விண்ணை முட்டும் உயரம் கொண்ட இமய மலைத்தொடரே உலகில் உள்ள பெரிய மலைத்தொடர்களில் உயர்ந்ததாகவும், புனிதமானதாகவும், ஒப்பற்றதாகவும் திகழ்கிறது. இம்மலைத் தொடரானது இந்திய சமவெளிப் பகுதியையும் திபெத்திய மேட்டு நிலப்பகுதியையும் பிரிக்கும் மலைத்தொடராக இந்தியாவின் வடக்கு எல்லையாகத் திகழ்கிறது. இதன் பெரும்பாலான பகுதிகள் உறைபனி மூடி வெண்ணிறத்தில் அழகுடன் காட்சியளிக்கிறது.
இமய மலைத் தொடர் 3 இணையான மலைத் தொடர்களைக் கொண்டது. வடமேற்கே "காரகோரம்' மலைத்தொடரும், "இந்துகுஷ்' மலைகளும் உள்ளன. இமயமலைத் தொடருக்கு வடக்கே 4300 மீ. உயரத்தில் திபெத் உயர் பீடபூமியும், தெற்கே சிந்து - கங்கை சமவெளிப் பகுதிகளும் இருக்கின்றன.
இமயமலைத் தொடர் மேற்கே காஷ்மீர் சிங்காங் பகுதி முதல் திபெத் அருணாச்சல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது.
இமயமலை உருவான விதம்!
பூமியின் மேற்பரப்பானது 10 பெரிய புவித் தட்டுகள் மற்றும் பல சிறிய புவித்தட்டுகளால் ஆனது. தற்போது இலங்கை அருகே ஒரு புதிய புவித்தட்டு உருவாகிவருகிறது எனக் கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ஆண்டுகளாக புவித்தட்டுகள் "மேக்மா' என்கிற பாறைக்குழம்பு மீது மிதந்தபடி நகர்ந்துகொண்டே இருப்பதால் புமியின் மேற்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இன்று ஆசியாவுடன் இணைந்து இருக்கும் இந்திய நிலப்பகுதி சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொஞ்சம், கொஞ்சமாக மெசபடோமியா பகுதியில் இருந்து சுமார் 6000 கி.மீ. தூரம் நகர்ந்து ஆசியாவின் ஒரு பகுதியாக ஆனது.
இந்திய ஆஸ்திரேலிய புவித்தட்டும், யுரேஷியன் புவித்தட்டும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளத் தொடங்கியது. சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த மோதல் தொடங்கி, 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வேகமாக நகர்ந்தது. இதில் இந்திய ஆஸ்திரேலிய தட்டு முழுமையாக அக்காலத்தில் இருந்த "தெனதெஸ்' பெருங்கடலை மூடிவிட்டது.
இப்படி ஒரு கடல் இருந்ததை அந்த இடத்தில் இருக்கும் படிப் பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகிறது. இப்பகுதியில் உருவான படிவுகள் அடர்த்திக் குறைவாக இருந்ததால், கடலுக்கு கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலைகளாக உருவாயின. மேலும் மடிப்பு மலைகளாகவும் உருவாயின. உலகில் உள்ள மிகப்பெரிய மலைத்தொடர்களிலேயே மிக சமீபத்தில் உருவான இளம் மலைத்தொடர் இதுவே! வலுவூட்டப்பட்ட படிவுகளையும், பாறைகளையும் கொண்டது. இப்போது கூட இந்திய ஆஸ்திரேலிய புவித்தட்டு நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது கிடைமட்டமாக நகர்வதில் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மேலும் மியான்மார் நாட்டில் உள்ள "அரகான் யோகான்' மலைகள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் அந்தமான் நிகோபார் தீவுகளும் உருவாயின.
இந்திய ஆஸ்திரேலிய புவித்தட்டு வருடத்திற்கு 67 மி.மீ. நகர்ந்து வருகிறது. அதனால் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இந்தியத் தட்டு ஆசியாவிற்குள் 1500 கி.மீ. நகரும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மி.மீ உயர்கிறது. இப்படி புவித்தட்டுகள் நகர்வதால் இமயமலை அடிவாரப் பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
இமயமலையின் அமைவிடமும், அமைப்பும்.
இமயமலைத் தொடர் பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என 5 நாடுகளில் பரவியுள்ளது. அதிலும் முதல் 3 நாடுகளில்தான் இமயமலைத் தொடரின் பெரும்பகுதி உள்ளது.
இம்மலைத் தொடர் மேற்கு, வடமேற்குப் பகுதியில் இருந்து கிழக்கு வடகிழக்குப் பகுதிவரை 2400 கி.மீ. நீளத்திற்கு வட்டவில்லாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடர் கிழக்குப் பகுதியில் 150 கி.மீ அகலமும் மேற்குப் பகுதியில் 400 கி.மீ. அகலமும் கொண்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 5,95,000 ச.கி.மீ ஆகும்!
