சூப்பர் சிவா! - 8

அம்மாவின் அண்ணன்தான் அவனுக்கு மாமா. வாட்டசாட்டமாக இருப்பார். மிலிட்டரியில் இருந்தவர். இப்போது வங்கியில் வேலை பார்க்கிறார். மாமா என்றால் அவனுக்கு பயம்! அவர் முன்னால் போக மாட்டான்!  
சூப்பர் சிவா! - 8

இங்கிலீஷ் பாடம்!

அம்மாவின் அண்ணன்தான் அவனுக்கு மாமா. வாட்டசாட்டமாக இருப்பார். மிலிட்டரியில் இருந்தவர். இப்போது வங்கியில் வேலை பார்க்கிறார். மாமா என்றால் அவனுக்கு பயம்! அவர் முன்னால் போக மாட்டான்!  அவர் அவனைப் பார்த்தால் , ""ஏண்டா, சாப்பிடறயா?... இல்லையா?... வளரவே மாட்டேங்கிறே?....நரங்கிப் போயிருக்கியே?....'' என்பார். இப்படி ஏதாவது சொல்வதினாலேயே அவன் அவர் முன்னால் போகமாட்டான். மாமா கண்ணிலே படக்கூடாது என்றுநினைப்பான். ஆனால் மாமா மகள் கலாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அவள் வந்தால் இருவரும் நன்றாகத் திரிவார்கள். ""கலா என்ன அவன் பின்னாலே நாய்க்குட்டி மாதிரி திரியறே?'' என்று அம்மா சொல்லுவாள்.

கலா வந்தது அவனுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் நாயைத் துரத்திக்கிட்டு ஓடின விஷயம் தெரிந்ததுதான் அவனுக்கு அவமானமாக இருந்தது. 

சிவா பாத்ரூமுக்கு போய் முகத்தைக் கழுவினான். பல் துலக்கினான். காபியைக் குடித்தான். ""கடைக்குப் போகணும்னு சொன்னியே'' என்று அம்மாவுக்கு ஞாபகப்படுத்தினான்.

அம்மா தேங்காய் வாங்குவதற்கு ரூபாய் கொடுத்துக் கொண்டே, ""...."கமிஷன்' அடிக்காம வாங்கிட்டு வா'' என்றாள். 

பக்கத்தில் கலா நின்றுகொண்டிருந்தாள். சிவாவுக்கு கோபம் வந்தது. ""என்னம்மா'' என்று சிணுங்கிய அவன் ""நான் கடைக்குப் போக மாட்டேன்...'' என்று ரூபாய் நோட்டை கீழே வீசி எறிந்தான். 

""கலா முன்னாடி சொன்னது உனக்கு கிரீடம் இறங்கிப் போச்சாக்கும்!...   

அவள் அந்நியமா?... மாமா மகள்தானே?....'' என்று சமாதானம் சொன்னபிறகு கிளம்பினான்.

""சிவா சீக்கிரம் வா. இங்கிலீஷ் பாடம் படிப்போம்'' என்றாள் கலா.

""இங்கிலீஷா,.... அவன் வெள்ளைக்கார துரைதான்'' என்று அம்மா கேலியாகச் சொன்னாள். அதைக் காதில் வாங்காமல் சிவா ஓடினான்.

அவன் திரும்பி வந்தபோது ஒரு மூலையில் உட்கார்ந்து கலாவும், உதயனும் 7- ஆம் வகுப்பு இங்கிலீஷ் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள். கலா வாசிக்க உதயன் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தான். 

கலாவுக்கு உதயன் வயது. அவளும் 7 -ஆம் வகுப்பு படித்தாள். சிவாவுக்கு ஒரு வயது கூடுதல். அவன் எட்டாம் வகுப்பு படித்தான். 

""சிவா, படி!...'' என்று இங்கிலீஷ் புத்தகத்தை நீட்டினாள் கலா. 

""7 -ஆம் வகுப்பு படிக்க வராது.... 8 -ஆம் வகுப்புதான் படிப்பேன்!...'' என்றான் சிவா.

""என்ன இது? வேடிக்கையாக இருக்கிறது!.... என்று சிரித்த கலா, ""சரி படி!...'' என்றாள்.

உண்மையில் சிவாவுக்கு 7 -ஆம் வகுப்பு இங்கிலீஷ் புத்தகம் படிக்கத் தெரியாது. 8 -ஆம் வகுப்புப் புத்தகம் படிக்கிறேன் என்று சொன்னதற்குக் காரணம் இருந்தது. வகுப்பில் வாத்தியார் வாசிக்கச் சொல்லும்போது படிப்பதற்காக இங்கிலீஷ் புத்தகத்தில் தமிழில் எழுதி வைத்திருந்தான்!.... இப்போது அதை வாசித்தான். நான் வாசிக்கிறேன் என்று கலா புத்தகத்தைக் கேட்டதற்கு, ""தரமாட்டேன்'' என்று புத்தகத்தை எடுத்துக்கொண்டு சிவா வெளியே ஓடி விட்டான்!

பூங்காவில் பல்டி!

