

எல்லாத் தொழில்களுக்கும் ஆதாரமாய் விளங்கும் ஒரே தொழில்! எல்லா நாடுகளும் ஈடுபடும் ஒரே தொழில்! அதுவே உழவுத்தொழில் எனப்படும் வேளாண் தொழிலாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் "சுழன்றும் ஏர் பின்னது உலகம்!' என்றார். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!' என்றார் பாரதியும்!
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதும் உற்பத்தியை பெருக்குவதும் எல்லா நாடுகளுக்கும் அவசியமான ஒன்றுஆகும்! எனவே 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் தோன்றின. இதன் காரணமாக நிறைய வேதியியல் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமது ஆராய்ச்சிக்கு பயன்பட்டது போக மீதமிருந்தவற்றை விஞ்ஞானிகள் வயல் பகுதிகளில் கொட்டினர். சில நாட்கள் கழித்து பார்த்த போது அங்கு ஒரு அதிசயம் நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. அதன் அருகே வளர்ந்திருந்த செடிகள் பூச்சி தாக்குதல் ஏதுமின்றி செழிப்பாக வளர்ந்திருந்தன. இதன்மூலம் இந்த ரசாயனங்கள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிக்கவும் பயன்படும் என்பதையும் அறிந்து கொண்டனர். எனவே உணவுப் பொருள் விளையும் வயல்களில் அவற்றைத் தெளித்து பார்த்தனர்.
இப்படித்தான் இரசாயன உரங்களும் பூச்சிகொல்லிகளும் மனிதனுக்கு அறிமுகமாயின. "பசுமை புரட்சி' என்ற பெயரில் உலக நாடுகள் அனைத்தும் இவற்றின் பயன்பாட்டை ஆதரித்தன.
ஆனால் இரண்டே இரண்டு பேர் மட்டும் இந்த செயற்கை உர பயன்பாட்டை தீவிரமாக எதிர்த்தனர். ஒருவர் ஜப்பானை சேர்ந்த வேளாண் விஞ்ஞான "மாசனோபு ஃபுக்குவாக்கா'. மற்றொருவர் நம் தமிழகத்தை சேர்ந்தவர். அவர்தான் "இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்' ஆவார்.
இவர் தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள "இளங்காடு' என்னும் சிற்றூரில் 6.4.1938 அன்று பிறந்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலை படிப்பை கற்றார். 1960 ஆம் ஆண்டு கோவில்பட்டியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்தார். பிறகு அங்கிருந்து விலகி மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்கு 1969ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார். இச்சமயத்தில் ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி "மசனோபு' அவர்களில் ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு உத்திகள் இவரை வெகுவாக கவர்ந்தன.
ஒருமுறை பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில்லுக்குச் சென்றார் இவர். அங்கிருந்த "பெர்னார்டு'என்ற ஆங்கிலேயர் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து இவரிடம் உரையாடினார். மேலும் தம்மிடம் இருந்த இயற்கை விவசாயம் குறித்த பல நூல்களை இவருக்கு பரிசளித்தார். அதன் மூலம் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் பரப்புவதே தமது நோக்கம் என முடிவு செய்தார்.
உணவுப் பொருள் உற்பத்திக்கு இயற்கை விவசாய முறைகளாகிய மாற்று பயிர் சுழற்சி மற்றும் இயற்கை உரப் பயன்பாடு போன்றவையே சிறந்தது என்பதை தான் செல்லும் இடம்தோறும் பரப்பி வந்தார்.
பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நெல் மற்றும் காய்கறி விதைகளின் பயன்பாடு, வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்தல் ,விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல், நகர மயமாக்கல், தொழில் மயமாக்கல் மற்றும் மீதேன் வாயு எடுத்தல் போன்ற பல திட்டங்களை எதிர்த்தார். இவையாவும் "கண்ணை விற்று சித்திரம் வாங்குதற்கு சமம்!' என்று கூறினார்.
மக்களிடம் இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பலமுறை நடை பயணங்களை மேற்கொண்டார்.
1998 இல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாரம்பரிய நெல் மற்றும் பிற பயிர் வளர்ப்பின் நன்மைகள் குறித்தும், இயற்கை வேளாண்மையின் அவசியத்தையும் வலியுறுத்தி 2002ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணை முதல் கொடுமுடி வரை 25 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.