சிகரங்கள்!
மிகப்பெரிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக 2400 கி.மீ. தொலைவு நீண்டு விரிந்துள்ள இம்மலைத் தொடரில் 7000 மீட்டருக்கு மேல் எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, K2, தவளகிரி, அன்னபூர்ணா உள்ளிட்ட 110 க்கும் மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. மேற்கில் நங்க பர்வதம், தொடங்கி, கிழக்கில் நம்சா பர்வதம் வரை தொடர்ச்சியாகவும் அடுக்கடுக்காகவும் இம்மலைத் தொடர் காண்பவர் வியக்கும் வண்ணம் பரவியுள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள "எவரெஸ்ட்' சிகரமே (8850 மீ ) உலகின் உயரமான சிகரமாகும். இவ்வுலகில் இதைத் தவிர 7000 உயரம் கொண்ட மலையே இல்லை. இமயமலையைத் தவிர்த்து தென் அமெரிக்காவில் அர்ஜென்டைனாவில் உள்ள "அக்கோன்காதவா' பெருமலைதான் (6962மீ) அடுத்த உயரமான பெரியமலை.
பருவநிலை மாற்றம்!
இமயமலைத் தொடர் கடகரேகை அருகே உள்ளதால் அடிவாரத்தில் வெப்ப மண்டல கால நிலையும், உயரமான இடங்களில் உறைபனி சூழ்ந்தும் பனக்கட்டிகளுமாய் உள்ளது. இம்மலைத் தொடரால் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் திபெத்திய பீடபூமி பகுதியில் சீதோஷ்ண நிலையில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
தெற்கு நோக்கிச் செல்லும் ஆர்டிக் காற்றைத் தடுத்து தென் ஆசியாவை மித வெப்பமாக வைத்திருக்கிறது. மேலும் "டேராய்' பகுதியில் கனமழை பெய்விக்கிறது. இம்மலைத் தொடரால் தக்ளமான் மற்றும் கோபி பாலைவனங்கள் மத்திய ஆசியாவில் உருவாகியுள்ளன.
கணவாய்கள்!
இரண்டு உயரமான சிகரங்களுக்கு இடையே உள்ள உயரம் குறைந்த இடம் கணவாய் எனப்படுகிறது. போக்குவரத்துக்கு அந்தக் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டது. உலக வரலாற்றிலும், பொருளாதாரத்திலும் நாகரிகத்திலும் கணவாய்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இமயமலைத் தொடரிலும் பல கணவாய்கள் உள்ளன. திபெத் எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள "மானா கணவாய்' உலகின் உயரமான கணவாயாகக் கருதப்படுகிறது.
3 பெரும் பிரிவுகள்!
1.மேற்கு இமயமலை.
தென்மேற்கு காஷ்மீரில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் இந்தியாவின் எல்லையாக உள்ளது. உலகின் இரண்டாவது உயரமான சிகரமான "K2’’ எனப்படும் காட்வின் ஆஸ்டின் இங்குதான் உள்ளது.
2. மத்திய இமயமலை!
வடக்கு தெற்காக 3 மலைத்தொடர்களாக அமைந்துள்ளது.
1.ஹிமாத்ரி!
உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் இப்பகுதியில் உள்ளது. மேலும் கஞ்சன்ஜங்கா, நங்கபர்வதம், தவளகிரி, நந்திதேவி சிகரங்கள் இங்குதான் உள்ளன. மிகவும் புனிதமாகக் கருதப்படும் கங்கை என்றும் அழைக்கப்படும் பாகீரதி உற்பத்தியாகும் கங்கோத்ரியும், யமுனா நதியின் உற்பத்தி ஸ்தலமான யமுனோத்ரியும் இப்பகுதியில்தான் உள்ளன.
2. இமாச்சல்!
இப்பகுதியில்தான் நீண்ட மலைத்தொடரான பீர்பாஞ்சல் உள்ளது. மேலும் பாகல்கம், குல்மார்க், முசெüரி மற்றும் நைனிடால் ஆகிய மலைவாழிடங்கள் உள்ளன. அமர்நாத், கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இங்குதான் இருக்கின்றன.
3.சிவாலிக் ஹிமாத்ரி!
குறுகலான நீண்ட "டூன்' எனப்படும் பள்ளத்தாக்குகள் இங்குள்ளன. மேலும் "தராய்' சமவெளி சிவாலிக்கின் தென் பகுதியில் உள்ளது.
கிழக்கு இமயமலைகள்!
இந்த மலைகள் பூர்வாச்சல் என அழைக்கின்றனர். வடக்கில் "படகாய்' மற்றும் "நாகா' குன்றுகளும், தெற்கில் மீசோ குன்றுகளும் இந்த மலையில் அடங்கியுள்ளன.
நீர்வளம்!
