சூப்பர் சிவா! - 7: க்ளூகோஸ்!

அடுத்த நாள் இளங்கோ கொடுத்த கடலையை வேண்டாம் என்றான் சிவா.
சூப்பர் சிவா! - 7: க்ளூகோஸ்!


அடுத்த நாள் இளங்கோ கொடுத்த கடலையை வேண்டாம் என்றான் சிவா. ""வயிற்று வலியோடு ஓட முடியாது!...'' என்றான். 

அதனால் அடுத்தநாள் இளங்கோ கோழி முட்டைகளோடு வந்தான். ஆளுக்கொரு பச்சை முட்டையைக் குடிப்போம்! ""ஓடுவதற்கு பலம் கிடைக்கும்''  என்று சொல்லிவிட்டு அவன் ஒரு முட்டையை உடைத்த அப்படியே வாயில் ஊத்திக் கொண்டான்.   சிவாவின் கையில் ஒரு முட்டையைக் கொடுத்தான்.

சிவா முட்டையை வைத்துக் கொண்டு விழித்துக் கொண்டிருந்தான். அவன் தயங்குவதைப் பார்த்து, ""பயில்வான்களெல்லாம் பத்து பச்சை முட்டைகள் குடிப்பார்கள்..... நீ பார்த்தது இல்லையா?...'' என்று இளங்கோ கேட்டான். 

சினிமாவில்,  குண்டுமணி முட்டையை உடைத்துக் குடிப்பது சிவாவுக்கு நினைவுக்கு வந்தது. அருளை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்தான்.... முட்டையை உடைத்து கண்ணை மூடிக்கொண்டு குடித்துவிட்டான்!

சிவா மெதுவாக நாலு ரவுண்ட் ஓடினான். ஓடும்போது நாயும் பின்னால் ஓடி வந்தது. 

""என்னடா இன்னைக்கு அருளை காணவில்லை. ஓட வரவில்லையா?''சிவா இளங்கோவைக் கேட்டான். 

""அவன் மாலையில் ஓடுகிறான்!'' என்றான் இளங்கோ. சிவா "உச்' கொட்டினான். சிவாவுக்கு இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் வயிறு வலித்தது. வீட்டிற்குச் சென்று நடந்ததை அம்மாவிடம் சொன்னான்.  

""பச்சை முட்டை சாப்பிட்டால் வயிறுதான் வலிக்கும்!'' என்றாள் அம்மா.

அடுத்த நாள்.... இளங்கோ தந்த பச்சை முட்டையை, ""வேண்டாம்'' என்று கூறிவிட்டான் சிவா. முட்டைகளை இளங்கோவே குடித்து விட்டான். ஆனால் அவனுக்கு கொண்டைக் கடலையினாலோ, பச்சை முட்டையினாலே வயிறு வலிக்காதது பற்றி சிவாவுக்கு வியப்பாக இருந்தது. இருவரும் ஓடி முடித்து வீட்டிற்குச் சென்றார்கள். 

அடுத்த நாள்.... இளங்கோ ஒரு பாக்கெட் "க்ளூகோஸ்' கொண்டு வந்தான்.

"இதை ஒரு ஸ்பூன் சாப்பிடு!.... நல்ல பலம் கிடைக்கும்...''  என்றான். 

சிவா க்ளூகோûஸ ஒரு ஸ்பூன் வாயில் போட்டான்.  நாக்கில் ஜில்லென்று குளிர்ச்சி!.... தித்திப்பு!.... அது அவனுக்குப் பிடித்துவிட்டது!  க்ளூகோஸ் சாப்பிடுவதற்காகவே தினமும் ஓடலாம் போல் இருந்தது. 

விளையாட்டுப் போட்டி நடைபெற பத்து நாட்கள் இருந்தன. பத்து நாட்களும் இருவரும் ஓடினார்கள். அந்த பத்து நாட்களும் சிவாவின் பின்னால் அந்த நாய் ஓடி வந்தது! அவன் அதைப் பெரிதாக நினைக்க வில்லை.... கொண்டைக் கடலையோ, முட்டையோ, க்ளூகோúஸா  அது சாப்பிடாமல் இப்படி ஏன் தினமும் அந்த நாய் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சிவாவிற்குப் புரியவில்லை....

ஓட்டப்பந்தயம் தவிர, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் சிவா சேர்ந்திருந்தான். பள்ளியின்கபடிக் குழுவிலும் அவன் இருந்தான். 

மைதானத்தில் சிரிப்பொலி!

விளயாட்டுப் போட்டிக்காக பள்ளி விழாக்கோலம் பூண்டிருந்தது. பிள்ளைகளின் விளையாட்டைப் பார்க்க பெற்றோரும்,  பொது மக்களும் வந்திருந்தனர்.

மைதானத்தின் நான்கு பக்கங்களிலும் நான்கு அணிகளுக்காகக் கொட்டகை போடப்பட்டிருந்தது. கொட்டகையின் உச்சியில் அணிகளின் வண்ணக்கொடிகள் பறந்தன. ஒவ்வொரு கொட்டகையில் இரண்டு பெஞ்சுகளில் விளையாட்டு வீரர்கள் உட்கார்ந்திருந்தனர். அணித் தலைவன் அவர்களைக் கவனித்துக் கொண்டான். கொட்டகையின் மூலையில் மண் பானையில் தண்ணீர் இருந்தது.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் சிவாவுக்குத் தோல்விதான்... அவைகளில் அருள் வெற்றி பெற்றிருந்தான். 

