அரங்கம்: மாடித்தோட்டம்!

கணவரைப் பார்த்து) இதோ பாருங்கள்... அடுத்த வாரம் முதல் நம்ம குழந்தைகள் ராஜாராமுக்கும், சித்ராவுக்கும் கோடை விடுமுறை ஆரம்பம்...
அரங்கம்: மாடித்தோட்டம்!


காட்சி -1
இடம் - ராஜசேகர் வீடு
 மாந்தர் - ராஜசேகர், கற்பகம், ராஜாராம், சித்ரா

கற்பகம் : (கணவரைப் பார்த்து) இதோ பாருங்கள்... அடுத்த வாரம் முதல் நம்ம குழந்தைகள் ராஜாராமுக்கும், சித்ராவுக்கும் கோடை விடுமுறை ஆரம்பம்...
ராஜசேகர்: (ஆச்சரியமாக) அப்படியா?... அதுக்குள்ள சம்மர் லீவு வந்தாச்சா!... 
கற்பகம்: ஆமாம்!... நான் சொல்ல வந்தது... குழந்தைகளை லீவுக்கு எங்கேயாவது அழைத்துப் போகலாமா?...
ராஜசேகர்: சித்தி பசங்க இரண்டுபேரும் லீவுக்கு இங்க வர்றதா சொன்னாங்களே.... மறந்துட்டியா?... 
கற்பகம்: குழந்தைகளை நாம எங்கேயும் அழைச்சிக்கிட்டுப் போனதே இல்லை... பொழுதுக்கும் நம்மைச் சுற்றியே வர்றாங்க.... 
ராஜசேகர்: அவ்வளவுதானே!..... கவலையை விடு!.... சித்தி பசங்களும் வரட்டும்!.... எல்லோருமா "குளு குளு' கொடைக்கானலுக்குப் போய் வரலாம்!
ராஜாராம்: (வந்துகொண்டே) அப்பா!.... கொடைக்கானலா போகப்போறோம்.... நிஜமாவா?
கற்பகம்: அப்பா இப்பத்தான் திருவாய் மலர்ந்து சொல்லியிருக்கார்!.... நீ அதுக்குள்ளே ஊரெல்லாம் டமாரம் அடிச்சுடாதே!.... திருஷ்டி பட்டு கடைசியிலே ஒண்ணுமில்லாத புஸ்வாணமாயிடும்!... 
சித்ரா: எங்கம்மா போகப்போறோம்?...
கற்பகம்: நீயும் கேள்வி கேட்டுட்டியா?.... ஒண்ணுமில்லே.... உங்களுக்கெல்லாம் லீவு விட்டவுடனே ஊருக்குப் போகலாம்னு அப்பா சொல்லியிருக்கிறார்.... 
ராஜசேகர்: சித்ரா கண்ணு!.... நாம எல்லாரும் கொடைக்கானல் போகலாம்... சரியா?
சித்ரா: ஓகேப்பா!.... தேங்க்யூ!

காட்சி - 2
இடம் - ராஜசேகர் வீடு
மாந்தர் - ராஜசேகர், கற்பகம், ராஜாராம், சித்ரா, ஸ்ரீகாந்த், சரண்யா

(பள்ளிக்கூடம் கோடை விடுமுறைக்கு மூடியவுடன் ஸ்ரீகாந்த், சரண்யாவின் அம்மா அவர்களை ராஜசேகர் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விட்டார். ஒரு வாரம் கழித்து எல்லோரும் கொடைக்கானல் புறப்பட்டனர். அங்கு ஆறு நாட்கள் தங்கி மகிழ்ச்சியுடன் திரும்புகின்றனர்)

