எடவலேத் கக்கட் ஜானகி அம்மா! (EDAVALETH KAKAT JANAKI AMMA)

"இந்தியாவின் முதல் பெண் தாவரவியல் வல்லுனர்', "தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி', "மிக்சிகன் பல்கலைக்கழகத்தால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட
எடவலேத் கக்கட் ஜானகி அம்மா! (EDAVALETH KAKAT JANAKI AMMA)

முத்திரை பதித்த முன்னோடிகள்!
"இந்தியாவின் முதல் பெண் தாவரவியல் வல்லுனர்', "தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி', "மிக்சிகன் பல்கலைக்கழகத்தால் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முதல் ஆசியப் பெண்மணி!' இவை யாவற்றையும்விட இந்தியாவில் விளையும் கரும்பு வகைகளில் இனிப்பைச் சேர்த்தவர்! ஆம்!... அவர்தான் ஜானகி அம்மா!
தாவரவியலில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் செல்கள் பற்றிய ஆராய்ச்சியாளராகவும் (CYTOGENETICIST) திகழ்ந்தார்! 
இந்தியாவின் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகைப் பூக்கும் தாவரங்களின் க்ரோமோசோன்களை ஆராய்ந்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும் தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. 
இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக இலண்டனில் உள்ள தாவரவியல் கழகம் (HORTICULTURE SOCIETY OF BRITAIN) வெள்ளை நிறத்தில் பூக்கும் சிறிய மக்லோனியா பூ இனம் ஒன்றிற்கு "மக்னோலியா கோபஸ் ஜானகி அம்மா' என்று இவரது பெயரைச் சூட்டியுள்ளது! 
இ.கே.ஜானகி அம்மா கேரளத்தில் உள்ள தலைச்சேரியில் 1897 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை திவான் பகதூர் திரு இ.கே.கிருஷ்ணன் துணை நீதிபதியாக அந்நாளைய மதராஸ் மாகாணத்தில் பதவி வகித்தார். அவர் தாவரங்களை மிகவும் நேசித்தார். தனது வீட்டில் அரிய வகைத் தாவரங்கள் நிரம்பிய தோட்டம் ஒன்றை நிர்வகித்து வந்தார். இதனால் சிறுவயது முதலே ஜானகி அம்மா தாவரங்கள் மீது அதிக ஆர்வம் காட்டினார். 
சென்னை இராணி மேரிக் கல்லூரியில் இளங்கலை தாவரவியலும், பிரசிடென்ஸி கல்லூரியில் ஹானர்ஸ் டிகிரியும் 1921 ஆம் ஆண்டு முடித்தார். சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது அவருக்கு மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் பயில வாய்ப்புக் கிடைத்தது. 
அந்த நேரத்தில் அவரது பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கல்வியை மிகவும் நேசித்த அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். மிக்சிகன் சென்றார். 1925 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். அங்கேயே தமது ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து "முனைவர்' பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய அவர் திருவனந்தபுரத்தில் மஹாராஜா அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறைப் பேராசிரியராக 1932 முதல் 1934 வரை பணி புரிந்தார்.
தமது ஆராய்ச்சிப் பணியை ராஜினாமா செய்துவிட்டு கோயம்புத்தூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த சமயத்தில் "பப்புவா நியூ கினியா' என்ற நாட்டில் விளையும் "சக்காரம்' என்ற கரும்பு வகை மட்டுமே அதிக இனிப்பைக் கொண்டிருந்தது. பிற நாடுகளில் (இந்தியா உட்பட) விளையும் கரும்புகள் அதிக இனிப்பு இல்லாமல் இருந்தன. மக்கள் பெரும்பாலும் பனை வெல்லத்தையே இனிப்புக்காகப் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. வெளிநாட்டில் தாம் பயன்படுத்திய வெள்ளை சர்க்கரையை இந்தியாவிலேயே தயாரித்தால் சிறப்பாக இருக்கும் என்று திட்டமிட்டார்.
எனவே கரும்பு செல்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். "சக்காரம்' கரும்புச் செல்களை இந்தியக் கரும்புச் செல்களோடு ஒன்றிணைத்து ஒரு புதிய வகையை உருவாக்கினார் ஜானகி அம்மா! அது அதிக இனிப்புச் சுவையுடன் இருந்தது. இந்திய தட்பவெப்ப நிலையைத் தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருந்தது. அதிக மகசூலும் தந்தது.
டாக்டர் சர்.சி.வி.இராமன் தாம் தோற்றுவித்த இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு ஆராய்ச்சியாளராக ஜானகி அம்மாவையும் சேர்த்துக் கொண்டார். சிறிது காலத்திற்குப் பிறகு லண்டன் சென்றார். அங்குள்ள "ஜான் இன்ஸ் தோட்டக்கலைத்துறை' நிறுவனத்தில் உதவி செல் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தார். 1940 முதல் 1945 வரை அங்கு இருந்தார். இரண்டாம் உலகப்போர் நடந்த காலம் அது! இரவில் ஜெர்மானிய விமானங்கள் குண்டு பொழிந்தபடியே இருந்தன. குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கும்பொழுது கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்வார். பகல் பொழுதுகளில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபடி இருந்தார் எதற்கும் அஞ்சாத இந்தப் பெண்மணி!
1945 ஆம் ஆண்டு "தாவரங்களின் படத் தொகுப்பு' எனற மாபெரும் நூல் தொகுப்பை புகழ் பெற்ற தாவரவியலாளர் சி.டி.டார்லிங்டன் என்பவரோடு இணைந்து எழுதி வெளியிட்டார். 
இம்மாமேதை தன் 87 ஆவது வயதில் 7-2-1984 அன்று காலமானார். 

அறிந்து கொள்வோம் வாருங்கள்!
• 1951-ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் நேருவின் வேண்டுகோளின்படி கொல்கத்தாவில் உள்ள "பொடானிகல் சர்வே ஆஃப் இந்தியா' வில் முதன்மை அதிகாரியாகப் பணிபுரிந்தார். அனேகமாக இந்தியாவின் அனைத்துக் காட்டுப் பகுதிகளுக்கும் சென்று ஆராய்ச்சிகள் செய்து இந்தியத் தாவரங்கள் பற்றிய தொகுப்பை வெளியிட்டார். 
• 1955 ஆம் ஆண்டில் பிரின்ஸ்டனில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மாநாட்டில் சொற்பொழிவாற்ற "வென்னர் கிரென் ஃபவுண்டேஷன்' அமைப்பால் அழைக்கப்பட்டார்! அவ்வாறு அழைக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி இவரே ஆவார்!
• இவரது அரிய சேவைக்காக இவருக்கு 1977 ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட்டது. 
• மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் வளர்ப்பு அமைச்சகம் 2000 ஆம் ஆண்டு இவரது பெயரால் ஒரு பெருமை மிகு விருதை "டெக்ஸôனமி' துறைக்கு வழங்கி வருகிறது. 
• "ஜம்மு-தாவி'யில் உள்ள மாபெரும் தாவரவியல் பூங்காவிற்கு இச்சாதனையாளரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அங்கு 25,000 த்திற்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இவரால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டவை ஆகும்!
தொகுப்பு: லக்ஷ்மி பாலசுப்ரமணியன், 
கடுவெளி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com