

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் வாகை மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் அல்பிசியா லாப்பெக் என்பதாகும். நான் மைமோசி குடும்பத்தைச் சேர்ந்தவன். மன்னர்கள் காலத்தில் வெற்றியின் அடையாளமாக என் மலர்களைத் தான் சூடுவார்கள். அதனால் தான் “வெற்றி வாகை சூடினான்” என்ற வார்த்தையே உருவானது. என் இலைகள், என் சகோதரன் முருங்கை இலையைப் போல இருக்கும். நான் சீகைக்காயைப் போல காய்களைக் கொண்டிருப்பேன். நான் வீசும் காற்றின் வேகத்தைக் தடுத்து, வரும் தூசையும், மாசையும் வடிகட்டி காற்றை சுத்தப்படுத்துவேன். மருத்துவத்தில் என் பங்கு மகத்தானது. நான் மூச்சு சார்ந்த நோய்ப் பிரச்னைகளைத் தீர்ப்பேன்.
என்னில் புரதச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. என் மரத்தின் பட்டைய நிழலில் உலர்த்தி பொடித்து பாலில் கலந்து குடிந்து வந்தால் பசி எடுக்காத பிரச்னை தீரும். வாய்ப் புண் குணமாகும். மோரில் கலந்து குடித்தால் பெருங்கழிச்சல் குணமாகும். என் பூக்கள் தேனீக்களுக்கு சொர்க்கபுரி. பூக்களிலிருந்து நறுமணத் தைலம் தயாரிக்கலாம். என் பூக்களை நீர் விட்டு பாதியாக சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால் வாத நோய் குணமாகும், விஷங்களை முறிக்கும்.
என் விதையிலிருந்து பெறப்படுகின்ற எண்ணெய் குஷ்ட நோய் புண்களை குணமாக்கும் தன்மை கொண்டது. அடிப்பட்ட காயத்தின் மீது மரப்பட்டையை பொடித்து தூவ விரைவில் காயம் ஆறும்.
குழந்தைகளே, என் இலை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாக உதவுகிறது, நிலத்திற்கு தழையுரமாகிறது. நான் உங்கள் வீட்டுக்குத் தேவையான தூண், கதவு, ஜன்னல், உத்திரம், மரச்சாமன்கள், மரச் செக்குகள், மேஜை, நாற்காலி செய்யவும், காகிதம் தயாரிக்கவும் மற்றும் ஏழை மக்கள் அடுப்பெரிக்கவும் பெரிதும் பயன்படுகிறேன். நான் மண்ணரிப்பையும் தடுப்பேன். நான் தரும் பிசினிலிருந்து கோந்து தயாரிக்கலாம்.
பெரும்பாலும் சிவனும், அம்பிகையும் உடனுறை ஆலையங்களில் தலவிருட்சமாக நானிருப்பேன். நாகப்பட்டினம் மாவட்டம், திருவாழப்புத்தூர் அருள்மிகு இரத்னபுரீஸ்வரர் திருக்கோயிலில் நான் தலவிருட்சமாக இருக்கிறேன்.
நான் கர எனும் தமிழ் ஆண்டை சேர்ந்தவன். மரம் நம் ஆரோக்கியத்தின் ஆதாரம். மரங்களால் சுற்றுச்சூழல் வளமாகும். உங்கள் வாழ்வும் நலமாகும். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.