வைரம் பாய்ந்த உடம்பு ! ஆச்சா மரம்!
மரங்களின் வரங்கள்!
என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
நான் தான் ஆச்சா மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் ஹார்டுவிக்கியா பினாட்டா என்பதாகும். நான் இருசிறகி குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு குங்கிலிய மரம், சால மரம், கராச்சி, எப்பி, யாமரம் என வேறு பெயர்களும் உண்டு. நான் இந்தியாவில் கிழக்குப் பகுதி, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ் ஆகிய இடங்களில் அதிகமாகக் காணப்படுவேன்.
தமிழ்நாட்டில் காவேரி, பவானி ஆற்றங்கரை படுகைகளிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் எம்.ஆர். பாளையம், பாடலூர் ஆகிய பகுதிகளில் நான் செழிப்பா வளர்ந்திருக்கேன். வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் சிறந்த மரம் ஆச்சா மரம் என்று தாவரவியல் அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். எனவே, தான் என்னை இயற்கை அளித்த அருள்கொடைன்னு சொல்றாங்க.
என் மரத்தின் வைரப் பகுதி கறுஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். நான் மிகவும் வலிமையானவன். நான் என் நண்பன் தேக்கை விட கடினமானவன். எனக்கு அடர்த்தி அதிகம். என்னை நீரில் போட்டால் பாறையைப் போல் மூழ்கி விடுவேன். ஒரு கன மீட்டர் மரத்தின் எடை சுமார் 1,150 கிலோ அளவில் இருக்கும். இராமாயணத்தில் வாலி வதையின் போது வாலி தனது உயிரை ஏழு மறா மரங்களில் ஒழித்து வைத்ததாக குறிப்பு உள்ளது. அந்த மறா மரம் நான் தான்.
என் பூக்கள் சிறியதாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். என் பழத்தை பறவைகள் விரும்பி உண்ணும். என் இலைகள் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகவும், பசுந்தாள் உரமாகவும், விவசாயிகளுக்கு உதவக் கூடிய மரமாகவும் நானிருக்கேன். ஆனால், என்னை குறித்து விழிப்புணர்வு உங்களிடையே இல்லை என்பது தான் எனக்கு வருத்தமாயிருக்கு. எனக்கு ஒரு சக்தி உண்டு. உங்களுக்கு சொல்லட்டும்மா ? குழந்தைகளே, அதாவது, நீரில் கலந்திருக்கும் பாதரசத்தை உறிஞ்சி நீக்கக் கூடிய சத்தி எனக்குண்டு.
குழந்தைகளே, குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில், வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களான கருவேலம், வாகை, வேம்பு, புங்கன் போன்றவற்றோடு என்னையும் நடவு செய்து ஆய்வு செய்தாங்களாம். சோதனை அடிப்படையில் எங்களைப் பத்தாண்டுகள் வளர்த்துப் பார்த்ததில் மற்ற மரங்களை விட என்னுடைய வளர்ச்சி தான் அதிக அளவில் இருந்திருக்கு. இதனால், வறட்சியைத் தாங்கி வளரும் மரங்களில் சிறந்த மரம் நான் தான்னு எனக்கு பட்டம் கொடுத்தாங்க. மிக்க மகிழ்ச்சி.
என் மரப்பட்டையிலிருந்து உறிக்கப்படும் நாரை பதப்படுத்தாமலேயே கயிறாகப் பயன்படுத்தலாம். என் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி காகிதமும் தயாரிக்கிறாங்க. என் வைரம் பாய்ந்த நடுக்கட்டையிலிருந்து ஒலியோ கோந்து எடுத்து வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுத்தறாங்க. என் பாலிலிருந்து எடுக்கப்படும் பிசின் குங்கிலியம் ஆகும். இதை பொடியாகவும், தைலமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம். இந்தப் பிசினை தீயிட்டால் எரிந்து புகையாகும். அந்தப் புகை நறுமணமுடையது என்பதால், இதை ஊதுபத்தி போன்ற பொருட்களில் பயன்படுத்தறாங்க. இது நம் நாட்டிலும், கிரேக்கம், ரோமானியம், சீனம், பாரசீகம் ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் இந்தப் புகையை தெய்வ வழிபாட்டிற்கும் பயன்படுத்தறாங்க. ஆஸ்திரேலியாவிலுள்ள அகாத்திசஸ் ரோபஸ்டா என்ற மரம் பிசின் எடுக்கும் குங்கிலிய மரமாகும். ஆனால், இது சாம்பிராணி அல்ல குழந்தைகளே.
இசைக் கருவிகள், இரயில் தண்டவாளங்களில் பதிக்கப்படும் கட்டைகள், சுரங்கங்களின் தூண்கள், உத்திரங்கள், கடைசல்கள், பொம்மைகள், அற்புதமான ஒலி எழுப்பும் நாதஸ்வரம், வண்டிச் சக்கரங்கள், உரல், உலக்கை, கலப்பை, போன்றவைகள் செய்யவும், பாலம் கட்டவும் நான் பயன்படுவேன். மரங்களைக் காப்போம், மழை பெறுவோம். என் நட்சத்திரம் மூலம். என் தமிழ் ஆண்டு தாது.
மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)
}பா.இராதாகிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.