குருபக்தி!

கோதாவரி நதிக்கரையில் ஓர் ஆசிரமம். அதில் வேததர்மன் என்ற குரு இருந்தார். அவர் சிறந்த தபஸ்வி!  சீடர்கள் பலர் அவரிடம் கல்வி கற்று வந்தனர்.
குருபக்தி!
Published on
Updated on
2 min read

கோதாவரி நதிக்கரையில் ஓர் ஆசிரமம். அதில் வேததர்மன் என்ற குரு இருந்தார். அவர் சிறந்த தபஸ்வி!  சீடர்கள் பலர் அவரிடம் கல்வி கற்று வந்தனர்.

ஒரு நாள் அவர் தம்முடைய எல்லாச் சீடர்களையும்  அழைத்து ""நான் போன ஜன்மங்களில் எத்தனையோ பாவங்கள் செய்துள்ளேன். என் தவத்தினால் இந்தப் பாவங்கள் எவ்வளவோ அழிந்துவிட்டன.  இருந்தும் இன்னும் சிறிது மீதி இருக்கின்றன. இந்தப் பாவங்களின் பலனை நான் இந்த ஜன்மத்தில் அனுபவிக்காவிட்டால் இன்னொரு ஜன்மத்தில் அனுபவித்துத்தான் தீர வேண்டும். ஆகவே, காசிக்குச் சென்று இந்தப் பாவங்களை அனுபவிக்கப் போகிறேன். அப்பொழுது என்னை கவனித்துக் கொள்ள ஒரு சீடன் தேவை. யார் தயாராக இருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

சாந்தீபகன் என்ற சீடன்,  ""குருவே நான் அதற்குத் தயாராக இருக்கிறேன்'' என்றான்.

""நான் இருபத்தொரு ஆண்டுகள் குருடனாகவும், நொண்டியாகவும், குஷ்டரோகியாகவும் இருப்பேன். உன்னால் எனக்குப் பணிவிடை செய்ய முடியுமா?'' என்று கேட்டார்.

சாந்தீபகன் ""குருவே நீங்கள் கவலைப்படவே வேண்டாம். உங்களைக் கவனித்துக் கொள்கிறேன். எப்படியாவது உங்கள் பாவங்கள் உங்களை விட்டு விலகினால் போதும்'' என்றான்.

குருவும் சீடனும் காசிக்குச் சென்றார்கள். குரு மணிகர்ணிகை கட்டத்தில் (படித்துறையில்) குளித்து விட்டு, விஸ்வேஸ்வரரை தரிசனம் செய்தார். உடனே அவர் குருடராகவும், நொண்டியாகவும், குஷ்டரோகியாகவும் மாறினார்.

சாந்தீபகன், அவர் உடலைத் துடைத்துவிடுவது, தினம் இரந்து உணவு வாங்கி அதை குருவுக்குக் கொடுப்பது என்று இருந்தான். அவனுக்குக் கோயிலுக்குப் போகக்கூட ஓய்வு கிடைக்கவில்லை. இறைவனைப் பிரார்த்தனை செய்யவும் அவனுக்கு நேரம் போதவில்லை.

வியாதியின் கடுமை அதிகரிக்க அதிகரிக்க குருவின் கோபமும் அதிகரித்தது!.... அவன் தம்மை சரியாகக் கவனிப்பதில்லை என்று கோபித்துக்கொள்வார்... அவன் கொண்டு வரும் உணவு ருசியாக இல்லை என்று தூக்கி எறிவார்! சில சமயங்களில் அவனை அடிக்கவும் செய்வார்! இதெல்லாம் பொருட்படுத்தாமல் குரு சேவையிலேயே அந்தச் சீடன் ஈடுபட்டிருந்தான்.

இதைக் கண்டு காசி விஸ்வேஸ்வரர் மனம் குளிர்ந்தார். ஒரு நாள் சாந்தீபகன் முன்னால் தோன்றி, ""உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்'' என்றார். ஆனால், சாந்தீபகன் ""குருவின் உத்தரவில்லாமல் நான் ஒரு வரமும் கேட்கமாட்டேன். ஒரு நிமிஷம் இருங்கள். இதோ நான் குருவைக் கேட்டுவிட்டு வருகிறேன்'' என்று குருவிடம் சென்றான்.

""காசி விஸ்வநாதர் எனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். நீங்கள் முன்போல் தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்கட்டுமா குருவே?'' என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் குருவுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. ""அடே மடையா!  என் உடல் குணமானால் என் பாவம் தொலையாது. அதை நான் அடுத்த ஜன்மத்தில் அனுபவித்துத் தீர வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? ஏன், எனக்குப் பணிவிடை செய்வது உனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அதற்காக இப்படி வரம் கேட்கப் பார்க்கிறாயா?'' என்று வெகு கடுமையாகச் சொன்னார்.

உடனே சாந்தீபகன் திரும்பி வந்து, ""குரு ஒரு வரமும் கேட்கத் தேவையில்லை என்று சொல்கிறார்'' என்று காசி விஸ்வநாதரிடம் சொன்னான்.

இதைக் கண்டு அதிசயித்த விஸ்வநாதர், இந்த விஷயத்தை விஷ்ணுவிடம் சொன்னார். உடனே விஷ்ணு சாந்தீபகன் முன்னால் தோன்றி, ""என்னிடம் ஏதாவது வரம் கேள்'' என்று சொன்னார்.

சாந்தீபகன் விஷ்ணுவைப் பார்த்து, ""கடும் தவம் செய்கிறவர்களுக்குக் கூட தங்கள் தரிசனம் எளிதில் கிடைக்காதே... அப்படி இருக்க,  உங்களையே நினைக்காத எனக்கு எப்படி தரிசனம் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டான்.

அதற்கு விஷ்ணு ""நீ குருவுக்குச் செய்யும் தொண்டு எனக்குச் செய்யும் தொண்டாகும். மனைவி கணவனுக்குச் செய்யும் தொண்டு. மக்கள் துறவிகளுக்கும் செய்யும் தொண்டு எல்லாம் எனக்குச் செய்த தொண்டுதான். ஆகவே என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார்.

""எப்பொழுது குருவுக்குச் செய்யும் தொண்டு உங்களுக்குச் செய்யும் தொண்டு ஆகிறதோ, நான் குரு சேவை ஒன்று செய்தாலே போதும். அதைக் கொண்டு நான் எல்லாம் பெற்றுவிடுவேன். ஆகவே, என் குருபக்தி திடமாக இருக்க வேண்டும் என்று அருள் புரியுங்கள்'' என்றான் சாந்தீபகன்.

"அப்படியே!' என்று சொல்லி விஷ்ணு மறைந்தார்.

இதைக் கேட்ட குரு மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அவர் சாந்தீபகனை வாழ்த்தினார். ""உன்னைப் போன்ற சிஷ்யனைக் கண்டு பிடிக்க முடியாது. நீ கோடீஸ்வரனாக மாறுவாய். வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் பெற்று, முடிவில் முக்தியையும் பெறுவாய்'' என்று வாழ்த்தி, தாமும் பழையபடி திடகாத்திரம் உள்ளவராக மாறினார். 

அவர் நோயாளியாக மாறியதும் சாந்தீபகனைச் சோதிப்பதற்காகத்தான். 

அதில் தேர்ச்சியடைந்த சாந்தீபகன்  நற்பேறு பெற்றான்.

குருபக்தி எல்லா நன்மைகளையும் தரவல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com