சித்ரா: இங்கே வெயில் எப்படிக் கொளுத்துகிறது..... கொடைக்கானலில் எப்படி "குளுகுளு' ன்னு இருக்கு?... 
சரண்யா: ஆமாம்.... மலையிலே உயர ஏற, ஏற குளிர் எப்படி அதிகமாச்சு பார்த்தியா?
ஸ்ரீகாந்த்: ராத்திரியிலே என்ன குளிர்!.... ஏசியே இல்லாம நடுக்குற குளிர்!.... 
ராஜாராம்: அங்கேயே இருந்துடலாம் போல இருந்தது.... அம்மாவும், அப்பாவும்தான் அவசரப்பட்டு அழைச்சிண்டு வந்துட்டாங்க....
சித்ரா: உனக்கென்னடா.... எவ்வளவு செலவு ஆச்சுன்னு பார்த்தியாடா..... தங்கறதுக்கு, சாப்பிடறதுக்கு, போட்டிங் போக, குதிரை சவாரி செய்ய.... அப்படி, இப்படின்னு தொட்டதுக்கெல்லாம் பணம்!.... பாவம்டா அப்பா!... 
ராஜாராம்: நாம அங்கேயே ஒரு வீடு வாங்கிட்டா ஜாலியா எப்பவுமே இருக்கலாம் .... இல்லையா சித்ரா?
சித்ரா: நீ படிச்சுட்டு வேலைக்குப் போய் வீடு என்ன பெரிய பங்களாவே வாங்கு....
ஸ்ரீகாந்த்: கொடைக்கானலிலே நாம் பார்த்த பூக்கள் கண்ணுலேயே நிக்குது....எவ்வளவு விதவிதமான வண்ணங்கள்?.... ஒரே இடத்திலே அவ்வளவு பூக்களைப் பார்த்ததும் தேவலோகம் போல இருந்தது!.... 
சரண்யா: நீ ஆசைப்பட்டு வாங்கிண்டு வந்திருக்கிற பூச்செடி விதைகளை தொட்டியிலே போட்டு வளர்த்தா சூப்பரா பூக்கும்னு சொன்னாங்க இல்லே!.... 
சித்ரா: அதெல்லாம் குளிர்ப்பிரதேசப் பூக்கள்.... அங்க பூத்துக் குலுங்கிற மாதிரி இங்கு வருமாங்கிறது சந்தேகம்தான்!....
ராஜசேகர்: (வந்தவாறே) கவலையே வேண்டாம்.... நம்ம ஊர்லே அருமையா பூக்கற குண்டுமல்லி, மல்லி, ஜாதிமல்லி, செம்பருத்தி, கனகாம்பரம், செவந்தி, அரளி, சம்பங்கின்னு எல்லாவற்றையும் வெச்சு வளர்த்துட்டா போச்சு!
கற்பகம்: (கேட்டுக்கொண்டே வந்து) பாடுபட்டு வெச்சு வளர்க்கறதை வீட்டுக்கு உபயோகப்படுற மாதிரி காய்கறிப் பயிரைப் போடலாமே.... 
ராஜசேகர்: நீ விரும்பற மாதிரி பூச்செடிகளோடு காய்கறிச் செடிகளையும் வெச்சுட்டா போச்சு!.... கவலையை விடு!
(எல்லோரும் சாப்பிடக் கிளம்புகிறார்கள்)

காட்சி - 3
இடம் - ராஜசேகர் வீடு
மாந்தர் - ராஜசேகர், கற்பகம்.

