
பச்சைத் தங்கம்! - கருங்காலி மரம்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் கருங்காலி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அகேசியா கேட்டச்சு என்பதாகும். என் உடல், தண்டு, கிளை, இலை, எங்கும் முட்கள் இருக்கும். முட்கள் தான் எனக்குப் பாதுகாப்பு. பச்சை தங்கமுன்னும் என்னை அழைப்பாங்க.
எனக்கு இந்தப் பெயர் ஏன் வந்தது என்று கேட்டால் நீங்களெல்லாம் சிரிப்பீர்கள். கோடாரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிகச் சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் நான் தான். மரத்தின் வகையே மற்ற மரங்களை வீழ்த்த துணை புரிவதால் இந்த அவப்பெயரை எனக்குத் கொடுத்திட்டாங்க. அதானால் கூடவே இருந்து துரோகம் செய்யும் மனிதர்களை கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது. நாங்க அப்படி இல்லீங்க. குழந்தைகளே! இந்தப் பெயருக்கேற்ப நானில்லை. நான் உங்களின் நண்பன். ஏன்னா, மரங்கள் யாருக்கும் துரோகம் செய்வதில்லை.
நான் அதிக அளவில் மின் கதிர் வீச்சுகளை என்னுள் சேமிக்கும் திறன் படைத்தவன். அதனால், என் நிழலில் அமர்ந்தால் கூட உங்கள் நோய்கள் நீங்கும். என் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்நீரைக் கொண்டு நீங்கள் குளித்து வந்தால் உங்கள் உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும். திருக்கோவில்களின் கும்பாபிஷேகத்தின் போது என் கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவாங்க ஏன் தெரியுமா குழந்தைகளே, இடி, மின்னலால் அந்தக் திருகோயிலைச் சுற்றி வசிக்கும் நபர்களுக்கு பாதிப்புகள் ஏதும் வருவதில்லை.
என்னிடமிருந்து மிகவும் உறுதியான பலகைகள் தயாரிக்கப்படுகின்றன. இப்பலகைகள் கருப்பு நிறம் கொண்டு இரும்பை ஒத்த உறுதி கொண்டவை. என்னிடமிருந்து தான் உலக்கை தயார் செய்யப்படுகிறது. என்னுள் அடங்கியிருக்கும் நடுபாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். என் வேரை எடுத்து நீரில் ஊற வைத்து, பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிக்கட்டி அருந்தினால் வயிற்றுப் புண் ஆறும். இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் பித்தத்தை மட்டுப்படுத்தி வயிற்றிலுள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் இது விளங்குகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதைக் குடித்து வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறையும். வாய் புண்ணை அகற்றி, வாய் துர்நாற்றதைப் போக்கும். இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இதை அருந்துவது நல்லது. என் பிசினை எடுத்து காய வைத்து பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். கரப்பான் நோயினை போக்க வல்லது. குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகளை என் மரத்திலிருந்து தான் செய்வாங்க. சாதாரணமாக விளையாட்டுப் பொருட்களை குழந்தைகள் வாயில் வைப்பாங்க. அதனால், பயப்படாதீங்க, நான் ஒரு நோய் நீக்கி. உங்களுக்கு எந்த நோயும் வராது.
என் நட்சத்திரம் மிருகசீரிடம், இராசி விருச்சிகம். தமிழ் ஆண்டு பிரபவ மற்றும் பார்த்திவ. நான் திருவாரூர் மாவட்டம், அம்பர் மாகாளம், திருமாகாளம் அருள்மிகு மகாகாளநாதர் திருக்கோவிலில் தலவிருட்சமாக இருக்கிறேன். இத்திருக்கோவிலில் கரிய காளியாகிய நான் பின்னாளில் கருங்காலி மரமாகி மக்களால் வழிபடப்படுகிறேன். மரங்கள் தான் மனித இனத்தை வாழ வைக்கும் சக்திகளாகவும், ஆதாரமானவைகளாகவும் திகழ்கின்றன. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
-- பா.இராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.