

சென்ற இதழ் தொடர்ச்சி.....
ஒட்டகத் திருவிழா!
ஒட்டகத் திருவிழா என்று அழைக்கப்படும் புஷ்கர் கால்நடைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. இந்தியாவின் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்று.
இந்த கால்நடைச் சந்தையில் பிரதானமாக ஒட்டகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர ஆடு, மாடு, எருது, குதிரைகள் மற்றும் பறவைகள் என அனைத்து விதமான விலங்கினங்களும் விற்பனைக்கு வருகின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் விற்பனை செய்யப்படுகிறது.
கால்நடை சந்தையோடு 5 நாட்களும், ஆடல், பாடல் நிறைந்த கலை நிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொள்ளும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. மேலும் ஒட்டகங்களுக்கு இடையேயான அழகிப்போட்டிகள் ஒட்டக ரேஸ் போன்றவையும் நடைபெறும்.
பொக்ரான்!
ஜெய்சல்மேர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானில் 1974 - ஆம் ஆண்டு மே மாதம் 18 - ஆம் தேதி அன்றும், 1998 - ஆம் ஆண்டில் மே 11 - ஆம் தேதி அன்றும் இந்திய அரசால் அணுகுண்டுகள் வெடித்துச் சோதனைகள் செய்யப்பட்டன.
இந்திய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தின் "சுன்சுனூ' மாவட்டமே இந்திய ராணுவத்திற்கு அதிக வீரர்களை அனுப்பிய பெருமை உடையது.
சுன்சுனூ மாவட்டத்தில் உள்ள பிலானி நகரத்தில் உள்ள பிர்லா தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் உலக அளவில் பெயர் பெற்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனமாகும்.
தார் பாலைவனம்!
புவியியலின்படி எப்பகுதி மிகக் குறைந்த மழைப் பொழிவைப் பெறுகிறதோ அது பாலைவனம் எனப்படுகிறது. பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். காற்றில் ஈரப்பதம் இருக்காது. பகலில் வெப்பம் அதிகமாக இருக்கும். இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும்.
பொதுவாக, ஆண்டுக்கு 250 மி.மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனம் எனப்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனமாக உள்ளது.
"தார்' பாலைவனம் இந்திய பெரும் பாலைவனம் என்றும் அழைக்கப்படுகிறது. இது வடமேற்கு இந்தியாவில் உள்ள வறண்ட நிலப்பகுதி. தார் பாலைவனம் உலகின் 17 - ஆவது பெரிய பாலைவனம். வெப்ப மண்டலப் பாலைவனங்களில் (SUBTROPICAL DESERT) 9 -ஆவது பெரிய பாலைவனம்! இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இயற்கையான எல்லையாக (NATURAL BOUNDARY) உள்ளது.
இரண்டு லட்சம் சதுர கிலோ மீட்டர் கொண்ட தார் பாலைவனத்தில் 1,70,000 ச.கி.மீ. பரப்பளவு (85%) இந்திய துணைக்கண்டத்திலும், 30,000 ச.கி.மீ. பரப்பளவு (15%) பாகிஸ்தான் நாட்டிலும் உள்ளது. பாகிஸ்தானில் இப்பாலைவனத்தை, "சோலிஸ்தான் பாலைவனம்' என்று அழைக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 1,70,000 ச.கி.மீ. பரப்பளவில் 61% நிலப்பகுதி ராஜஸ்தான் மாநிலத்திலும், மீதமுள்ள பகுதி குஜராத், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் பரவி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர், பிகானேர், சுரு, கங்கா நகர், பார்மர், ஜெய்சல்மேர், ஜாலோர் மாவட்டங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியாக தார் பாலைவனம் உள்ளது. இவற்றில் பிகானேர் மற்றும் ஜெய்சல்மேர் மாவட்டங்கள் முழுமையாக தார் பாலைவனத்திலேயே அமைந்துள்ளன.
