நிலைக்கண்ணாடியும் நிம்மியும்

ஜூலி வளர்க்கும் பூனைக்குட்டியின் பெயர் நிம்மி. பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எந்நேரமும் ஜூலியை விட்டுப் பிரியாமல் அது இருக்கும்.  
நிலைக்கண்ணாடியும் நிம்மியும்
Updated on
2 min read

ஜூலி வளர்க்கும் பூனைக்குட்டியின் பெயர் நிம்மி. பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எந்நேரமும் ஜூலியை விட்டுப் பிரியாமல் அது இருக்கும்.  

அன்று பள்ளிவிட்டு வந்து வெகுநேரமாகியும் நிம்மியைக் காணாமல் ஜூலி தவித்தாள். வாசலில் வரும்போதே "மியாவ்வ்...' என்று குரல் கொடுத்தபடி வந்து மடியில் ஏறி அமருமே... எங்கே போனது இன்று... என்று ஜூலி நிம்மியைத் தேடத் தொடங்கினாள். நிம்மி தென்படவே இல்லை....வாசலிலேயே வருத்தமாக உட்கார்ந்து விட்டாள்.  

ஜூலி ஆசைப்பட்டாள் என்பதற்காக ஜூலி அறையில் ஒரு பெரிய நிலைக்கண்ணாடி ஒன்றை வாங்கி வைத்தார்அப்பா. தினமும் நிலைக் கண்ணாடியின் முன்பு நின்றுகொண்டு எப்போதும் தன்னை அழகு பார்த்துக் கொண்டே இருப்பாள். அடிக்கடி தன் அம்மாவின் புடைவையை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டு பேசிச் சிரித்தபடி அழகு பார்ப்பாள். "புடவையை வைத்துக் கொண்டு விளையாடாதே' என்று அம்மா பல முறை கூறியும் அவள் அதைக் கேட்கவில்லை.

ஜூலி இப்படி அடிக்கடி நிலைக்கண்ணாடி முன்பு நின்றுகொண்டு அழகு பார்ப்பதையும், தனக்குத்தானே பேசிச் சிரிப்பதையும், நடனமாடுவதையும் ஒருநாள் நிம்மி பார்த்துவிட்டது.  

வழக்கம்போல் ஒரு நாள் பள்ளிவிட்டு வந்ததும்  ஜூலி தன் அம்மாவின் புடவையை எடுத்து இடுப்பில் சுற்றிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டு தனக்குத் தானே பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த நிம்மிக்கு, அவளைப் போல தானும் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றியது. சிறிது நேரத்தில் அம்மாவின் குரல் கேட்டு, ஜூலி அந்தப்புடவையைக் கழட்டி அப்படியே போட்டுவிட்டு ஓடிவிட்டாள்.

அப்போது நிம்மி, அந்தப் புடவைக்குள் புகுந்து கொண்டது. வழுவழுப்பாக இருந்த அந்தப் புடவை அதற்கு மிகவும் பிடித்திருந்தது. மகிழ்ச்சியில் அந்தப் புடவைக்குள் உருண்டு  புரண்டு விளையாடியது. புடவையில் முகத்தை புதைத்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று பார்த்தது.  துள்ளிக் குதித்தது. அந்தப் புடவையை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டதால், எதிரில் இருப்பது தெரியாமல் கண்ணாடிக்குப் பின் உருண்டு சென்றது. அதனால் புடவைக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை. குரல் கொடுத்து கத்தவும் முடியவில்லை. அப்படியே தூங்கிப் போய்விட்டது.  

ஜூலி வாசலில் சோர்வாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்த அம்மா,  அவளைக் காரணம் கேட்க, அவளும் "நிம்மியைக் காணும்மா...'  என்று கூறி அழ ஆரம்பித்தாள்.

""அட, பூனைக்குட்டியைக் காணோம் என்றால் அலமாரி, பீரோ, பெட்டிக்கு அடியில் போய்ப் பாரு. அசந்து தூங்கிக் கொண்டிருக்கும், இல்லையேல் எங்காவது வெளிவர முடியாமல் மாட்டிக் கொண்டிருக்கும்... இதற்குப் போய் அழலாமா?'' என்றாள்.

ஜூலிக்கு உடனே பொறி தட்டியது. "ஆமாம், காலையில்  என் அறையில்தானே நிம்மி படுத்திருந்தது.  அங்கிருக்கும் பீரோவுக்குப் பின்னாலோ, இல்லை நிலைக்கண்ணாடிக்குப் பின்னாலோ போய்ப் பார்க்கலாமே...'  என்று உடனே தன் அறைக்குச் சென்று பீரோவிக்குப் பின்னால் எட்டிப் பார்த்தாள், நிம்மி அங்கு இல்லை. நிலைக்கண்ணாடிக்குப் பின்னால் சென்று பார்த்தாள். அம்மாவின் புடவையை ஓர் உருண்டை போல சுற்றிக்கொண்டு நிம்மி அங்கு கிடந்தது. அதை மெல்லமாகத் தூக்கினாள்.  மூச்சுவிட முடியாமல் நிம்மி திணறிக் கொண்டு நெளிந்தது. ஜூலியால் புடவையைப் பிரித்து அதை வெளியே எடுக்க முடியவில்லை. உடனே அம்மாவைக் கூப்பிட்டாள். அறைக்குள் வந்த அம்மா பதறிப் போய் அந்தப் புடவை உருண்டையை வாங்கி மெல்ல மெல்ல பிரித்தாள். ஒரு வழியாக நிம்மி வெளியே வந்து ஜூலியைப் பார்த்து "மியாவ்வ்..' என்று தழுதழுத்த குரலில் கத்தியது..

""இப்படி செய்துட்டியே ஜூலி.... நிம்மி பாவம் மூச்சு விட முடியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்? இதற்காகத்தான் பல முறை உன்னை எச்சரித்தேன், என் புடவையை எடுத்து விளையாடாதே என்று... கேட்டாயா...?'' அம்மா கடிந்து கொண்டாள்.   

""சாரிம்மா.... இனிமே இப்படிச் செய்ய மாட்டேன். சாரி நிம்மிக் குட்டி... உன்னையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்....'' என்று அம்மாவிடம் இருந்து அதை வாங்கிக் கட்டி அணைத்துக் கொண்டாள் ஜூலி.

நிம்மி அவளைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு அவள் அணைப்பில் அடங்கிப் போனது. இந்தக் காட்சியை அந்தப் பெரிய நிலைக்கண்ணாடி பிரதிபலித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com