(குழந்தைகள் நால்வரும் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடச் சென்றிருந்தனர். ராஜசேகர், பூந்தொட்டிகள், மண், செம்மண், மணல், எருமண், இயற்கை உரம், பூவாளி, பூச்செடிகள், காய்கறி பயிர்களின் நாற்றுகள் ஆகியவற்றை வண்டியில் ஏற்றி கூடவே வீடு வந்து சேர்கிறார். )
ராஜசேகர் : கற்பகம்,....  மொட்டை மாடிக் கதவை திறந்துவிடு.... இதெல்லாத்தையும் மாடியிலே கொண்டு போய்ச் சேர்த்திடலாம்...
கற்பகம்: (எல்லாவற்றையும் பார்த்துவிட்டு) என்ன, ஏகமா வாங்கித் தள்ளிட்டீங்க....
ராஜசேகர்: மாடியிலே விசாலமா இடம் இருக்கு....  நாலு குழந்தைகள் ஒண்ணா சேர்ந்தா விளையாடவும் செய்வாங்க.... சண்டையும் போட்டுப்பாங்க.... மாடியிலே தோட்டத்தை அமைத்துக் கொடுத்துட்டா தண்ணீர் விடுகிறது.... அது அது இதுன்னு கவனம் திரும்பிடும்.... இல்லையா?
கற்பகம்: மத்தியானமே பயங்கர சத்தம்!.... கூச்சல்!.... சண்டை.... ஒண்ணுக்கு ஒண்ணு அடிச்சுக்காத குறை.... 
ராஜசேகர் : அதனாலேதான் இப்படி யோசித்து வாங்கிண்டு வந்தேன்.... 
(வண்டிக்காரர் ஒவ்வொன்றாக மொட்டை மாடியில் ஏற்றி முடிக்கிறார்)
ராஜசேகர்: நாளைக்கு மாடித்தோட்ட அமைப்பாளர் வர்றதுக்குள்ளே நீ வந்துடு.... ஏழு ஏழரை மணிக்குள்ளே இங்கே இருக்கிற மாதிரி வந்துடு.... அவர் சொல்றபடி வெயிலுக்கு முன்னாடி தொட்டிகளில் கலந்த மண்ணை நிரப்பி, செடிகளை நட்டு தண்ணீர் விட்டுடலாம்.... சரியா?...
(வண்டிக்காரர் சரியென்னு கூறிவிட்டுக் கிளம்புகிறார்)

காட்சி 4
இடம் - மொட்டை மாடி

மாந்தர் - ராஜசேகர், கற்பகம், ராஜாராம், சித்ரா, ஸ்ரீகாந்த், சரண்யா, மாடித்தோட்ட அமைப்பாளர்.
(காலையில் மாடித்தோட்ட அமைப்பாளர் மேற்பார்வையோடு எல்லாச் செடிகளும நடப்படுகின்றன.)

சித்ரா:  அப்பா!.... எவ்வளவு தொட்டிகள்! செடிகள்!... ரொம்ப விலையாப்பா?...
ராஜசேகர்: அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.... நீங்க எல்லோரும் இந்தத் தொட்டிகளில் நட்டுருக்கிற பூச்செடிகளை, காய்கறிச் செடிகளை வாடி விடாம தினமும் பூவாளியாலே தண்ணி ஊத்தி வளர்க்கணும்.... காப்பாத்தணும்....
நால்வரும்: நிச்சயமா நாங்க செடிகளைக் காப்பாத்துவோம்!.... 
கற்பகம்: ரொம்ப சந்தோஷம்!....ஒத்துமையா செடிகளுக்கு தண்ணி விடணும்.... ஆளுக்கு நாலு, நாலு செடிகள் வீதம் தண்ணி ஊத்திட்டு அடுத்தவர்களுக்கு சான்ஸ் தரணும்.... 
ராஜாராம்: நான் செடியை வாட விடமாட்டேன்.... ஏன் தெரியுமா?... "வாடிய பயிரைக் கண்டு வாடினேன்' என்று வள்ளலார் சொல்லி வருந்தியதை எங்க தமிழாசிரியர் சொல்லி, எல்லோரும் செடிகளையும், மரங்களையும், கொடிகளையும் பாதுகாக்க வேண்டுமென பாடம் எடுத்தார்.....அவரோட வார்த்தைகளை நான் மறக்கவே மாட்டேன்...
ராஜசேகர்: குட்!.... நீ செடிகளின் மீது வைத்திருக்கிற ஆசையை மனசுல வெச்சுண்டுதான் இவைகளை வாங்கினேன்....
ராஜாராம்: தாங்க்யூப்பா!....
மாடித்தோட்ட அமைப்பாளர்: ஐயா!.... நான் வருகிறேன்..... ஒகு வாரம் கழிச்சு மறுபடி வர்றேன்.... வெயில் அதிகமா இருக்கு....செடிகள் பத்திரம்!....
ராஜசேகர்: உங்க முதலாளியிடம்  நாளைக்கு வந்து பார்க்கறேன்னு சொல்லுங்க....
மாடித்தோட்ட அமைப்பாளர்: சரிங்க ஐயா!.... செடிகளை கவனமாப் பாத்துக்குங்க...
(எல்லோரும் சரி என்கிறார்கள்)

