

என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
நான் தான் பராய் மரம் பேசுகிறேன். என் அறிவியல் பெயர் ஸ்டிரேபிளஸ் ஆஸ்பெர் என்பதாகும். நான் மொராசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் வெள்ளை நிற மரம். நான் கரும்பச்சை நிறத்தோடு புதர்க் காடுகளில் காணப்படுவேன். எனக்கு பிறா மரம், குட்டிப் பலா என வேறு பெயர்களும் உண்டு.
ஒரு காலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருப்பராய்த்துறை என்னும் ஊரில் நான் இல்லாத இடமே இல்லை. நான் என்னத்த சொல்ல, இன்று என்னை தேடி தான் கண்டுப்பிடிக்க வேண்டியிருக்கு. எனக்கு கணுக்கள் அதிகமாக இருக்கும். பிராய் மரத்தின் கணுவைப் போன்று மனம் வலிமையுடையதாக இருக்க வேண்டும் என்பர். எனவே தான், மாணிக்கவாசகரும் திருவாசகத்தில் "வன்பராய் முருடொக்கும் என் சிந்தை' என்கிறார். அதாவது, "என் மனமானது வலிய பராய் மரத்தின் கணுப் போன்றது' என்கிறார்.
என்னிடம் மருத்துவப் பண்புகள் அதிகமாக இருக்கு. என்னுடைய இலைகளையும், பட்டைகளையும், வேர்களையும் சேர்த்து சூரணமாக்கி பாலில் கலந்து ஒரு கிராம் அளவுக்கு இரண்டு வேளை உண்டு வந்தால் எலிக்கடி, சிராய் போல உடலில் உண்டாகும் சுரசுரப்பு குணமாகும்.
என் பாலை பித்த வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் வெடிப்பு குணமாகும். என் இலைகளைப் பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் பேதி கட்டுப்படும்.
குழந்தைகளை, நான் சொல்வதை கேளுங்க, குறிப்பாக தீராத நோயாக கருதப்படும் புற்று நோய்க்கு நான் அருமருந்தாக இருக்கிறேன். என் இலைகளிலிருந்து எடுக்கப்படும் வலாட்டைல் எனப்படும் எண்ணெய் புற்றுநோய் தீர்க்கும் மருந்து என அறிவியலாளர்கள் மெய்ப்பித்துள்ளனர். இந்த எண்ணெய்யில் பைட்டால், பார்நசீன், டிரான்ஸ் பார்நசைல் அசிடேட், கார்யோபைலின் மற்றும் டிராஸ்-டிரான்ஸ் பார்னசீன் ஆகிய வேதிப்பொருள்கள் உள்ளது. இந்த எண்ணெய் இரத்தப் புற்றுநோயை குணப்படுத்த வல்லது.
என் மரத்தின் பட்டையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துத் தோலில் உள்ள நோய்களுக்குப் போட்டால் தோல் நோய் குணமாகும். மின்னலைத் தாக்கும் விருட்சம் என்றும் என்னை சொல்வார்கள். நான் இருக்கும் இடத்தில் 5 கி.மீ சுற்றளவுக்கு இடி, மின்னல் உங்களைத் தாக்காது.
நான் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவில் தலவிருட்சமாக இருக்கிறேன். சித்தர்கள் கூற்றுப்படி என்னை வணங்கி வழிபட்டால் புற்றுநோய்கள் குணமாகும்.
மரங்களை வளர்த்தால் மழை பொழிந்து மனித இனத்துக்கு வளம் சேர்க்கும். உயிரினங்களுக்கு உதவிகள் பல செய்து, தான் வாழ்ந்தும் மற்றவர்களையும் வாழ வைக்கும் மரங்களை வளர்ப்பதும், பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமை. இனி ஒரு விதி செய்வோம். அதில் வீதி எங்கும் மரம் வளர்ப்போம். என் நட்சத்திரம் கேட்டை. நன்றி, குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.