தீமையிலும் நன்மை!

 தீமையிலும் நன்மை!
Updated on
3 min read

அரங்கம்
 காட்சி -1
 இடம் - பள்ளி,
 மாந்தர் - ஆசிரியர்கள் துரைராஜன், சிவமலை
 
 (பள்ளியில் ஓய்வு நேரத்தில் ஆசிரியர் துரைராஜனும், சிவமலையும் பேசிக்கொண்டிருந்தனர்.)
 
 துரைராஜன்: இந்தக் காலத்துப் பசங்களுக்கு பாட புத்தகங்களைத் தவிர வேறு புத்தங்களைப் படிக்கும் பழக்கமே இல்லாம போச்சு சார். வீட்டுக்குப் போனா கையில செல்போனை வச்சிகிட்டு அவங்க அடிக்கிற லூட்டி தாங்கல... பொது அறிவே இல்லாம போச்சு...
 சிவமலை: அப்படியெல்லாம் எல்லா மாணவரையும் ஒட்டுமொத்தமா சொல்லாதீங்க சார். புத்தகம் படிக்கிற பழக்கம் இன்னும் சில மாணவர்களிடம் இருக்கத்தான் செய்யுது. இதை என்னால் நிரூபிக்க முடியும். வேண்டுமானால் ஒரு போட்டி வைத்துக் கொள்வோம். பள்ளி ஆண்டு விழாவில் கட்டுரைப் போட்டி அறிவிப்போம். அதில் நம் பள்ளி நூலகத்தைப் பயன்படுத்தி கட்டுரைப் போட்டியில் வெற்றிபெறும் முதல் மாணவனுக்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பரிசளிக்க வேண்டும், முடியுமா?'என்றார்.
 துரைராஜன் : சரி...
 
 காட்சி-2,
 இடம்- பள்ளி,
 மாந்தர்: ஆசிரியர் சிவமலை)
 
 (தமிழாசிரியர் சிவமலை வகுப்புக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்துக் கூறினார்)
 
 சிவமலை: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் கட்டுரைப் போட்டி உள்ளது. அதில் கலந்து கொள்பவர்கள் "தீமையிலும் நன்மை' என்கிற தலைப்பில் கட்டுரை எழுதி, அதை மேடையில் படிக்க வேண்டும். இன்றைக்கு சமுதாயத்தில் இருக்கும் நன்மை-தீமைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். முதல் பரிசு பெறுபவருக்கு விலைமதிக்க முடியாத பரிசையும் சான்றிதழையும் அறிவியல் ஆசிரியர் துரைராஜன் வழங்குவார். அதுமட்டுமல்ல, அந்தக் கட்டுரைப் போட்டியின் தலைப்புக்கு ஏற்றாற்போல, மாணவர்கள் மனதில் பதியும்படியான சின்னஞ்சிறு கதைகளையோ, நிகழ்ச்சிகளையோ கூறி, தீமையில் எப்படி நன்மை இருக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்...
 
 (ஆசிரியரிடம் முதலாவதாகத் தன் பெயரை பதிவு செய்தான் தமிழரசன்)
 
 காட்சி-3
 இடம்- பள்ளி
 மாந்தர்: ஆசிரியர்கள் சிவமலை, துரைராஜன், மாணவர் தமிழரசன்
 
 (பள்ளி ஆண்டு விழா. கட்டுரைப் போட்டியில் மூவர் மட்டுமே கலந்து கொண்டனர். முதலில் வாசித்த மாணவர்கள் இருவர் கட்டுரையில் எந்தவொரு கதையோ, நிகழ்வோ கூறப்படவில்லை. மூன்றாவதாகத் தமிழரசன் மேடை ஏறினான். கட்டுரை வாசிக்கத் தொடங்கினான்)
 
