அதிர்ஷ்டம், ஆரோக்கியம் நிறைந்த - ஆத்தி மரம்

நான் தான் ஆத்தி மரம் பேசறேன். எனது தாவரவியல் பாஹினியா வேரிகேட்டா என்பதாகும்.
அதிர்ஷ்டம், ஆரோக்கியம் நிறைந்த - ஆத்தி மரம்
Published on
Updated on
2 min read

மரங்களின் வரங்கள்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா,
நான் தான் ஆத்தி மரம் பேசறேன். எனது தாவரவியல் பாஹினியா வேரிகேட்டா என்பதாகும். நான் சிகால் ஃபீனியேசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு மந்தாரை என்ற வேறு பெயருமுண்டு. முற்காலத்தில் ஆத்தி மரங்கள் நிறைந்த காடாக இருந்த ஆத்தி மரமே இன்று ஆற்காடு என அழைக்கப்படுகிறது. குழந்தைகளே, ஒரு காலத்தில் திருவாரூர் நகரமும், ஆர் எனும் ஆத்தி மரங்கள் நிறைந்த சோலைவனமாகத் தான் இருந்ததால், ஆரூர் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. 
நான் உங்களுக்கு அழகான சிவப்பு நிற பூக்களையும், ஊதா நிறப் பூக்களையும் தருவேன். குழந்தைகளே உங்களுக்குத் தெரியுமா, சங்கக் காலத்தில் சேரருக்கு போந்தை என்று அழைக்கப்படும் பனம்பூ, பாண்டியருக்கு வேப்பம் பூ, சோழருக்கு ஆர் எனும் நான் (ஆத்திப்பூ) அடையாளமாக இருந்திருக்கிறோம். இது மட்டுமா, குழந்தைகளே, நம்ம மூதாட்டி ஒளவைக்கு பிடித்த மரம் நான் தான். ஏன்னா, அவங்க நீங்கள் எல்லாம் விரும்பி படிக்கிற தனது நூலுக்கு ஆத்தி சூடின்னுதானே பெயர் வெச்சிருக்காங்க. பாத்தீங்களா குழந்தைகளே எனக்கு எவ்வளவு சிறப்புன்னு. என்னுடைய பூக்கள், பட்டை, வேர் அனைத்தும் மருத்துவ குணமுடையவை. 
என் கிளைகள் மெல்லியதாக இருக்கும். நுனி கிளைகளில் பூக்கள் அடர்ந்திருக்கும். தேனீக்கள் என் பூக்களைத் தேடி ஓடி வருவாங்க. என்னை சுத்தி சுத்தி வட்டமிடுவாங்க. அப்போ எனக்கு சந்தோஷமா இருக்கும். ஏன்னா, என் பூக்கள் அவங்களுக்கு உணவாகிறது. இதனால், என் மீது தேனிப் பெட்டிகள் வைத்து தேன் உற்பத்தி செய்யலாம். என் பூக்கள் வயிற்றுப் போக்கை சரியாக்கி, வயிற்றுப்புழுக்களை அழிப்பதால் சிலர் என் பூக்களை உணவாகவும் சாப்பிடுகிறார்கள். என் மொக்குகள் இரத்த பேதி, இரத்த வாந்தி போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்து. 
என்னுடைய இலையில் தோற்றத்தை வைத்துத் தான் என்னை ஆங்கிலத்தில் கேமல் ஃபூட் ட்ரீ என்று அழைக்கறாங்க. என்னுடைய இலைகள் கால்நடைகளுக்கு நல்ல உணவாகும். என் இலைகளை பீடி சுற்றுவதற்கும் பயன்படுத்தறாங்க. என் இலைகள் அகலமாக இருப்பதால் முன்பெல்லாம், உணவகங்களில் பொட்டலங்கள் கட்டுவதற்கு என்னைத் தான் பயன்படுத்தினாங்க. இப்போதும் என் இலைக்கு மவுசு வந்துட்டுது. ஏன்னா, நீங்கள் தான் நெகிழியை ஒழிச்சிட்டீங்களே. உணவு உண்ண தையல் இலைகளாகவும் நான் பயன்படறேன். வாழை இலையை விட என் விலை குறைவு. இன்றும் கிராமப் புறங்களில் விருந்து உண்ண என் இலையைத் தான் தட்டாக பயன்படுத்தறாங்க. என் இலையில் ஆன்டி ஹிஸ்டாமின் உள்ளதால் கக்குவான் இருமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுக் குழல் அழற்சி, சுவாச நோய்கள், ஆகியவற்றுக்கு என் இலை நல்ல மருந்து. வாத நோய், கால் வலி, தலைவலி, தசைபிடிப்பு இதய நோய், படபடப்பு ஆகியவற்றை குணப்படுத்தவும் என் இலை பயன்படுது. என் பட்டையில் டேனின் சத்து அதிகமாகவுள்ளதால் தோல் பதனிடவும், சாயமேற்றவும் உபயோகமாயிருக்கேன். என் பட்டையிலிருந்து நாரும் உரித்தெடுக்கலாம். என் மரத்தின் பட்டையை இடித்து நீர் விட்டு அரை குவளையில் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் அஜீரணம் போய் விடும். அந்த நீரை காயங்கள் மற்றும் புண்கள் மேல் ஊற்றி கழுவினால் ஆறாத காயங்களும் ஆறிடும். என் வேர், பட்டையை இடித்து தண்ணீர் போட்டுக் காய்ச்சி குடித்தால் கல்லீரல் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். 
என் காயை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரால் வாய் கொப்பளித்தால் நாக்கில் இருக்கும் புண், தொண்டை நோய்கள் குணமாவதுடன் பசியின்மையையும் போக்கும். மரம் தரும் வரம் நிரந்தரம். மரங்கள் தான் நீர்நிலைகளின் பாதுகாவலன்.. 
நான் திருவாரூர் மாவட்டம், திருச்செங்கட்டாங்குடி, அருள்மிகு உத்திராபசுபதீஸ்வரர் திருக்கோவிலில் தலவிருட்சமாக இருக்கேன். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம். 
(வளருவேன்)
-பா.இராதாகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com