று அக்காலத்தில் யானைப் படைகள் செயல்பட்டன. வேலிகள், கூடாரங்கள், கருங்கல் சுவர்கள், மனிதக் கூட்டங்கள் போன்ற பெரிய தடைகளை அகற்ற பயன்பட்டன. தென்னிந்தியாவில்தான் யானைகள் முதன்முதலாக போருக்கு பயன்படுத்தப்பட்டன என தாமஸ் டிரவுட்மன்' என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
 தற்காலத்தில் நவீன இயந்திரங்களின் வரவால் போரில் மிருகங்களை பயன்படுத்துவது இல்லை. கடைசியாக யானைப்படை எந்த ஆண்டு போரில் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா? 1883ஆம் ஆண்டு சயாம் நாட்டு மன்னர் கம்போடியா நாட்டுடன் போர் புரிந்தார். அப்பொழுது யானைப்படை பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
 யானைகளின் சரணாலயம்!
 தோல், தந்தம் என பல்வேறு காரணங்களுக்காக யானைகள் வேட்டையாடப்பட்டன. இதனால் அவற்றின் எண்ணிக்கை கடந்த நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது. யானைகளை பாதுகாக்க தமிழக அரசு முதுமலையில் சரணாலயம் ஒன்றை அமைத்துள்ளது. தாய்லாந்து, இந்தோனேஷியா, ஆப்பிரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் யானைகள் சரணாலயம் அமைந்துள்ளது. புத்த மதத்தில் யானைகள் புனிதமாக கருதப்படுகின்றன. எனவே பண்டித ஜவஹர்லால் நேரு ஜப்பான் நாட்டிற்கு யானை குட்டி ஒன்றை பரிசாக அளித்தார்.
 தொகுப்பு: என்.லட்சுமி பாலசுப்ரமண்யம்,
 கடுவெளி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com