கருவூலம்: 650 பைசா = 9 கோடி ரூபாய்!

உங்களுக்கெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் என்றால் கொள்ளை ஆசைதானே! நானெல்லாம் சின்ன வயசில் ஏராளமான காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும், அம்மா திட்டும்
கருவூலம்: 650 பைசா = 9 கோடி ரூபாய்!
Updated on
3 min read


உங்களுக்கெல்லாம் காமிக்ஸ் புத்தகங்கள் என்றால் கொள்ளை ஆசைதானே! நானெல்லாம் சின்ன வயசில் ஏராளமான காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும், அம்மா திட்டும் வரை படித்துத் கொண்டே கிடப்பேன். அம்மாவுக்கு பாடப்புத்தகங்களைப் படிப்பதை விட காமிக்ஸ் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறானே இவன் என்ற வருத்தம்தான்!

இப்போது உங்களுக்கு எல்லா காமிக்ஸ் புத்தகங்களும் திரைப்பட வடிவில் வந்துவிட்டதால் படிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. அதிலும் மார்வெல் காமிக்ஸ், டி.சி.காமிக்ஸ் ஆகியவற்றின் எல்லாப் புத்தகங்களும் அனேகமாக திரைப்படங்களாக வந்து விட்டன. அனிமேஷன் முறையிலும் நிஜமான நடிகர்களையும் வைத்து, கிராபிக்ஸ், 3டி, அனிமாட்ரிக்ஸ் என்று பலவிதமான முறைகளிலும் இப்போது திரைப்படங்கள் வெளிவருகின்றன. இவை சிறியவர்களையும் பெரியவர்களையும் ஒருசேரக் கவர்ந்து இழுக்கின்றன.

என்னடா, அறுக்கிறானே என்று பார்க்கிறீர்களா? விஷயத்துக்கு வருகிறேன். 1939-ஆம் ஆண்டு, "டைம்லி காமிக்ஸ்' என்ற நிறுவனம் (அமெரிக்காவின் பென்சில் வேனியா நகரில்) முதன் முதலில் ஆன்ட்ராய்ட் ஸþப்பர் ஹீரோ வகையில் "ஹ்யூமன் டார்ச்' என்ற கதாநாயகனின் சாகசங்களை விவரிக்கும் காமிக்ஸ் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. இதில் கதாநாயகனின் பெயர் "ஏஞ்சல்' எனவும் வில்லனில் பெயர் "நாமோர்' என்றும் இருந்தது. இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டங்களைச் சித்திரக்கதை வடிவில் வெளியிட்டது. இந்த நிறுவனம்தான் பின்னாட்களில் மார்வெல் காமிக்ஸ் என்ற புகழ்பெற்ற பெயருடன் இன்றும் உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்தப் புத்தகத்தின் விலை 10 சென்ட்கள். தற்போதைய இந்திய மதிப்பின்படி 6ரூபாய் 50 காசுகள். அக்காலத்தில் இன்னும் கொஞ்சம் குறைவாகவே இருந்திருக்கக்கூடும்.

இதன் முதல் பிரதியை 10 சென்ட் கொடுத்து வாங்கியவர் பென்சில்வேனியாவிலுள்ள பெயர் தெரியாத ஒரு மனிதர். இவருக்குக் காமிக்ஸ் புத்தகங்கள் மீது மிகவும் ஆசை. அதனால் வெளிவந்தவுடன் முதல் புத்தகத்தை இவர் வாங்கியிருக்கிறார். இவரிடமிருந்து பின்னாட்களில் இந்தப் புத்தகம் கைமாறி வேறு ஒருவரிடம் சென்றுவிட்டது. பின் னர் பழைய புத்தகக்கடைக்குப் பயணமாகி, அங்கிருந்து வேறு ஒருவரைச் சென்றைடைந்தது.

இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்பும் இந்தப் புத்தகம் மிகவும் நல்ல நிலையில் இருப்பதால், இது ஒரு ஏலக் கம்பெனியின் கைக்கு வந்து சேர்ந்தது. இது அரிய புத்தகம் என்ற வகையில் சேர்க்கப்பட்டதால், அந்த நிறுவனம் இதை ஏலம் விட்டது.

