சூப்பர் சிவா! 10

பைக் கீழே விழாமல் ஓட்டுவதற்கான காரணம் சிவாவுக்கு சட்டென்று புரிந்துவிட்டது. வேகம்தான் காரணம்! மெதுவாக ஓட்டினால் கீழே விழுந்து விடுவான். இதை வட்ட வடிவமான சுவரில்தான் செய்யமுடியும்!
சூப்பர் சிவா! 10

டிரில் மாஸ்டர் சிவாவைக் கூப்பிட்டார்!
 பைக் கீழே விழாமல் ஓட்டுவதற்கான காரணம் சிவாவுக்கு சட்டென்று புரிந்துவிட்டது. வேகம்தான் காரணம்! மெதுவாக ஓட்டினால் கீழே விழுந்து விடுவான். இதை வட்ட வடிவமான சுவரில்தான் செய்யமுடியும்! இதை சதுரமான, செவ்வகமான சுவர்களில் செய்ய முடியாது!
 இதை சந்திரா அக்காவிடம் சொன்னபோது "புத்திசாலிடா!' என்று அவனைப் பாராட்டினாள்.
 திங்கட்கிழமை அவன் பள்ளிக்கூடம் போனான். டிரில் மாஸ்டர் அவனைக் கூப்பிட்டார். அருகில் போய் வணக்கம் சொன்னான்.
 "சிவா, மால்கம் என்கிற சாகச நிகழ்ச்சி நீ செய்யப் போகிறாய்!.... ஆண்டு விழாவில் கலை நிகழ்ச்சி நடக்கும் இல்லையா, அது போல...'' என்றார் டிரில் மாஸ்டர்.
 "மால்கம்... ஆ?'' என்று கேட்டு ஒன்றும் புரியாமல் விழித்தான் சிவா.
 டிரில் மாஸ்டர் அவனை பள்ளி மைதானத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கே ஓரிடத்தில் வழவழப்பான வழுக்கு மரம் ஒன்று நடப்பட்டிருந்தது. அந்த மரம் 20 அடி உயரம் உச்சியில் குமிழ் இருந்தது. சிவா மரத்தை அண்ணாந்து பார்த்தான்.
 "இதுதான் மால்கம் போஸ்ட்!... இதில்தான், இப்படி வித்தைகள் செய்ய வேண்டும்!'' என்று கூறி டிரில் மாஸ்டர் கையிலிருந்த ஒரு புத்தகத்தைக் காட்டினார்.
 சிவா புத்தகத்திலுள்ள படங்களைப் பார்த்தான். அதில் ஒரு சிறுவன் மால்கம் போஸ்ட் உச்சியில் இரண்டு கை, கால்களை நீட்டி பறப்பதுபோல் செய்கிறான். போஸ்டின் பக்கவாட்டைக் கால்களால் பிடித்துக் கொண்டு கைகளை அந்தரத்தில் காட்டுகிறான்! இன்னும் இரண்டு பேர் மூன்று பேர் சேர்ந்து செய்யும் காட்சிகளும் படங்களில் இருந்தன.
 சிவாவுக்கு படங்களைப் பார்க்கும்போது மரணக் கிணறுதான் நினைவுக்கு வந்தது! கரணம் தப்பினால் மரணம்... சிவா பயந்து விட்டான்! அதனால், "சார் எனக்கு மால்கம் வேண்டாம்!'' என்றான்.
 "சிவா, நீ பூங்காவில் பல்டி அடிக்கிறதைப் பார்த்தேன்.... பார் கம்பியில் உடம்பை வில்லாக வளைக்கிறதைப் பார்த்துத்தான் மால்கமுக்கு உன்னை கூப்பிடுகிறேன்! உன்னால் முடியும்!'' என்று டிரில் மாஸ்டர் அவனை வளைப்பது போல் பேசினார். அவனும் வளைந்து விட்டான்!
 "சரி! நான் மால்கமுக்கு வருகிறேன் சார்!'' எனறான்.
 "பயப்படாதே!.... நான் உனக்கு சொல்லித் தருகிறேன்... நல்ல பெயர் வாங்கலாம்!'' எனறார் டிரில் மாஸ்டர்.
 நல்ல பெயர் வாங்கலாம் என்று டிரில் மாஸ்டர் சொன்னது சிவாவின் மனதில் பதிந்து விட்டது. காப்பி அடிச்சவன் என்று வகுப்பில் வாங்கிய பெயரும் பூட்டு திருடியவன் என்று வீட்டில் வாங்கிய பெயரும் நாயைத் துரத்திக் கொண்டு ஓடியவன் என்று பள்ளிக்கூடத்தில் வாங்கிய பெயரும் மறைவதற்கு இதுதான் நல்ல வாய்ப்பு என்று சிவா நினைத்தான்.
 அதனால் மால்கம் பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டான். தினமும் பயிற்சி மாலையில் நடந்தது. பள்ளிக்கூடம் விட்டபிறகு எல்லா மாணவர்களும் போன பிறகு டிரில் மாஸ்டர் அவனுக்கு சொல்லிக் கொடுத்தார். புத்தகத்திலுள்ள விளக்கத்தையும், படத்தையும் பார்த்து அவர் சொல்வதை சிவா செய்ய வேண்டியிருந்தது.