அதிலும் குறிப்பாக ஜெய்சல்மேர், பாலைவனத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. தார் பாலைவனத்திற்குள் அமைந்துள்ள பிகானேர், ஜெய்சல்மேர், கங்கா நகர், மற்றும் ஜோத்பூர் போன்றவை ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய நகரங்களாகும்.
மணற்குன்றுகள்!
தார் பாலைவனத்தின் பெரும்பகுதி மணல் குன்றுகளால் நிறைந்துள்ளது. சில மணற்குன்றுகள் 150 அடி உயரத்திற்குக் கூட இருக்கும்! வளைந்து, நெளிந்து செல்லும் காற்றின் தடத்தை பாலைவன மணலில் தெளிவாகப் பார்க்கலாம்! பாலைவன மணலில் ஓவியம் வரைந்ததைப் போன்று அலை, அலையாய்த் தோன்றும் கோடுகள் காற்றின் விளையாட்டுதான்! காற்றின் வேகம் அதிகமானால் ஒரு மணற் குன்றையே பெயர்த்து எடுத்துச் சற்று தள்ளி வைத்துவிடும்!
தண்ணீர் அரிதாகவும், உப்புத் தன்மை உடையதாகவும் உள்ளது. கிணறுகளின் சராசரி ஆழம் 250 அடி.
லுனி ஆறு!
ஆரவல்லி மலைத்தொடரின் புஷ்கர் பள்ளத்தாக்கில் உருவாகி தார் பாலைவனத்தின் தென்கிழக்குப் பகுதியைக் கடந்து 495 கி.மீ. தூரம் பயணித்து குஜராத் மாநிலத்தின் "ரான் ஆஃப் கச்சின்' சுதுப்பு நிலங்களில் முடிவடைகிறது! இந்த நதி தொடக்கத்தில் நன்னீராக இருப்பினும், "பாலோட்ரா' வை அடையும்போது மண்ணில் உப்புத்தன்மை உள்ளதால், லுனி ஆற்றின் நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. இருப்பினும், இப்பெரிய நதிதான் நீர்ப்பாசனத்திற்கு பிரதான ஆதாரமாக உள்ளது!
மக்கள் நெருக்கம்!
உலகிலேயே மக்கள் அதிகம் வாழும் பாலைவனம் தார் பாலைவனம்தான்! ஒரு சதுர கி.மீ. க்கு 83 பேர் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 40% பேர் தார்பாலைவனத்திலேயே வசிக்கின்றனர்.
பொதுவாக பருவநிலை வெப்பமாகவும், மிக வறட்சியாகவும் இருந்த போதிலும் விவசாயமும், கால்நடை வளர்ப்பும், மற்றும் சுற்றுலாவும் முக்கியத் தொழிலாக உள்ளன. 1928 - ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட கங்கா கால்வாயும், 1987 - இல் திறக்கப்பட்ட இந்திராகாந்தி கால்வாயும் வேளாண்மைக்குப் பெரிதும் உறுதுணையாக உள்ளன.
கடுகு, பருத்தி, நிலக்கடலை, கோதுமை, கம்பு, சோளம், கரும்பு, காய்கறிகள் போன்றவை பயிரிடப்படுகிறது!
இந்திரா காந்தி கால்வாய்!
640 கி.மீ. நீளம் கொண்ட இந்திரா காந்தி கால்வாய்தான் இந்தியாவின் மிக நீளமான கால்வாய்! இது பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா மாநிலம் வழியாக ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்திற்காகக் கட்டப்பட்டது! இதன் மூலம் சட்லெஜ், பியாஸ், ராவி ஆகிய ஆறுகளின் நீர் தார் பாலைவனத்திற்கு பாசனத்திற்காகக் கொண்டு வரப்படுகிறது! இக்கால்வாய் மூலம் பாலைவனத்தில் 6807 ச.கி.மீ. நிலம் பாசன வசதி பெறுகிறது.
ஜெய்சல்மேர்!