 தமிழரசன்: நமக்குத் தீமை செய்தவர்களை, நம்மைக் குறை கூறுபவர்களைத்தான் நாம் முதலில் போற்ற வேண்டும். காரணம், அவர்கள்தான் நம் உயர்வுக்கு முக்கியக் காரணமானவர்கள். எந்த ஒரு தீமையிலும் ஒரு நன்மை இருக்கிறது என்பதை அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர். நம் மகாகவி பாரதியார் கூட, "புகை நடுவினில் தீ இருப்பதை பூமியில் கண்டாயோ -நன்னெஞ்சே / பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்' என்று பாடியிருக்கிறார். இதை இரண்டொரு கதைகள் மூலம் விளக்கலாம்.
 ஒரு நண்டு கடல் மணலில் ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. தன்னுடைய காலடிச் சுவடுகளைப் பார்த்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று வந்த கடல் அலை மணலில் பதிந்திருந்த நண்டின் பாதச் சுவடுகளை அடித்துக்கொண்டு அழித்துவிட்டுப் போய்விட்டது. "அழகாக நான் மணலில் போட்ட கோலங்களை இப்படி வீணாக நீ அழித்து விட்டாயே... நியாயமா?' என்று அலையைப் பார்த்து நண்டு கோபமாகக் கேட்டது. "உனக்குப் பின்னால் திரும்பிப் பார். ஒரு மீனவன் வருகிறான். உன் சுவடுகள் வெளியே தெரிந்தால், நீ போன வழியை நோக்கி வந்து அவன் உன்னைப் பிடித்துக்கொண்டு போயிருப்பான்' என்று கூறிய அலை, நண்டின் பதிலுக்குக் காத்திருக்காமல் அப்பால் சென்றுவிட்டது. அப்போதுதான் அலை தனக்குச் செய்த நன்மையை உணர்ந்தது நண்டு.....
 .....இன்னொரு கதை மூலமும் இதை விளக்கலாம்..... "உப்பு விற்கும் வியாபாரி ஒருவன் வியாபாரத்துக்குக் கிளம்பும் முன் உப்பு எல்லாம் விற்க வேண்டும் என்று கடவுளை வணங்கிவிட்டுக் கிளம்புவான். வழக்கம்போல ஒருநாள் கடவுளை வணங்கிவிட்டு, உப்பு மூட்டைகளை கழுதையின் மீது ஏற்றிக்கொண்டு காட்டு வழியே போனான். திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உப்பு மூட்டைகள் மழை நீரில் கரைந்துவிட்டன. இதனால் மனம் வருந்திய அவன், இந்தக் கடவுள் இப்படிப் பண்ணிவிட்டாரே... கடவுளை நினைப்பதே தவறு. இனி, நான் நினைக்கப் போவதில்லை...' என்று கடவுளைத் திட்டிக்கொண்டே வந்த வழியே வருத்தத்துடன் திரும்பினான். அவனுக்கு அழுகையாக வந்தது.
 காட்டு வழியாகத் திரும்பி வரும்போது, "சந்தையிலிருந்து வரும் இவன் நிறைய பணம் கொண்டு வருவான்; அவனை அடித்துப் பிடுங்கிக் கொண்டு போகலாம்' என்று சில கொள்ளையர்கள் காத்திருந்தனர்.
 மழை பெய்ததால், அன்றைக்கு ஏமாற்றத்தோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த உப்பு வியாபாரி கழுதையை கட்டிப் போட்டுவிட்டு ஒரு மரத்தடியில் கண்ணீருடன் உட்கார்ந்திருந்தான். கொள்ளையர்கள் அவனிடம் நெருங்கி, "என்ன அழுதுக்கிட்டு இருக்கே?....'' என்று கேட்டனர். அவன் அவர்களை நோக்கி, "நான் சந்தைக்குப் போய் உப்பு வியாபாரம் செய்ய நினைத்தேன்... மழையில் உப்பெல்லாம் கரைந்து விட்டது. பெருத்த நஷ்டம் ஆகிவிட்டது!.... மனசே சரியில்லை!....'' என்றான். கொள்ளையர்களும் அதை நம்பித் திரும்பிச் சென்றனர்.
 அப்போது அந்த வியாபாரி, "கடவுளே, நல்லவேளை!... இன்றைக்கு மழை பெய்ததால் கொள்ளையர்களிடம் இருந்து உயிர் பிழைத்தேன். உனது கருணையை என்னவென்று சொல்வது?' என்று கடவுளைப் போற்றிக்கொண்டே வீடு திரும்பினான்.
 நல்லதைக் கொடுப்பதுதான் கடவுளின் இயல்பு. துன்பம் என்பது ஏதோ ஒரு காரணத்தின் காரணமாக இறைவன் நமக்குக் கொடுக்கின்ற அருள்' என்று ஓர் அருளாளர் கூறியிருக்கிறார்.
 இன்னொரு சம்பவத்தின் மூலமும் இதை ஆழமாக உணர்த்த முடியும். ஒரு மனிதன் காட்டில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அதே காட்டில் சிறிது தூரத்தில் பசியுடன் ஒரு புலி அலைந்து கொண்டிருந்தது.