மிக அரிய புத்தகங்களை வாங்கிச் சேகரிக்கும் பழக்கம் உள்ள ஒருவர் இந்தப் புத்தகத்தைத் தற்போது 1.26 மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார். இதுதான் நான் சொல்ல வந்த விஷயம். 650 பைசாவுக்கு வாங்கிய புத்தகம் தற்போது 9 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போய் இருக்கிறது. மலைப்பாக இருக்கிறது அல்லவா? உங்கள் வீட்டில் ஏதாவது பழைய காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தால் பத்திரப்படுத்தி, உங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். யார் கண்டார்கள், அது மதிப்பு மிக்கதாக ஆகலாம்!

65 நாட்கள் இருளில்...

உங்களுக்கு இருட்டில் நடக்கப் பிடிக்குமா? இருட்டில் தெருவில் செல்வதற்குப் பயமாக இருக்கும் அல்லவா? இரவு வந்தாலே வீட்டுக்குள் அடங்கி விடுகிறோம். வீட்டில்கூட மின்சார சப்ளை நின்று போனால் உடனே கோபப்படுகிறோம் அல்லது எரிச்சல் அடைகிறோம். ஏனென்றால் இருட்டு நமக்குப் பிடிப்பதில்லை.
சூரிய வெளிச்சம் இல்லையென்றால், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தால் நமக்குக் கஷ்டமாக இருக்கிறது அல்லவா?
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் பெயர்"உத்கியாக்விக்'. உச்சரிக்கவே கஷ்டமாக இருக்கிறது
அல்லவா? இந்த ஊருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த நகரம் ஆர்க்டிக் வளையத்துக்குள் இருக்கிறது. இதனால் இங்கு எப்போதும் குளிராகவே இருக்கும்.

மற்றொரு சிறப்பு - ஒரு அதிசயம்.

இந்த நகர மக்கள், இந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி மாலை சூரியன் மேற்கில் மறைவதைப் பார்த்தார்கள். இனிமேல் இந்த மக்கள் சூரிய உதயத்தையும் மாலையில் அது மறைவதையும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ஆம் நாள்தான் பார்க்க முடியும். அதாவது தொடர்ந்து 65 நாட்களுக்கு இந்த மக்கள் சூரியனைப் பார்க்கவே முடியாது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. குளிர் காலத்தில் சூரியன் ஒரேயடியாக காணாமல் போய்விடுகிறது. கோடை காலம் வந்தவுடன் மீண்டும் தன்னை வெளிப்படுத்துகிறார் சூரியனார்.
பூமி சற்றே சாய்ந்த நிலையில் இருப்பதால் துருவப் பகுதியில் உள்ள இந்த நகரத்தில் இப்படி ஒரு அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கிறது. அப்படியானால் இந்த 65 நாட்களும் 24 மணி நேரமும் முழு இருட்டாக இருக்குமா என்ற கேட்டால் அதற்கு மெல்ல இல்லை என்ற பதிலைக் கூறலாம். ஏனெனில் லேசான வெளிச்சம் சமயங்களில் இருக்குமாம்.

இந்த வெளிச்சம் எப்படியிருக்குமெனில் சூரியன் உதயமா வதற்கு முன்பு அடிவானத்தில் லேசாக ஒரு வெளிச்சம் தோன்றுமே அதுபோலவும் மாலையில் சூரியன் மறைந்த வுடன் சிறிது நேரம் அடிவானம் சிவந்து காணப்படுமே அது போலவும் இருக்கும். ஆனால் நிறம்தான் வேறுபடும். சூரியனின் வெளிச்சக் கதிர்களினால் மெல்லிய ஊதா மற்றும் பச்சை நிறம் கலந்த ஒரு ஒளி, வானின் அடிப்பகுதியில் தோன்றிக் கொண்டே இருக்குமாம். இதுதான் அவர்களுக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும். இதை நீங்கள் கொடுத்துள்ள படத்தில் காணலாம்.