 சிவா தினமும் மாலையில் வீட்டிற்கு தாமதமாக வந்தான். "எங்கே போறே?'' என்று அம்மா கேட்டாள். "பள்ளி ஆண்டு விழாவில் மால்கம் நிகழ்ச்சி செய்யப்போறேன்!... அதுக்குப் பயிற்சி செய்யறேன்...'' என்றான் சிவா.
 "ஒரு கொம்புலே ஏறி தலைகீழா பல்டி அடிக்கிறான்மா!'' என்று உதயன் அம்மாவிடம் சொல்லிவிட்டான்!
 "என்னடா, ஆபத்தானதையா பள்ளிக்கூடத்திலே சொல்லிக் கொடுப்பாங்க?''
 "மால்கம்ங்கறது ஒரு டிரில்!.... உடற்பயிற்சி,.... அதுல வித்தையும் கலந்து இருக்கும்!...'' என்றான் சிவா.
 "என்ன வித்தையோ... ஜாக்கிரதை!'' என்று அம்மா சொன்னாள்.
 ஒருநாள் சந்திரா அக்கா, "என்னடா சிவா, கதை கேட்க வரலே..... வீட்டுக்கு முன்னாடி பம்பரம் விளையாடிக்கிட்டு இருப்பே.... ஆளையே காணோம்!'' என்று கேட்டார்.
 "ஆண்டு விழாவில் மால்கம் செய்யறேன்.... அதுக்கு பிராக்டிஸ் இருக்கு அக்கா'' என்றான் சிவா.
 "அது என்ன மால்கம்?''
 "இருபது அடி உயர போஸ்ட் இருக்கும்!.... அதுலே கையை விட்டு, காலை விட்டு வித்தைகள் செய்வேன்!''
 "கேட்கவே பயங்கரமா இருக்கு!.... எப்படிடா செய்வே?... நானும் பார்க்க வரேன்'' என்றார் அக்கா.
 அக்கா வருகிறேன் என்று சொன்னது சிவாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அக்கா வருவதைப் பற்றி அம்மாவிடம் சொன்னதும் அம்மாவும் வருகிறேன் என்றாள். கலாவும் பார்க்க வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று சிவாவின் மனதில் ஓரத்தில் ஆசை வந்தது.
 ஹெச்.எம். அவனை "குட்' என்று
 பாராட்டிவிட்டுப் போனார்!
 சிவாவின் அரசு ஆண்கள் உயர் நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடக்கும். தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்த முறை அமைச்சர் கலந்து கொள்கிறார். அதனால் ஏற்பாடுகள் தடபுடல்!
 பத்தாம் வகுப்பு மாணவர்கள் நாடகம் போடுகிறார்கள். மாணவிகள் இல்லையென்பதால் மாணவர்களுக்கு ஏற்ற நடன நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகைகள் நடந்தன.
 ஆண்டு விழாவில் மால்கம் நிகழ்ச்சி முதல் முறையாக நடக்கிறது. அதனால் அது புதுமையாக இருக்கும், எல்லோரையும் கவரும் என்று டிரில் மாஸ்டர் நினைத்தார். அதனால் சிவாவுக்கு டிரில் நன்றாக நடந்தது. ஒருமுறை ஹெச்.எம் மும் பார்க்க வந்துவிட்டார். சிவா மால்கம் செய்வதை வியப்புடன் பார்த்தார். அவனை ஒரு முறை உற்றுப் பார்த்தார். அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி சிவா யோசித்தான்.
 அவன் குறுக்கு வழியில் காப்பி அடிச்சதை நினைவில் வைத்திருப்பாரோ?.... ஆனால் ஹெச்.எம். அவனை "குட்' என்று பாராட்டிவிட்டுப் போனார்.
 சிவா, மால்கம் பயிற்சியில் நேரத்தைச் செலவழிப்பதால் நண்பர்களை சரியாகப் பார்க்கமுடிவதில்லை. ஒரு நாள் இளங்கோ அவனைப் பார்த்தான். ""சிவா, பெரிய ஆளாயிட்டே!.... ஹெச்.எம். உனக்கு குட் சொல்கிறார்!'' என்று மனதில் பொறாமையுடன் கேட்டான். ஹெச்.எம். பாராட்டியது இளங்கோவுக்கு எப்படித் தெரிந்தது என்று சிவா ஆச்சரியப்பட்டான். ஆசிரியர் மகன் என்பதால் இளங்கோவுக்கு பள்ளியில் நடப்பவை எல்லாம் தெரியும் என்பது சிவாவுக்குத் தெரிந்ததுதான். ஆண்டு விழாவில் அமைச்சர் கலந்து கொள்கிறார் என்பதையே அவன்தான் சொன்னான்.
 "உன் நண்பன் பாராட்டப்பட்டால் உனக்கு மகிழ்ச்சிதானே!'' என்று சிவா கேட்டான்.
 சிவாவுக்கு "ஆம்' என்று வாயளவில்தான் இளங்கோ பதில் சொன்னான். ஆனால் அவன் மனதிற்குள் கெட்ட எண்ணம் ஏற்பட்டிருந்தது. அன்று மாலை இளங்கோ அருளை சந்தித்தான். அவன் மனதில் ஏற்பட்டிருந்த கெட்ட எண்ணம் சிவாவுக்குத் தீங்கு செய்ய திட்டமிடும் அளவுக்கு வளர்ந்து விட்டது!
 அடுத்த இதழில் முடியும்....
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com