மாலையில் எல்லோரும் பூங்கா சென்றனர். ""ஊஞ்சலில் ஆட வேண்டும்'' என்று கலா கேட்டாள். பூங்காவில் இரண்டு ஊஞ்சல்கள். அதில் ஒன்றில் சங்கிலி கழன்று கிடந்தது. ஒரு ஊஞ்சலைப் பிடிப்பதற்காக சிவா ஓடினான். அதில் ஒரு குழந்தை ஆடிக்கொண்டிருந்தது. 

""காத்திருப்போம்!....'' என்றான் சிவா.

சீசாவில் ஒரு பக்கத்தில் போய் கலா உட்கார்ந்தாள். அவளோடு விளையாட வேண்டுமென்பதற்காக மறு முனையில் சிவா உட்கார்ந்தான். சிறிது நேரம் இருவரும் உயர்ந்தும் தாழ்ந்தும் விளையாடினார்கள். சிவா பலமாக தாழ்த்தி உட்கார்ந்துகொண்டு, ""என்னை உயர்த்த முடியுமா?...'' என்று கேட்டான்.  கலா மூச்சைப் பிடித்துக்கொண்டு முயற்சி செய்தாள். முடியவில்லை.... ""நானும் வர்றேன்...'' என்று உதயன் கலாபக்கம் உட்காரப் போனான். 

""நீ உட்காராதே!'' என்று சிவா சொல்லிக் கொண்டே எழுந்து விட்டான். அதனால் கலா இருக்கும் பக்கம் விசையோடு தாழ்ந்து அவள் கீழே விழுந்தாள்!
சிவா பதறி அருகே ஓடினான்.... ""ஒண்ணுமில்லே'' என்று கலா முழங்கையில் ஒட்டியிருந்த மணலைத் தட்டிவிட்டு எழுந்தாள்.

""நல்லா பல்டி அடிச்சே!''  என்றான் சிவா. 

"" எனக்கு பல்டி அடிக்கத் தெரியாது!'' என்றாள் கலா.

""எனக்கு பல்டி அடிக்கத் தெரியும்! அடிச்சுக் காட்டட்டுமா? '' என்று கூறிய சிவா, அங்கே கிடந்த மணலில் தலைகீழாக பல்டி அடித்துக் காட்டினான். இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு உடம்பை வில்லாக வளைத்தான்! கலா தன்னை மறந்து கை தட்டினாள். அது அவனுக்கு ஊக்கம் தந்தது. அருகிலிருந்த "பார்' கம்பியில் தலைகீழாக தொங்கினான். சர்க்கஸில் பார் கம்பியில் அங்குமிங்கும் ஊஞ்சலாடி இன்னொரு கம்பியைப் பிடிப்பதுபோல் பிடித்தான்! இதையெல்லாம் கீழே விழுந்து விடுவோம் என்கிற பயமில்லாமல் செய்தான்! "பார்' கம்பியில் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமாக வேகமாகத் தாவிச் சென்றான். மணலில் கைகளை ஊன்றியும், ஊன்றாமலும் பல்டி அடித்தான்! கலா எல்லாவற்றையும் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

சற்று தொலைவில் நின்றிருந்த டிரில் மாஸ்டரின் கண்களும் சிவா பல்டி அடிப்பதையும் பார் கம்பியில் விளையாடியதையும் ஆச்சரியத்தோடு பார்த்தன. அவர் மனதிற்குள் ஒரு எண்ணம் வந்தது.

பூங்காவில் சிவா "பார்' கம்பியில் விளையாடியதையும், பல்டி அடித்ததையும் கலா பாராட்டியது அவனுக்கு பிடித்திருந்தது. அதே நேரத்தில் அவள் சொன்ன வாக்கியம் அவன் மனதில் பதிந்து விட்டது!  ""கரணம் தப்பினால் மரணம்!'' என்று அவள் கூறியதுதான் அது!

""...."கரணம்' என்றால் என்ன?'' என்று சிவா கேட்டான்.

 "" குரங்காட்டி வித்தை காட்டும்போது குரங்கை குட்டிக் கரணம் போடுன்னு சொல்றான். அது பல்டி அடிக்கிறது!.... அதுதான் நீயும் அடிக்கிறே!.... எசகு பிசகாக செய்தால் மரணம்தான்! ... அதைத்தான் "கரணம் தப்பினால் மரணம்' னு சொல்லுவாங்க.... '' என்றாள் கலா விளக்கமாக.

அதிகாலையிலேயே கலா ஊருக்குப் போய்விட்டாள். அவளுக்குப் பள்ளிக்கூடம் இருந்தது. 

சிவாவுக்குப் பள்ளிக்கூடம் போகவே விருப்பம் இல்லை. நண்பர்கள் அவனை கேலி செய்வார்களோ...

விளையாட்டுப் போட்டிகளில் அவனுக்கு வெற்றி பூஜ்யம். அருளுக்கு எல்லா போட்டிகளிலும் வெற்றி. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் ஆண்டு விழாவில்தான் தருவார்கள். ஆண்டு விழா நடக்க இன்னும் இரண்டு நாட்கள் இருந்தன. அவனுக்குப் பரிசு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை... கிடைத்தது அவமானம்! "நாயைத் துரத்தியவன்' என்று கேலிப்பெயர்வேறு!..... அந்த அவப் பெயர் மாறுமா என்று சிவா வருந்தினான்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com