2003 ஆம் ஆண்டு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக பூம்புகார் முதல் கல்லணை வரை 25 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொண்டார். இவர் விவசாயிகளிடம் எளிய மொழியில் அவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்குவார். விவசாயத்தில் இயந்திரங்களின் பயன்பாடு பற்றி இவரிடம் சில விவசாயிகள் விவாதித்தனர்.
"நான் நவீன தொழில்நுட்பத் திற்கு எதிரானவன் அல்ல. டிராக்டர் நல்லாத்தான் உழும். ஆனால் சாணி போடுமா ?' என்று அவர்களிடம் கேட்டார். இயற்கை விவசாயத்தை மக்களிடம் பரப்ப வேண்டும் என்பதற்காக தான் பார்த்து வந்த அரசுப் பணியை ராஜிநாமா செய்தார். மரபணு மாற்றுப் பயிர்கள் அதிக விளைச்சலை கொடுத்தாலும் அவை மனிதனுக்கு கேட்டை விளைவிக்கும் என்பதை நிரூபித்தவர் இவரே ஆவார். பாரம்பரிய பயிர்கள் அந்தந்த பகுதி மக்களுக்காகவே இயற்கை வழங்கிய வரம் எனக் கூறினார்.
இன்றைக்கு இயற்கை விவசாயம் குறித்து மக்களுக்கு சிறிதளவேனும் விழிப்புணர்வு உள்ளதென்றால் அதற்கு காரணம் நம்மாழ்வாரே ஆவார். உழவர் ஈட்டும் ஒவ்வொரு பொருளும் பயன்படும் என்பதை குறிக்க "நுனி வீட்டுக்கு! நடு மாட்டுக்கு! அடி மண்ணுக்கு!' என்று தாம் செல்லும் இடங்களில் எல்லாம் கூறி வந்தார்.
கரூர் மாவட்டத்தில் "வானகம்' என்னும் பண்ணையை ஆரம்பித்தார் .அதில் சுமார் 6000 இளைஞர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி அளித்தார்.
இம்மாமனிதர் பட்டுக்கோட்டை அருகே "அத்தி வெட்டி' என்ற இடத்தில் மீதேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்தபோது உடல்நலக் குறைவு காரணமாக 30.12.2013 அன்று காலமானார்.
அறிந்து கொள்வோம் வாருங்கள்.
(1) நம்மாழ்வார் மிகவும் நேசித்த இந்தியர் திரு ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யா ஆவார். இவர் மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனராக இருந்தார். இவரே இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகளில் கைகளுக்கு செல்லாமல் பாதுகாத்தவர் ஆவார்.
(2) ஒற்றை நாற்று நடவு முறை என்ற சாகுபடி முறையை ஆப்பிரிக்காவின் மடகாஸ்கரில் பயன்படுத்துகின்றனர். இம்முறை 1960ஆம் ஆண்டு தான் உலக மக்களின் கவனத்துக்கு வந்தது. இதை பல நாடுகளும் பாராட்டின. ஆனால் இம்முறை 2,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது என்ற செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தியவர் இவரே ஆவார்.
(3) இவர் காந்தியைப் போலவே மேலாடையை துறந்தவர். கடும் குளிரிலும் இவர் மேல்சட்டை அணிந்ததில்லை.
(4) குடும்பம், இந்திய அங்கக வேளாண்மை சங்கம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம், வானகம்,தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம் போன்ற பல அமைப்புகளை இவர் நிறுவியுள்ளார்.
(5) இவர் "தாய் மண்', "உழவுக்கும் உண்டு வரலாறு', "தாய் மண்ணே வணக்கம்', "நெல்லை காப்போம்', "இனி விதைகளே பேராயுதம்', "என் நாடுடைய இயற்கையே போற்றி', 'களை எடு'... போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
(6) தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் இவருக்கு "சுற்றுச்சூழல் சுடரொளி' என்ற பட்டத்தையும், திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகம "மதிப்புறு முனைவர்' பட்டமும் வழங்கியுள்ளன.
தொகுப்பு: என்.லக்ஷ்மி பாலசுப்ரமணியன்,
கடுவெளி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.