இயற்கையின் அதிசயம்! - மருத மரம்

நான் தான் மருத மரம்! எனது அறிவியல் பெயர் டெர்மினேலியா அர்ஜீனா என்பதாகும். நான் காம்ப்ர்டேசி குடும்பத்தைச் சேர்ந்தவன்
இயற்கையின் அதிசயம்! - மருத மரம்
Updated on
1 min read

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ??
 நான் தான் மருத மரம்! எனது அறிவியல் பெயர் டெர்மினேலியா அர்ஜீனா என்பதாகும். நான் காம்ப்ர்டேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆற்றோரங்களிலும், வயலோரங்களிலும் செழித்து வளருவேன். எப்போதும் பசுமையாகவே காட்சியளித்து உங்களுக்கு செழிப்பான நிழலைத் தருவேன். இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிகரில்லா மருந்து எங்கிட்ட இருக்கு.
 என் இலை, பழம், விதை, பட்டை முதலியன மருத்துவ குணங்கள் கொண்டவை. பல நூற்றாண்டுகளாக இதயத்தின் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுப்பதற்கு என் பட்டையில் உள்ள அர்ஜுனின் என்கிற வேதிப் பொருள் பயன்படுவதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.
 எனது பட்டைக்கு மட்டுமே தனி சிறப்பு உண்டு. இதில் லிப்பிட் பெர்ஆக்சிடேஷன் நிறைந்துள்ளதால் இரத்தம் உறைதலைத் தடுப்பதோடு இதயத் தசைகளை வலுவாக்கும் ஆற்றலும் என் பட்டைக்குண்டு. என் பட்டையில் அஸ்ட்ரின்ஜென்ட் என்கிற துவர்ப்புத் தன்மைக் கொண்ட இரசாயனப் பொருள் இருப்பதால் இதனை கஷாயமாகத் தயார் செய்து புண்களைக் கழுவினால் அவை விரைவில் குணமாகும். இதில் வைட்டமின் சி அதிக அளவிலுள்ளது. மேலும், இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என்ற புத்துணர்வு தரும் சக்தி உள்ளதால், இதை அரைத்து பொடியாக்கி தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் உடம்புக்கு மிகுந்த குளிர்ச்சியைத் தந்து குடல் தொடர்பான அனைத்து நோய்களுடன் உடலில் இரத்தக் கொதிப்பு, இதய படபடப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை, நீரிழிவு பிரச்னை, கல்லீரல் பிரச்னை, ஆஸ்த்துமா பிரச்னை, இரத்த குழாய்களில் கொழுப்பு அதிகமாதல், பல் வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். சிறுநீரகத்தில் உருவான கல் கரைய, என் பட்டையை நன்கு வேக வைத்து வடிக்கட்டி பருக வேண்டும். அவ்வாறு செய்தால் சிறுநீரகத்திலுள்ள கல், சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.
 என் இலை, பூ, காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கிக் குடித்தால், இரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கும். இலையை அரைத்துப் பாலில் கலந்து இரு வேளை தொடர்ந்து குடித்தால் பித்த வெடிப்புகள் நீங்கும். என் பழத்தை நீராவியில் வேக வைத்துப் பிசைந்து புண்களில் வைத்துக் கட்டினால், நாள்பட்ட புண்கள் விரைவில் ஆறும்.
 நான் கோயம்புத்தூர், அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமதூர் அருள்மிகு மகாலிங்கேசுவரர், விழுப்புரம் மாவட்டம், திருஇடையாறு, அருள்மிகு மருந்தீசர், ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்திலுள்ள அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆகிய திருக்கோயில்களில் தலவிருட்சமாக இருக்கிறேன்.
 என்னுடைய நட்சத்திரம் சுவாதி. தமிழ் ஆண்டு பிரமாதீச. பழங்காலம் முதற்கொண்டு நம்மைக் காக்கும் மரங்களைப் பாதுகாப்போம்! நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !
 (வளருவேன்)
 பா.இராதாகிருஷ்ணன்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com