கருவூலம்: திருநெல்வேலி மாவட்டம்! அருவிகள்!

தாமிரபரணி, மலையிலிருந்து கீழிறங்கும்போது பாணதீர்த்த அருவி, கல்யாண தீர்த்த அருவி, அகஸ்த்தியர் அருவி என 3 இடங்களில் ஆண்டு முழுவதும் கீழிறங்கும் நீர்வீழ்ச்சிகளாக கீழிறங்குகின்றன.
கருவூலம்: திருநெல்வேலி மாவட்டம்! அருவிகள்!


தாமிரபரணி, மலையிலிருந்து கீழிறங்கும்போது பாணதீர்த்த அருவி, கல்யாண தீர்த்த அருவி, அகஸ்த்தியர் அருவி என 3 இடங்களில் ஆண்டு முழுவதும் கீழிறங்கும் நீர்வீழ்ச்சிகளாக கீழிறங்குகின்றன. மாஞ்சோலை வனப்பகுதியில் மணிமுத்தாறு உற்பத்தியாகி மணிமுத்தாறு அருவியாகக் கீழிறங்குகிறது! 

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலம் குற்றாலம் ஆகும், செண்பகா தேவி அருவி, தேனருவி, பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலும் அருவி, பழத்தோட்ட அருவி என மலையின் பல பகுதிகளிலும் அருவிகள் கீழிறங்குகின்றன.  இவை காசிமேஜர்புரத்தில் சிற்றாறாக உருவாகிறது. மேலும் சில நதிகளை இணைத்துக்கொண்டு தாமிரபரணியுடன் கலக்கிறது!

களக்காடு செங்கல் தேரி!

புலிகள் காப்பகத்திற்குட்பட்ட களக்காடு மலை வனப்பகுதியில் உள்ளது செங்கல்தேரி. அழகிய கோடை வாசஸ்தலம். பல அருவிகளும், நீரோடைகளும் உள்ள பகுதி இது! செப்டம்பர் முதல் மார்ச் வரை செங்கல்தேரியின் நல்ல பருவ காலம்.  இப்பகுதியில் குளிப்பதற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 

அணைகள்!

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு என 11 நேர்த்தேக்கங்கள் உள்ளன. இந்த அணைப்பகுதிகள் அனைத்துமே சுற்றுலாத்த தலங்களே! 

கங்கைகொண்டான் மான்கள் சரணாலயம்!

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டானில் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் புள்ளிமான்கள் சரணாலயம் உள்ளது. மாவட்ட வனத்துறையால் பாதுகாக்கப்படும் இச்சரணாலயத்தில் ஏராளமான மான்கள் உள்ளன. மான்களை வேட்டையாடும் மிருகங்கள் இங்கு இல்லை. 

மாவட்ட அறிவியல்  மையம்!

1987 இல் நிறுவப்பட்ட இந்த மையம் பெங்களூரிலுள்ள "விஸ்வேஸ்வரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகத்தின் துணைப் பிரிவாகும். சுமார் 5.7 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூங்கா, கோளரங்கம், சக்தி வாய்ந்த நுண் தொலைநோக்கி, அறிவியல் விளக்கக் காட்சிகள் என பலவகைப்பட்ட அரங்குகள் உள்ளன. 

குற்றாலம் தொல்பொருள் அருங்காட்சியகம்!

தென் மாவட்டங்களில் மதுரைக்கு அடுத்ததாக தொல்லியல் துறை அருங்காட்சியகம் குற்றாலத்தில் மட்டுமே உள்ளது.

கற்காலக் கருவிகள், சுடுமண் சிற்பங்கள், மரச்சிற்பங்கள், ஓலைச் சுவடிகள், பழமையான கடவுள் சிலைகள் உள்ளிட்ட பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்!

இந்த அருங்காட்சியகம் பாளையங்கோட்டையில் உள்ளது. கலை, பண்பாடு, நாகரிகம், வரலாறு, போன்ற அனைத்தையும் விளக்கும் பல பொருட்களும், நாணயங்களும், சிற்பங்களும், கருவிகளும், சான்றுகளும் நிறைந்து இருக்கும். 
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்!

நான்குநேரி வட்டம் கூந்தன்குளத்தில் 132 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் வசித்து வருகின்றன. ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை பல நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வந்து தங்கிக் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்துச்

செல்கின்றன.  கூழைக்கடா, பூநாரை, பாம்புத்தாரா, உள்ளிட்ட 247 வகைப் பறவையினங்களை இங்கு காணலாம். 

