
என்ன குழந்தைகளே நலமா?
நான் தான் வில்வ மரம் பேசுகிறேன். என்னுடைய தாவரவியல் பெயர் ஏகல் மார்மெலொஸ் என்பதாகும். என்னை புனித கனி தரும் மரம் என்றும் சொல்வார்கள். தேவலோகத்தைச் சேர்ந்த பஞ்ச தருக்களில் நானும் ஒருவன். என்னுடைய இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும், கிளைகளே வேதங்கள் எனவும், வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் எனவும், என்னை சிவ மூலிகைகளின் சிகரம் எனவும், மும்மூர்த்திகள் உறைவிடம் எனவும் புராணங்கள் சொல்கிறது. எனக்கு கூவிளம், கூவிவிளை, சிவத்துருமம் நின்மலி, மாலுரம் என பல பெயர்கள் உள்ளன.
என்னுடைய இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருந்தாக பயன் தரக் கூடியவை. என்னுடைய இலை, பழம், வேர் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருக்கிறதா மருத்துவர்கள் சொல்றாங்க. என்னுடைய பூக்கள் சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் இனிய மணத்துடன் காணப்படும். பூக்களை வாயிலிட்டு மென்றால் வாய் துர்நாற்றம் மறையும், மந்தத்தைப் போக்கும்.
என்னுடய இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் சாப்பிட்டால் கண் பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், சளி, இருமல், ஒவ்வாமை, ஆஸ் - துமா போன்றவற்றை நீக்கும், மன அழுத்தம் குறையும். இது பல் வலி, பல் கூச்சம், பல் சொத்தை ஆகியவற்றிக்கு அரு மருந்தாகும்.
நாள்பட்ட வயிற்றுப் புண் நீங்கி, பசியை உண்டாக்க என்னுடைய பழத்தைப் பிழிந்து சர்பத் போல பானங்கள் செய்து குடித்தால் நல்லது. இந்தப் பழத்தில் புரதச் சத்துகள், தாது உப்புகள், மாவுச் சத்துகள், சுண்ணாம்புச் சத்துகள், வைட்டமின் இ, இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நியாஸின் ஆகியவை உள்ளன. பழ ஓட்டிலிருந்து இப்போதெல்லாம் தைலமும் தயாரிக்கிறாங்க.
அது மட்டுமல்ல, என் மரப் பட்டை வயிறு உப்புசம், அஜீரணம் கோளாறு முதலியவற்றை உடனே நீக்கும் நல்ல மருந்து. என் கிளைகளின் குச்சியை யாகம், ஹோமம் போன்றவைகளுக்கு விசேஷமா பயன்படுத்தறாங்க.
எனவே, குழந்தைகளே, உங்களின் ஆரோக்கியத்திற்கு அரணாக நான் இருக்கேன்.
என்னுடைய நட்சத்திரம் சித்திரை. நான் சென்னை, அயன்புரத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பரசுராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், வெள்ளூர், அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பெரும்பாலான சிவஸ்தலங்களில் தலவிருட்சமாக இருக்கிறேன். மண்ணில் மரம் வளர்ப்போம், மனதில் அறம் வளர்ப்போம்.
நன்றி குழந்தைகளே, சந்திப்போம்!
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.