இமயமலை வெப்ப மண்டல பகுதிக்குள் இருந்தாலும், இதன் உயர்ந்த பகுதிகள் முழுவதும் பனி மூடிய பெரிய பனிப்பாறைகளாக உள்ளன. இப்பனிப் பாறைகளில் உத்திரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கை நதி உற்பத்தியாகும் கங்கோத்ரி, யமுனை நதி உற்பத்தியாகும் யமுனோத்ரியும் அடங்கும். மேலும் எவரெஸ்ட் சிகரம் பகுதியில் உள்ள "க்ஹீம்ப்' பனிப்பாறைகள். மற்றும் சிக்கிம் பகுதியில் உள்ள "சேமு' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இமயமலைத்தொடரில் 15000 பனியாறுகள் உருவாகிறது. இந்த ஆறுகளில் 12000 ச.கி.லி தண்ணீர் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இமயமலையின் மேற்குப் பகுதியில் உருவாகும் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆழமான சிந்து நதியே பெரிய நதி! சிந்து நதி திபெத்தில் உருவாகி தென்மேற்காகப் பாய்ந்து இந்தியா, பாகிஸ்தான் வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது. ஜீலம், செனாப், ரவி, பிபாஸ், மற்றும் சட்லெஜ் நதிகள் சிந்துநதியின் துணையாறுகளாகும்.
இமயமலையில் உருவாகும் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட பிற நதிகள் ஒன்றிணைந்து பங்களா தேசத்தில் உலகின் மிகப் பெரிய ஆற்றுப் படுகையை உருவாக்கி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.
ஏரிகள்!
இமயமலைத் தொடரில் நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. இந்திய சீன எல்லையில் உள்ள 700 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட "பாங்காங் த்சோ' (PANGONG TSO) ஏரியும், மத்திய திபெத்தில் உள்ள 638 ச.கி.மீ பரப்பளவு கொண்ட யம்ட்ரோக் த்சோ (YAMDROK TSO) ஏரியும் குறிப்பிடத்தக்கவை.
இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளைச் சார்ந்து சுமார் 60 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
கயிலாயமலை!
இமயமலையில் உள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனிதத் தலம். புகழ்பெற்ற சிகரம்! உயரம் 6638 மீ. இம்மலையிலிருந்துதான் சிந்து ஆறும், சட்லெஜ் ஆறும், பிரம்மபுத்திரா ஆறும் உற்பத்தியாகின்றன. இதன் அருகில்தான் புகழ்பெற்ற மானசரோவர் நன்னீர் ஏரியும், உவர் நீர் கொண்ட இரட்சஸ்தல் ஏரியும் உள்ளன. மானசரோவர் ஏரிதான் உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி! கையிலை மலை இந்துக்களுக்கு மட்டுமின்றி போன்கள்(பெüத்த மதத்தின் ஒரு பிரிவு) திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாகவும் விளங்குகிறது. பாடல பெற்ற தலம். இத்தலம் சீனாவில் இமயமயின் வடக்கில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் இத்தலத்திற்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாது புனித பயணமாக வருகிறார்கள். கயிலாயமலையை நடந்து சுற்றி வருவது சிறப்பானது என்பது பக்தர்களின் நம்பிக்கை! சுற்றுப் பாதையின் நீளம் 52 கி.மீ.
கைலாயம் சீனாவின் திபெத்திய பீடபூமியில் அமைந்துள்ளது. 1959 ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர், கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை. அதன்பின் 1981 இல் ஏற்பட்ட இந்தோ - சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கிறது.
வரலாற்றில் இமயமலை!
மிக உயரமாக இருப்பதால் இந்தியாவிற்கு இயற்கை அரணாக இருக்கிறது. செங்கிஸ்கான் படைகள், இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்வதை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்குப் பங்கு உண்டு. இமயமலை பற்றிய தகவல்களும், கதைகளும் இதிகாசங்களிலும், புராணங்களிலும் சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும் பிறமொழி நூல்களிலும் நிறைந்துள்ளது.
மேலும் சில தகவல்கள்!
காரகோரம் மலை! - இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்து குஷ் மலை! - ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடர் காரக்கோரம் மலைத்தொடரின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.
பீர்பாஞ்சல் மலை! - இமயமலைக்கு தெற்கே ஹிமாச்சல்பிரதேசத்தில் தொடங்கி வடமேற்கே ஜம்மு - காஷ்மீர் வரை பரவியுள்ளது. ஜீலம், ஜீனாப், ராவி போன்ற சிந்துவின் கிளை நதிகள் இம்மலை வழியே செல்கின்றன. குல்மார்க் நகரம் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளது.
எண்ணற்ற தாவர வகைகளும், விலங்கினங்களும் இமயமலையின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.
தொகுப்பு : கே.பார்வதி
திருநெல்வேலி டவுண்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.