ஏழைகளின் கனி! இலந்தை மரம்!

நான் தான் இலந்தை மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் சிசிபஸ் ஜுஜுபா என்பதாகும். நான் ரம்நாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் உடல்சூட்டைத் தணித்து குளிச்சியைத் தரக் கூடியவன். 
ஏழைகளின் கனி! இலந்தை மரம்!
Published on
Updated on
2 min read

இலந்தை மரம்!

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?

நான் தான் இலந்தை மரம் பேசுகிறேன்.  எனது அறிவியல் பெயர் சிசிபஸ் ஜுஜுபா என்பதாகும். நான் ரம்நாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் உடல்சூட்டைத் தணித்து குளிச்சியைத் தரக் கூடியவன். 

குழந்தைகளே,  உங்கள் பள்ளி அருகில் தாத்தா, பாட்டிமார்கள் என் பழங்களை விற்பதை பார்த்திருப்பீர்கள்.  அது உங்கள் நலனுக்காகத் தான்.  ஏன்னா, இலந்தைப் பழம் உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, மூளையும் புத்துணர்வு பெறும். அவ்வாறு விற்கப்படும் என் பழங்களை நீங்கள் விரும்பி உண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  என் வேர், பட்டை மற்றும் கொழுந்து இலைகள் மருத்துவப் பொருள்களாகப்  பயன்படுகின்றன.

என் மரத்துப் பட்டையையோ, இலைகளையோ  நன்றாக அரைத்து நெல்லிக்காயளவு தயிருடன் கலந்து குடிந்தால் வயிற்றிலுண்டான கொதிப்படங்கி வயிற்றுக் கடுப்பு, இரத்தபேதி நீங்கும். என் பட்டையை அரைத்து தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து சிரங்குகள், உடம்பில் காயம்பட்ட இடங்களின் மீது தேய்த்தால் அவைகள் இருந்த இடம் தெரியாது.  நான் உங்களின் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருவேன். என் பழங்களை பகல் உணவுக்குப் பின்பு உண்டால் உணவு ஜீரணமாவதுடன், பித்தமும் கட்டுப்படும்.  குளிர்ச்சியான உடல்வாகு உள்ளவர்கள் என் பழங்களை மதிய வேளையில் மட்டுமே உண்ண வேண்டும். 

100 கிராம் இலந்தைப் பழத்தில் எரிசக்தி, 5.92 கலோரி, மாவுச் சத்து 17 கிராம், சர்க்கரைச் சத்து 10.5 கிராம், நார்ச்சத்து 0.60 கிராம், கொழுப்புச்சத்து 0.07 கிராம், புரதச்சத்து 0.08 கிராம் ஆகியவற்றுடன் விட்டமின் சத்துகளாக ஏ, சி, பி1, பி3 , சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், நீர்ச்சத்து, பொட்டாசியம், உபபுச்சத்து ஆகியவையும் அடங்கியுள்ளன. 

எலும்பு பலமில்லாதவர்கள் என் பழத்தை  தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் எலும்பு வலுபெறுவதோடு, பற்களும் உறுதிப் பெறும்.  என் பழங்களைப் போலவே, என் இலையிலும் அதிக மருத்துவ சத்துகள் இருக்கின்றன. இலைகளை மைய அரைத்து வெட்டுக்காயம் மீது கட்டினால் விரைவில் நலம் காண்பீர்கள்.  கோடைக்காலக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.  

குழந்தைகளே, உங்களுக்கு இளநரை இருக்கா, கவலைப்படாதீங்க, நானிருக்கேன். இளநரையைப் போக்கும் குணம் என் இலைக்குண்டு. என் இலையை நன்றாக அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.  நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது வாந்தி, தலைச்சுற்றல் வருகிறதா, வருந்தாதீங்க, என் பழத்தை சாப்பிடுங்க தலைச்சுற்றல், வாந்தி ஓடி விடும். சீனா, கொரியா மக்கள் என்னை பல வகைகளில் பயன்படுத்தி, உடலை பலப்படுத்திக் கொள்கிறார்கள். என் பழத்தில் இருக்கும் பாட்டுலினஸ் எனும் அமிலச்சத்து புற்றுநோய், லுகேமியா எனப்படும் ரத்துப்புற்று, ஹெச்.ஐ.வி. எனப்படும் பால்வினை நோய் ஆகியவற்றையும் தணிக்க வல்லது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.  மேலும், கே 562 எனப்படும் இரத்தப் புற்று நோய் செல்கள் குறைகிறது என்பதும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம், மரங்கள். அவைகள் அள்ள அள்ள தப்பாது பயன் தரும் அட்சயப் பாத்திரம். 

நான் சென்னை, அசோக்நகர், சாமியார் தோட்டம், அருள்மிகு திரியம்பகேஸ்வரர், இராமநாதபுரம் மாவட்டம், திரு உத்தரகோசமங்கை, அருள்மிகு மங்களநாதசுவாமி, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கீழ்வேளூர், அருள்மிகு கேடிலியப்பர், ஈரோடு மாவட்டம், பவானி நகரம் (திருநணா) அருள்மிகு சங்கமேஸ்வரர், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி, ஓமாம்புலியூர் அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் ஆகிய திருக்கோவில்களில் ஸ்தலவிருட்சமாக இருக்கிறேன். என் நட்சத்திரம் உத்திரம், தமிழ் ஆண்டு  வெகுதான்ய. நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
                                                             
(வளருவேன்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com