இந்த அனுபவம் இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் கடைசி நகரங்களுக்கும் கிடைக்குமாம். நமக்குத்தான் இந்த அனுபவம் கிட்டவே கிட்டாது. நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறி நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.

சாதனைச் சிகரம்!

டென்சிங், ஹிலாரிக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொட்டிருக்கிறார்கள். பலபேர் தோற்றுப் போயிருக்கிறார்கள். பலர் காணாமலும் போயிருக்கிறார்கள்.

உலகின் மிகவும் உயரமான 14 சிகரங்களில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்று. ஆயிரக்கணக்கில் சிகரம் தொட்டவர்கள் இருந்தபோதும் இந்தப் பதினான்கு சிகரங்களையும் தொட்டவர்கள் 40 பேர்தான். இந்த சிகரங்கள் அத்தனையும் 8000 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்டவை. இவைகளுக்கு "எட்டாயிரத்தார்கள்' என்ற செல்லப் பெயர்கூட உண்டு.

இந்த உச்சியை அடைவது மிகமிகக் கடினம். இதைச் சாவுச் சிகரங்கள் என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில் இங்கு ஆக்ஸிஜனின் அளவு மிக மிகக் குறைவாகவே இருக்கும். சில நாட்கள் தாக்குப்பிடிக்கவே இந்த ஆக்ஸிஜன் போதாது. இங்கு மனிதன் உயிர் வாழ்வதே மிகவும் கடினம்.
இப்படிப்பட்ட சிகரங்களைத் தொட்டுச் சாதனை புரிவது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்றுகூடச் சொல்லலாம். இருந்தாலும் மனிதனின் விடாமுயற்சிக்கு அளவே கிடையாது அல்லவா? முயன்றால் முடியாதது என்று ஒன்றும் இல்லையல்லவா?

சென்ற அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி, நேபாளத்தைச் சேர்ந்த நிர்மல் புர்ஜா என்ற மனிதர் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். இமயமலையின் சீனப் பகுதியிலுள்ள ஷிஷாப்பங்மா என்ற சிகரத்தின் (8028 மீட்டர் உயரம்) உச்சியை அடைந்ததுதான் நிர்மலின் புதிய சாதனை. இந்தச் சாதனை என்னவென்றால் மேலே சொன்ன 14 சிகரங்களையும் எட்டியவர்களில் இவரும் ஒருவர் என்பது மட்டுமல்ல. இந்தச் சாதனையை 6 மாதங்கள் 6 நாட்களுக்குள் புரிந்திருக்கிறார்.

இதற்கு முந்தைய சாதனையைப் பற்றித் தெரிந்து கொண்டால் இவரின் சாதனை எத்தனை அளப்பரியது என்பது தெரியும். முந்தைய சாதனை : தென் கொரியாவின் கிம் சாங் ஹோ என்பவர் இந்தப் பதினான்கு சிகரங்களையும் 7 ஆண்டுகள் 10 மாதங்கள் 6 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் செய்திருக்கிறார்.

நமது நிர்மல் இந்தச் சாதனையை 7 மாதங்களுக்குள் முறியடிக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயல்பட்டு 6 மாதங்கள் 6 நாட்களில் செய்து முடித்திருக்கிறார்.

இந்தச் சாதனையைப் புரிந்த பிறகு நிர்மல் கூறியது, "மிக மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். நான் மிகவும் கஷ்டப்பட்டதற்கு சரியான பலன் கிடைத்துள்ளது. ஆனாலும் நம் மீது நம்பிக்கையும் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற விடாமுயற்சியும்தான் எனது வெற்றிக்குக் காரணம்.'

இது மட்டுமல்ல, தனது பயணங்களின்போது வழியில் போதிய ஆக்ஸிஜன் கிடைக்காமல் திண்டாடிய பல மலையேறிகளையும் இவர் காப்பாற்றியிருக்கிறார். இவ்வளவு சாதனைகளைப் புரிந்தவர் மிகவும் அடக்கத்துடன் பேசுகிறார் அது இன்னொரு ஆச்சரியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com