இது போன்றே வாகைகுளம் பகுதியிலும் நிறைய பறவைகள் வந்து செல்கின்றன.  

பூலித்தேவன் நினைவு மண்டபம்!

தமிழகத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு முன்னோடியாக நடந்த பாளையக்காரர்களின் பல போர்களில் பூலித்தேவனே முதலாவது சுந்திரப் போராட்ட வீரர்! கட்டபொம்மனுக்கும் முன்னதாக ஆங்கிலேயரை எதிர்த்தவர். ஆங்கிலேயருக்கு வரி வசூலிக்கும் உரிமை இல்லை என உறுதிபடக் கூறியவர். சிவகிரி வட்டத்தில் உள்ள நெற்கட்டும் சேவலில் இருக்கும் இவருடைய இல்லம் நினைவு இல்லமாக அரசால் பராமரிக்கப்படுகிறது. 

வ.உ.சிதம்பரனார் மணி மண்டபம்!

சுதந்திரப் போராட்ட வீரரும், கப்பலோட்டிய தமிழரும், செக்கிழுத்த செம்மலுமான வ.உ,சிதம்பரனார் நினைவாக அவரை கெளரவித்துப் போற்றும் வகையில் நெல்லை நகரத்தில் 2005 இல் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அவருடைய உருவச் சிலையும், அக்கால புகைப்படங்களும், சிறு நூலகமும், தியான மண்டபமும் உள்ளன. 

வாஞ்சிநாதன் நினைவு மண்டபம்!

வாஞ்சிநாதன் (1886 - 1911) சுதந்திரப் போராட்டத்தில் புரட்சிப்பாதையில் தீவிரமாக ஈடுபட்டவர்! இவர் திருநெல்வேலி மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னைத் தானை சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார். இவர் நினைவைப் போற்றும் வகையில் மணியாச்சி ரயில் நிலையத்தில் "வாஞ்சி மணியாச்சி' (இன்றைய தூத்துக்குடி மாவட்டம்) என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் (நெல்லை மாவட்டம்) இவருக்கு மணி மண்டபுமும் உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி அல்வா!

நெல்லையின் தனிப்பெருமையையும், தனிச் சுவையுடனும் திகழ்கிறது இந்த திருநெல்வேலி அல்வா! இம்மாவட்டத்தின் சிறப்புமிக்க சுவையான அடையாளமாக இந்த அல்வா இருக்கிறது!

பழைய இரும்பு பொருட்கள் சிற்பங்கள்!

பழைய ஆட்டோ மொபைல் உதிரிபாகங்களால் உருவாக்கப்பட்டுள்ள 7 விலங்குகளின் சிற்பங்கள் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 

தாமிரபரணி புஷ்கர விழா!

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புஷ்கரத் திருவிழா! இந்த ஆண்டு அக்டோபர் 12 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. விழாவின் போது தாமிரபரணி அன்னையின் சிலை குறுக்குத்துறை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

அண்ணா விளையாட்டு அரங்கம்!

இங்கு சர்வதேச தரத்தில் ஹாக்கி  மைதானம், தடகள ஓடுதளம்,நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம், வாலிபால், கூடைப்பந்து மைதானங்கள் தனித்தனியாக உள்ளன. ஆண்டுதோறும் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் என 50க்கும் மேற்பட்ட போட்டிகள் நட்டப்படுகின்றன. 

நெல்லையின் நுழைவு வாயில் ஆர்ச்!

இங்கிலாந்தின் மன்னராக 5ஆம் ஜார்ஜ் பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆனபோது அதனை "சில்வர் ஜூப்ளி'யாக காலனி ஆதிக்க நாடுகளில் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக இங்கிலாந்து கோட்டையின் நுழைவு வாயில்போல் நெல்லையில் "மன்னர் ஜார்ஜ், ராணி மேரி நினைவு ஆர்ச்' கட்டப்பட்டுள்ளது. 4 தூண்களுடன் சுமார் 30 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கம்பீரமான ஆர்ச் 1936 இல் திறக்கப்பட்டது. 

புத்துணர்ச்சி ஊட்டும் இயற்கை எழிலுடனும், பல ஆன்மீகத் தலங்களுடனும், வரலாற்றுச் சுவடுகளுடனும் கம்பீரமாக இருக்கும் இம்மாவட்டம் அனைவரும் சுற்றிப் பார்க்க வேண்டிய மாவட்டம்!

முற்றும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com