 புலி வந்து கொண்டிருப்பதை அறியாத அந்த மனிதன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து "உய்ய்ங்ங்' என்று குரல் கொடுத்தபடி ஒரு கொசு பறந்துவந்து தூங்கியவனின் கன்னத்தில் "சுள்'ளென்று கடித்தது. அவன் திடுக்கிட்டு எழுந்தான்... "ச்சே!.... இந்தக் கொசுவை இறைவன் எதுக்குப் படைச்சான்!.... மனுசனை கொஞ்ச நேரம் தூங்க விடமாட்டேங்குதே!....'....
 சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்த புலி, உறுமியது. வியாபாரி திடுக்கிட்டான். வருவது புலிதான் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது!..... உடனே, கிடுகிடுவென்று மரத்தில் ஏறிவிட்டான்! உச்சியில் ஒரு கிளையில் ஒளிந்துகொண்டான்.
 "கடவுள் இந்தக் கொசுவை ஏன் படைத்தார் என்று நான் கேட்டேனே... இன்றைக்கு இந்தக் கொசு மட்டும் என்னைக் கடித்து எழுப்பவில்லை என்றால், என் கதி என்னவாகியிருக்கும்? கடவுளே என்னைக் காப்பாற்றிவிட்டாய்! உனது கருணையே கருணை. உனக்கு நன்றி' என்று நினைத்துக்கொண்டான்.
 இதன் மூலம், எல்லாத் தீமைகளிலும் ஏதேனும் ஒரு நன்மை இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அதைப் புரிந்து கொண்டால், துன்பத்தைப் பார்த்து துவண்டு போகமாட்டோம். கடவுளையும் நிந்திக்க மாட்டோம். அப்படியே துன்பம், தீமை வந்தாலும், அது நம் நன்மைக்காகத்தான் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.
 தமிழில் எதிர்ச்சொற்கள் பல உள்ளன. அவற்றுள், இன்பம்-துன்பம், வெயில்-நிழல், வெம்மை-குளிர், அன்பு-வெறுப்பு, இருள்-ஒளி, என்பதுபோல நன்மையும்-தீமையும் அதில் ஒன்று.
 வெறுப்பின் மூலமாக அன்பையும், வெயிலின் மூலமாக குளிர்ச்சியையும், இருளின் மூலமாக வெளிச்சத்தையும், துன்பத்தின் மூலமாக இன்பத்தையும், தீமையின் மூலமாக நன்மையையும் நாம் அறிந்து கொள்கிறோம்.
 எந்தப் பொருளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் தீமையும் நன்மையும் அடங்கியுள்ளன. அது போலத்தான் இன்றைக்கு அனைவர் கையிலும் இருக்கும் செல்லிடப்பேசியும். அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துத்தான் நமக்கு நன்மையும் தீமையும் விளைகின்றன.
 (கட்டுரையைப் படித்து முடித்தவுடன் கைத்தட்டல் அந்த அரங்கத்தை நிறைத்தது.)
 சிவமலை: சபாஷ், இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? எங்கே சேகரித்தாய் இத்தனை செய்திகளை?'' என்று அவன் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
 தமிழரசன்: நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம் பள்ளி நூலகத்தில் இருக்கும் நூல்களிலிருந்து படித்துக் குறிப்பு எடுத்து கொள்வேன் சார். என் அப்பாவின் செல்லிடப்பேசியில் சிறுவர்களுக்கான கட்செவி அஞ்சல் குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளார். அதில் பதிவிடப்படும் கதைகளைப் படித்து எழுதி வைத்துக் கொள்வேன். இவைதவிர, என் பெற்றோர் எனக்கு அவ்வப்போது சிறுவர் கதைகள், ஆன்மிகக் கதைகள், பொது அறிவு நூல்கள் பலவற்றை வாங்கித் தருவார்கள். அவற்றையெல்லாம் படித்து, அதிலிருந்த குறிப்புகளைத்தான் இந்தக் கட்டுரையில் பயன்படுத்தி எழுதியிருக்கிறேன்.
 (ஆசிரியர் சிவமலையிடம் சொன்னது போலவே ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "அறநெறி நூல்களையும், சான்றிதழையும் ஆசிரியர் துரைராஜன், தமிழரசனுக்கு வழங்கி மகிழ்ந்ததுடன், இன்றைய மாணவர்கள் குறித்த தன் தவறான கண்ணோட்டத்தையும் மாற்றிக் கொண்டார். இதைக் கண்ணாரக் கண்டுகளித்துக் கொண்டிருந்த தமிழரசனின் பெற்றோர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.)
- திரை-
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com