
நம் நாட்டின் தலை நகரம்! வட இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் பெரிய நகரங்களில் 2 ஆவது இடத்தில் உள்ளது. பழமையும், புதுமையும் கலந்த தனித்துவமான நகரம் இது.
யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள இதனைச் சுற்றி மூன்று புறங்களில், "ஹரியானா' மாநிலமும், கிழக்குப் பக்கம் "உத்தரப் பிரதேசம்' மாநிலமும், சூழ்ந்துள்ளன. 1484 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநகரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி "யூனியன் பிரதேசம்' ஆகும். இதன் எல்லைக்குள் தில்லி, புது தில்லி மற்றும் தில்லி கன்டோன்மென்ட் என மூன்று பெரிய நகரங்கள் உள்ளன. இந்த யூனியன் பிரதேசத்தில் 11 மாவட்டங்கள் உள்ளன. மேலும் இப்பிரதேசத்தின் எல்லைக்குள் 784 ச.கி.மீ. கிராமப்புறப் பகுதியாகவும் உள்ளது.
தில்லி யூனியன் பிரதேசத்திற்கு, தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் உள்ளது.
இந்திய தேசிய தலைநகர வலயம்!
(NCT- NATIONAL CAPITAL TERRITORY OF DELHI)
நாட்டின் தலைநகரமாக இருப்பதால் தில்லி யூனியன் பிரதேசம் வேகமாக வளர்ந்துள்ளது. இதனால் மாநகரின் எல்லையானது அருகில் உள்ள ஹரியானா, உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நிலப்பகுதியையும் சேர்ந்து கொண்டு விரிவடைந்துள்ளது. தில்லி யூனியன் பிரதேசத்துடன் இணைந்து "தேசிய தலைநகர வலயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தலைநகர வலயம் 33,578 ச.கி.மீ. பரப்பு கொண்டது.
யமுனை ஆறு!
இந்நதி இந்நகரின் குறுக்கே பாய்கிறது. நகரின் பெரும்பாலான பகுதிகள் ஆற்றின் மேற்குப் பகுதியிலேயே உள்ளது.
இந்த யூனியன் பிரதேசத்திற்குத் தெற்கே உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் ஆரவல்லி மலைத்தொடரின் தொடர்ச்சியாக 318 மீ. வரை உயரம் கொண்ட முகடு ஒன்று தில்லி மாநகரின் மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு பகுதிகளில் பரவியுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம்!
மஹாபாரதத்தில் பாண்டவர்களின் தலைநகராகக் குறிப்பிடப்படும் "இந்திரப் பிரஸ்தம்' இங்குதான் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி.மு. 300 - களில் மெளரியப் பேரரசு இங்கு அமைந்தது. கி.பி. 1206 முதல் 1526 வரையிலான சுமார் 300 ஆண்டுகள் துருக்கிய வம்சத்தினர் தில்லியைத் தலைதகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அடிமை வம்சம், கில்ஜி வம்சம், துக்ளக் வம்சம் உள்ளிட்ட பல்வேறு அரசுகளே தில்லி சுல்தான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.இவர்கள் காலத்தில் தில்லி முக்கிய வணிக மையமாக செழிப்புடன் இருந்துள்ளது.
சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் ராசியா பேகம், என்னும் பெண் 1236 முதல் 1240 வரை தில்லியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளார். இவரே இந்தியாவின் முதல் பெண் அரசியாகச் சொல்லப்படுகிறார்.
மொகலாயர்கள் ஆட்சிக் காலம்!
கி.பி. 1526 - இல் ஆப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த பாபர் தில்லியை ஆண்ட இப்ராஹிம் லோடியை போரில் வென்று தில்லியை கைப்பற்றினார். இதனால் தில்லியில் மொகலாயர்களின் ஆட்சிக் காலம் தொடங்கியது. இவர்கள் சுமார் 300 ஆண்டுகள் தில்லியை ஆட்சி செய்தனர்.
மொகலாயர்கள் ஆட்சி காலத்தில் நான்கு தில்லிகள் தோன்றி மறைந்து விட்டன. என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்பொழுது பழைய தில்லி என்று அழைக்கப்படும் நகரம் ஏழாவது தில்லி என்றும் கூறுகின்றனர். மொகலாய மன்னர் ஷாஜஹான் காலத்தில்தான் தில்லி நகரம் உருவானது. இந்நகரம் அப்பொழுது "ஷாஜஹான்பாத்' என்று அழைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்!
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யத் தொடங்கினர். முதலில் கல்கத்தாவை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அப்பொழுது தில்லி பஞ்சாப் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
கி.பி. 1857 - இல் தில்லியை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். அதன்பின் தகவல் தொடர்புக்கும், நிர்வாகத்திற்கும் வசதியாக இருக்கும் என்பதற்காக தில்லிக்கு கி.பி. 1911 - இல் தலைநகரை மாற்றினார்கள். அதற்காக பல புதுக் கட்டிடங்களை ஷாஜஹான்பாத்திற்கு தெற்கே கட்டினார்கள். புதிய கட்டிடங்களைக் கொண்ட பகுதி புது தில்லி என்றழைக்கப்பட்டது. இதுவே பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகவும், பின்னர் சுதந்திர இந்தியாவின் தலைநகராகவும் ஆனது. புது தில்லி எட்டாவது தில்லி எனச் சொல்லப்படுகிறது.
