கருவூலம்
கங்கை இந்தியாவின் தேசிய நதி! இந்துக்களால் மிகவும் புனிதமானதாக கருதப்படும் ஜீவநதி. இந்தியர்களின் கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஆன்மீக நம்பிக்கைகளிலும் பெரும் முக்கியத்துவம் பெற்ற நதி.
பகீரதன் என்னும் அரசன் செய்த கடும் தவத்தாலேயே விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு கங்கை ஆறு வந்ததாகவும், அதனாலேயே பாகீரதி ஆறு என்னும் பெயர் உண்டானதாகவும் இதிகாசங்களிலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது.
புனித கங்கையில் வாழ்நாளில் ஒரு முறையாவது நீராடினால் அவர்கள் பல பிறவிகளில் புரிந்த பாவங்களில் இருந்து விடுபடுகின்றனர் என்றும், அவர்களின் ஏழு தலைமுறைகளை சேர்ந்த உறவினர்களை பாவம் அணுகாது என்றும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தாயா முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் கங்கையில் நீராடவும், அதனை வணங்கிப் போற்றவும் வருகிறார்கள்.
கங்கையின் பிறப்பிடம்!
உத்திரகண்ட் மாநிலத்தின் உத்திரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடமாகும். இப்பகுதியில் உள்ள "கங்கோத்ரி' பனிப்பாறைக் கூட்டத்தைச் சேர்ந்த பனிப்பாறைகளிலிருந்து கங்கோத்ரி பனியாறு, சடோபந்த் பனியாறு, பிண்டாரி பனியாறு உள்ளிட்ட பனியாறுகள் இணைந்து பாகீரதி ஆறாக உருவெடுக்கிறது. இவ்விடம் 3892 மீ. உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் இந்நதியினை பாகீரதி என்றே அழைக்கின்றனர்.
கங்கோத்ரி பனிப்பாறைக்கு 19 கி.மீ. தூரத்தில் கங்கோத்ரி நகரம் உள்ளது. இங்கு நதிக்கரையோரம் கங்கா மாதாவிற்கு கோயில் உள்ளது.
தேவபிரயாக்!
பாகீரதி நதியானது 205 கி.மீ. தூரம் பயணித்து தேவபிரயாக் என்னும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கை நதியாக ஆகிறது. இங்கிருந்து இமயமலையின் குறுகிய பள்ளத்தாக்குகள் வழியாக 250 கி.மீ. தூரம் பாய்ந்து ரிஷிகேஷ் மலைகளில் இருந்து வெளியேறி, ஹரித்வாரில் கங்கை சமவெளிப் பகுதிக்குள் நுழைகிறது.
சமவெளிப் பயணம்!
கங்கை நதி, உத்திரகண்ட், உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஆகிய மாநிலங்கள் வழியாக பயணித்து வங்கதேச எல்லையை ஒட்டி ஹூக்ளி, பத்மா என இரு ஆறுகளாகப் பிரிந்து முறையே மேற்கு வங்காள மாநிலம் மற்றும் வங்கதேசம் வழியாகச் சென்று மிகப் பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
2525 கி.மீ. தூரம் பயணிக்கும் கங்கை ஆற்றினால் 11 மாநிலங்களைச் சேர்ந்த 500 மில்லியன் மக்கள் பயன்பெறுகின்றனர். இந்திய மக்கள் தொகையில் 35 % மக்கள் கங்கை நீரை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்!
துணையாறுகள்!
யமுனை ஆறு, கோசி ஆறு, கோமதி ஆறு, காக்ரா ஆறு, கண்டகி ஆறு, ராம் கங்கா ஆறு, காரா ஆறு, மகாநந்தா ஆறு, தாம்சா ஆறு, சோன் ஆறு, கர்மநாசா ஆறு, சந்தன் ஆறு ஆகியவை கங்கையாற்றின் முக்கிய துணையாறுகள்!
கரையோர நகரங்கள்!
கங்கைக் கரையோரம், ரிஷிகேஷ், ஹரித்வார், பராகாபாத், கனோஷ், கான்பூர், அலகாபாத், காசி, பாட்னா, பாகல்பூர், முர்ஷிதாபாத், கொல்கத்தா, சாத்பூர், பாராநகர் உள்ளிட்ட பல நகரங்கள் உள்ளன.
மன்னராட்சி காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல பேரரசுகளின் தலைநகரங்கள் கங்கைக் கரையில் இருந்துள்ளது.
உயிருள்ள நபர்கள்!
இந்தியாவின் பெருமை மிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகமும் (கோமுகி) "உயிருள்ள நபர்கள்' என்று இந்திய உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய நிலை!