100 மீ, 200 மீ, 400 மீ, ஓட்டப் பந்தயங்கள் முடிந்த பிறகு 800 மீ. தொடங்கியது. 

""ஆன் யூ மார்ச், செட், ஒன், டூ, த்ரீ'' என்று சொல்லி டிரில் மாஸ்டர் விசில் ஊதியதும் எல்லோரும் ஓடினார்கள்.

சிவா மெதுவாக ஓடினான். அவன் முதல் ரவுண்ட் முடிக்கும்போது மற்றவர்கள் இரண்டாவது ரவுண்ட், அவன் இரண்டாவது ரவுண்ட் ஓடும் போது வழக்கமாக அவன் கூட ஓடும் நாய் பின்னால் ஓடி வந்தது. அதைப் பார்த்து மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்!.... சிவா மூன்றாவது ரவுண்ட் வரும்போது மற்றவர்கள் ஓடி முடித்தனர். இளங்கோவும் முடித்திருந்தான்.... அருள் முதலாவதாக ஓடியிருந்தான்.... சிவா ஓட்டத்தை நிறுத்தவில்லை... நாலு ரவுண்டையும் ஓடி முடிக்க வேண்டுமென்பதற்காக ஓடினான். நாய் பின்னால் ஓடுவது, நாய் துரத்துவது மாதிரி மற்றவர்களுக்குத் தெரிந்தது. அதனால் நாயை விரட்டுவதற்காக சத்தமிட்டனர். நாய் வேகமெடுத்தது!.... சிவாவை முந்திவிட்டது!.... சிவா நாயைத் துரத்திக் கொண்டு ஓடுவதுபோல் இருந்தது!.... மைதானத்தில் சிரிப்பொலி கேட்டது!.... சிவா தலையைக் குனிந்து கொண்டு கொட்டகைக்குத் திரும்பினான். 

""நாலாவது ரவுண்டு ஏன்  ஓடினே?...திரும்பி வர வேண்டியதுதானே!...'' என்று அணித் தலைவன் கேட்டான். சிவா பதிலளிக்கவில்லை. 

சிறிது நேரம் கழித்து வந்த இளங்கோ அவனிடம், ""சிவா உன்னை டிரில் மாஸ்டர் கூப்பிடுகிறார்...'' என்றான். 

சிவா டிரில் மாஸ்டரிடம் போய் அமைதியாக நின்றான். ""டேய், என்னடா நாயைத் துரத்திக்கிட்டு ஓடுற!.... உங்க அப்பா எவ்வளவு பெரிய விளையாட்டு வீரர் தெரியுமா?... ஃபுட் பாலில் ஸ்டேட் பிளேயர்!... புலிக்குப் பிறந்தது பூனையாகி விட்டது!'' என்றார்.

அதைக் கேட்டு சிவாவுக்குக் கண்கள் கலங்கின.

 மாமா மகள்!

""கமான் சிவா!.... கமான் சிவா!...''  என்ற குரல் ஒலி எங்கும் கேட்கிறது. அருளை முந்துவதற்கு சிவாவுக்கு இன்னும் ஒரு மீட்டர் தூரம்தான் இருக்கிறது. மற்றவர்களெல்லாம் ரொம்பப் பின்னால் ஓடி வருகிறார்கள். இளங்கோவை நாய் துரத்தி வருகிறது. இதோ அருளை சிவா முந்தி விட்டான். வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டான்.... வின்னர் சிவா என்று அறிவிப்புக் கேட்கிறது. கனவு கண்டு கொண்டிருந்த சிவாவின் முகத்தில் யாரோ தண்ணீர் தெளித்தார்கள்.

சிவா கண் விழித்துப் பார்த்தான். அம்மா கையில் சொம்போடு நின்றிருந்தார். அருகில் அவனுடைய மாமா மகள் கலா. இவள் எப்போது வந்தாள்?....

சிவா கடிகாரத்தைப் பார்த்தான். மணி எட்டு.  ""தினமும் எட்டு மணி வரை தூங்குவியா?...''  என்று கலா கேட்டாள். அவன் பதில் சொல்வதற்கு முன் அம்மா பதில் சொன்னாள்.  ""நேத்து ஸ்கூல்லே ஸ்போர்ட்ஸ் டே... "கப்' வாங்கிக்கிட்டு வந்த களைப்பிலே அய்யா தூங்குறாரு!...''

""சிவா, நாயைத் துரத்திக்கிட்டு ஓடினீயாமே!'' என்றால் கலா கிண்டலாக...

அப்போது உதயன் அங்கு வந்தான். இவன்தான் சொல்லியிருக்க வேண்டும்... சிவா தம்பியை முறைத்தான். 

""நாலு ரவுண்ட் ஓடியிருக்கிறேன்!...'' என்றான் பெருமையாக!

""ரொம்பப் பெரிய கிரவுண்டோ?'' என்று கேட்டாள் கலா.

""சரி, கடைக்குப் போய் தேங்காய் வாங்கிட்டு வா... சட்னி அரைக்கணும்.... மாமா வந்திருக்காங்க....'' என்றாள் அம்மா.

தொடரும்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com