காட்சி - 5
இடம் - ராஜசேகர் வீடு,   மாந்தர் - ராஜசேகர்,
கற்பகம், ராஜாராம், சித்ரா, ஸ்ரீகாந்த், சரண்யா.

(செடிகள் நட்டு ஐம்பது நாட்களுக்கு மேலாகி விட்டது. தொட்டியில் எல்லாச் செடிகளும் நன்கு உயரமாக தழைத்து வளர்ந்து விட்டன. செம்பருத்தி, அரளி, சம்பங்கி, செவந்தி ஆகிய பூச்செடிகள் பூக்க ஆரம்பித்துவிட்டன. வெண்டை, கத்தரி, மிளகாய், தக்காளி ஆகியவை காய்க்கத் தொடங்கி விட்டன. )

ராஜாராம் : மொட்டை மாடி இப்ப பார்க்கறதுக்கு படு ஜோரா இருக்கு!
சித்ரா: என்ன பசுமை!
ஸ்ரீகாந்த்: காற்றடிக்கும்போது குளிர்ச்சியா இருக்கு!.... 
சரண்யா: வண்ண, வண்ணப் பூக்கள்!

(குழந்தைகள் குதூகலத்தோடு செடிகளை வலம் வந்து பேசிக்கொள்வதைக் கேட்டு கற்பகமும், ராஜசேகரும் ரசிக்கின்றனர்.)

சித்ரா: எங்க தமிழ் மிஸ், மாடித்தோட்டம் அமைப்பது பற்றி ஒரு பீரியட் பாடம் எடுத்தார்.... முடிந்தவர்கள் தோட்டம் அமையுங்கள் என்றும் சொன்னார். இவ்வளவு சீக்கிரம்  நம்ம வீட்டிலேயே மாடித்தோட்டம் அமையும்னு எதிர்பார்க்கவே இல்லே.... அப்பாவுக்குத்தான் நன்றி சொல்லணும்!....
ராஜசேகர்: லீவு நாளிலே போய் படிங்கன்னு சொன்னா கேட்க மாட்டீங்க..... ஓயாது விளையாடினாலும் போரடிக்கும்!.... அதனாலே உங்க எல்லாருக்கும் என்ன வேலையைக் கொடுத்தா ஒற்றுமையா செய்வீர்கள்னு யோசிச்சபோது இது என் மனசுக்குப் பட்டது!.... அதுவே வெற்றிகரமா முடிந்தும் விட்டது!
ராஜாராம், சித்ரா: எங்களுக்கு இந்த சம்மர் லீவிலே கிடைத்த மாடித்தோட்ட அனுபவம் ரொம்பவே புதுசு!... பூச்சிக் கொல்லி மருந்து அடிக்காம இயற்கை உரத்தைக் கொண்டு வளர்த்து ஆளாக்கிய செடிகளிலிருந்து ஆர்கானிக் பூக்களையும், காய்கறிகளையும் உற்பத்தி செய்த பெருமைக்கு எங்க நால்வரையுமே ஆளாக்கிவிட்ட உங்களுக்கு எங்களுடைய நன்றிகள்!
ஸ்ரீகாந்த்: நாங்களும் அப்பா, அம்மா கிட்டே சொல்லி மாடித்தோட்டம் அமைக்கப் போகிறோம்.... எங்களுக்கு ஆர்வத்தை உண்டுபண்ணிய உங்களுக்கு எங்களுடைய அன்பான நன்றிகள்!

(திரை)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com