கங்கையின் இன்றைய நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது! 2007 - ஆம் ஆண்டில் உலகின் மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டுள்ளது! இந்த மாசுபாடானது மனிதர்கள் மட்டுமல்லாமல் 140 க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நில, நீர் வாழ் உயிரின வகைகள் என கங்கையைச் சார்ந்து வாழும் சகல வகையான உயிரினங்களையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
தற்சமயம் மத்திய அரசு பெரும் முயற்சி செய்து கங்கையை சுத்தப்படுத்த பாடுபடுகிறது. மனிதர்களின் அறியாமை அலட்சியம், அக்கறையின்மை என பல காரணங்களால் இந்தியா முழுவதுமே பல நதிகள் மாசுபட்டுள்ளது. இனிமேலாவது நாம் நதிகளை மாசுபடுத்தாமல் இருக்க உறுதி பூணுவோம்!
மேலும் சில தகவல்கள்!
பாகீரதி ஆறு!
கங்கையாற்றின் தாய் ஆறு இது! இமயமலையில் 22000 அடி உயரத்தில் உற்பத்தியாகி 10300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்படுகிறது. இந்த ஆறு தேவ பிரயாகை என்னும் இடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் சேர்ந்து கங்கையாக மாறுகிறது. 205 கி.மீ. தூரம் பாயும் இந்நதி மூலம் 6921 ச.கி.மீ. நிலம் பாசன வசதி பெறுகிறது. உலகின் பத்தாவது உயரமான "டெஹ்ரி' அணை (855 அடி) பாகீரதி ஆற்றின் குறுக்கேதான் கட்டப்பட்டுள்ளது.
கங்கோத்ரி பனிமலை!
(GANGOTHRI GLACIER)
30 கி.மீ. நீளமும் 2 முதல் 4 கி.மீ அகலுமும் கொண்ட பனிமலை. இந்த பனிமலையின் கொடுமுடி பார்ப்பதற்கு படுவின் வாய் போல் போல் இருப்பதனால் "கோமுக்' எனப்படுகிறது.
அலக் நந்தா ஆறு!
உத்தரகண்ட் மாநிலத்தில் பாயும் ஆறு இது! இமயமலைத் தொடரில் உள்ள நந்தாதேவி திரிசூல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களின் பனிப்பாறைகளில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகிறது. சரஸ்வதி, தவுலிகங்கா. நந்தாகினி. பிந்தார், மந்தாகினி ஆகிய நதிகள் அலக்நந்தா ஆற்றின் துணையாறுகளாகும்! இந்த நதி 196 கி.மீ. தூரம் பயணித்து தேவ பிரயாகையில் பாகீரதி நதியுடன் இணைந்து கங்கையாக பிறக்கிறது. தேவபிரயாகையில் கங்கைக்கு பெரும் அளவு நீரை அலக்நந்தா ஆறே அளிக்கிறது. இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் கட்டப்பட்டு நீர் மின்சார உற்பத்தி மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பத்ரிநாத் கோயில் இந்நதிக்கரையிலேயே உள்ளது.
நந்தாதேவி சிகரம்!
7816 மீ. உயரம் கொண்ட சிகரம் இது! இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம்! மலையின் முழுப்பகுதியும் இந்தியாவிற்குள் இருக்கிறது. இச்சிகரம் உத்திரகண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் கர்வால் பகுதியில் உள்ளது.
தேவபிரயாகை!
உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெரியாழ்வாரால் பாடல் பெற்ற தலம்! கடல் மட்டத்தில் இருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்து புராணஙகளில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.
ஹூக்ளி ஆறு!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஃபராக்கா பராசு என்னும் இடத்தில் கங்கையில் இருந்து பிரிந்து வரும் நீரோட்டமே ஹூக்ளி ஆறு! 260 கி.மீ. தூரம் பயணிக்கும் ஹூக்ளி ஆறு மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல மாவட்டங்களை கடந்து சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
பத்மா ஆறு!
கங்கையிலிருந்து பிரிந்த ஒரு கிளையாறு இது! பங்களாதேஷ் வழியாக ஓடி மேக்னா ஆற்றுடன் கலந்து பின் வங்கக் கடலில் கலக்கிறது. 120 கி.மீ. தூரம் ஓடும் இந்நதி பங்களா தேஷின் முக்கிய நதிகளுள் ஒன்று.
கங்கை டால்ஃபின்கள்!
இந்தியா, வங்கதேசம், மற்றும் நேபாளம் வழி பாயும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளிலும், அவற்றின் துணையாறுகளில் மட்டுமே அதிக அளவில் காணப்படுகின்றன. இவை நன்னீரில் மட்டுமே வாழக்கூடியவை! கண் இருந்தும் பார்வையற்றவை! எதிரொலி மூலமே எதிரில் உள்ள தடைகள் மற்றும் இரையை அறிந்து கொள்ளும்!
தொடரும்....
தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.