சுற்றுலாத் தலங்கள்!
செங்கோட்டை!
இதனை உருவாக்கியவர் மொகலாய மன்னர் ஷாஜஹான் (1628 - 1658 ) ஆவார். 1638 - இல் கட்டத் தொடங்கி பத்தாண்டு காலத்தில் 1648 - இல் கட்டி முடிக்கப்பட்டது! அன்றைய ஷாஜஹான்பாத் நகரின் முக்கிய மையமாகவும் அரச குடும்பத்தினரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
இக்கோட்டை 2.41 கி.மீ. நீளத்திற்கு நீண்டு இருக்கும் அகழியுடன் கூடிய மதில் சுவர்கள் கொண்டது. பாரசீக இஸ்லாமிய இந்திய கட்டடக்கலைகளை இணைத்து கட்டப்பட்ட கம்பீரமான அழகு கொண்ட நினைவுச் சின்னம்! ஓவியங்கள் மற்றும் அலங்கார வேலைப்பாடுகள் கொண்டது! தர்பார் மண்டபம், உப்பரிகை, அரண்மனை, மும்தாஜ் மஹால் எனப்படும் காட்சி அரங்கு என சிவப்பு நிற மணற்கற்கள் மற்றும் பளிங்குக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
1947 - இல் நாடு சுதந்திரம் பெற்றபோது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கொடி ஏற்றி இங்குதான் உரை ஆற்றினார். இன்றும் சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றப்பட்டு பிரதமரின் உரை இங்கு நிகழ்கிறது.
ஹுமாயூன் சமாதி!
இந்த சமாதி தேசிய நினைவுச் சின்னமாகவும், உலகின் பாரம்பரியம் மிக்க கலாச்சாரச் சின்னமாகவும் திகழ்கிறது.
இந்தியாவின் இரண்டாவது முகலாய மன்னர் ஹுமாயூன் 1556 - இல் காலமானார். அவரது நினைவாக மனைவி மற்றும் மகன் பேரரசர் அக்பரால் இச்சமாதி கட்டப்பட்டது. 1565 முதல் 1572 - ஆம் ஆண்டு வரை சமாதியின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றது.
சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் தோட்டத்துடன் கூடிய சமாதி இது. 47 மீ. உயரமும் 91 மீ. அகலமும் கொண்டது. அழகான தோட்டத்துடன் கூடியது.
மோத் கி மஸ்ஜித்
இந்திய இஸ்லாமிய கட்டடக் கலைகளை இணைத்து 1505 - ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சமாதி. கலை வேலைப்பாடுகளுடன் எழிலான தோற்றம் கொண்டது.
புராண கிலா!
“புராண கிலா’ என்பதற்கு பழைய கோட்டை என்று பொருள். இது ஹூமாயூனால் 1533 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தினா - பனா என்னும் நகரத்தின் உள் நகரப் பகுதியாகும். இக்கோட்டையும் ஹுமாயூனால் உருவாக்கப்பட்டது. கோட்டையின் மதில் 18 மீ. நீளம் கொண்டது. 3 வளைவு அமைப்பு கொண்ட நுழைவாயில்கள் உள்ளன. இரண்டு மாடி அமைப்பு கொண்டது. இரு பக்கங்களில் அரை வட்ட வடிவ கோபுரங்கள் உள்ளன.
குதுப் மினார்!
உலகப் பாரம்பரியமிக்க பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்று. செங்கற்களால் கட்டப்பட்டது. 72.5 மீ உயரம் கொண்டது. 378 படிகள் கொண்டது. குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது. இதன் அருகில் பாதி கட்டுமானத்தில் நிறுத்தப்பட்ட 12 மீ. உயரம் கொண்ட "அலை மினார்' என்ற கோபுரம் உள்ளது.
குதுப் மினார் சுற்றிலும் இந்திய கலை நுட்பம் கொண்ட பழமையான மசூதிகள் கல்லறைகள் என பல கட்டங்கள் சூழ்ந்து உள்ளன. அழகிய பூங்காக்கள் நிறைந்த வளாகம் இது!
இரும்புத் தூண்!
கி.பி. 380 முதல் 415 வரை ஆட்சி செய்த இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தனால் உருவாக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்று. 7 அடி உயரமுள்ள இத்தூண் பண்டைய இந்தியாவின் உலோகவியல் துறை வளர்ச்சிக்கு சான்றாக உள்ளது.
மெஹரொலி தொல்பொருள் பூங்கா!
இந்த இடம் தெற்கு தில்லியில் குதுப் காம்ப்ளெக்ஸ் அருகில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான நினைவுச் சின்னங்கள் சேகரித்து வைத்துப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தில்லியின் வரலாற்றை பறை சாற்றும் சின்னங்கள் இவை!
சுற்றிலும் மரங்கள் சூழ 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.
தொடரும்.....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.