தார் பாலைவனத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம்! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள், கலையழகு கொண்ட கட்டடங்கள், கோட்டைகள் என இங்கு பல இடங்கள் உள்ளன. மேலும் இங்கு பாலைவனப் பண்பாட்டு மையம் மற்றும் அருங்காட்சியகம் போன்றவையும் உள்ளன.
சோலிஸ்தான் பாலைவனம்!
பாகிஸ்தானின் சிந்து மற்றும் இந்தியாவின் பஞ்சாப் மாகாணங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியாக சோலிஸ்தான் பாலைவனம் உள்ளது. இங்கு ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடை வளர்ப்புத் தொழிலே பிரதானமாக உள்ளது. இப்பாலைவனத்தில் 1.6 மில்லியன் கால்நடைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளனர். இவர்கள் பால், தோல், மாமிசம் முதலானவற்றை விற்பனை செய்வதுடன் அவற்றின் முடிகளைக் கொண்டு கைத்தறி மூலம் கம்பளிப் போர்வைகள், மிதியடிகள் போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர்.
சோலிஸ்தான் பாலைவனத்தில் பதினொரு கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றில் "தராவர் கோட்டை' பிரசித்தி பெற்றது. கி.பி. 9 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாராவர் கோட்டையின் சுற்றுச் சுவர்கள் 1500 மீ. சுற்றளவும், 30 மீட்டர் உயரமும் கொண்டவை. இக்கோட்டையில் உள்ள 40 காவல் கோபுரங்கள் உள்ளன.
ஆரவல்லி மலைத்தொடர்!
இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மலைத்தொடர் ஆகும். இது ராஜஸ்தான் மாநிலத்திற்குக் குறுக்கே வடகிழக்கிலிருந்து தென்மேற்காகச் சுமார் 500 கி.மீ. நீளத்திற்கு அமைந்துள்ளது. இதன் வடக்கு முனை தனித்தனியான குன்றுகளையும், பாறை முகடுகளாகவும் ஹரியானா மாநிலத்திற்குள் தொடர்ந்து தில்லிக்கு அண்மையில் முடிவுறுகிறது.
இதிலுள்ள மிக உயர்ந்த சிகரம் அபு மலையில் அமைந்துள்ள குரு சிகரமாகும். ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் நகரமும், அதன் ஏரியும் இம்மலைத்தொடரின் தென்புறம் சரிவில் அமைந்துள்ளது.
அபு மலை!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் உள்ள சிகரம் அபு மலை. இது சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் 22 கி.மீ. நீளமும், 9 கி.மீ. அகலமும் கொண்ட தனிச்சிறப்பு மிக்க பீடபூமி உள்ளது. அபு மலை 1720 மீ. உயரம் கொண்டது. இம்மலையில் ஆறுகளும், ஏரிகளும், நீர் வீழ்ச்சிகளும், பசுமை மாறாக் காடுகளும் அமைந்துள்ளது. இம்மலை பாலைவனச்சோலை என்று அழைக்கப்படுகிறது. ராஜஸ்தானின் ஒரே மலை வாசஸ்தலம்!
அபு மலையில் எண்ணற்ற ஜைன மதக் கோயில்கள் அமைந்துள்ளன.290 ச.கி.மீ. பரப்பளவில் மவுண்ட் அபு வனவிலங்குகள் காப்பகமும் உள்ளது.
மேலும் அபு மலையில் தில்வாரா கோயில்கள், அச்சல்கர் கோட்டை, நாக்கி ஏரி, ஸ்ரீரகுநாத்ஜி கோயில், ஆதார் தேவி கோயில், துர்கை கோயில், அம்பிகா மாதா கோயில் உள்ளிட்ட பல இடங்கள் இருக்கின்றன.
சரித்திரப் புகழும், கண்ணைக் கவரும் வேலைப்பாடுள்ள அரண்மனைகளும், கோட்டைகளும், கோயில்களும், ராஜஸ்தானின் பெருமையைப் பறை சாற்றுகின்றன!
(நிறைவு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.