பொம்மைகள் உலகம்! 

அது ஒரு அழகிய பொம்மைக்கடை!.... அங்கு விதவிதமான பொம்மைகள் இருந்தன. அங்கு வருபவநர் யாராக இருந்தாலும் ஒரு பொம்மையையாவது வாங்காமல் திரும்ப மாட்டார்கள்.
 பொம்மைகள் உலகம்! 

தினேஷின் உலகம்!
அது ஒரு அழகிய பொம்மைக்கடை!.... அங்கு விதவிதமான பொம்மைகள் இருந்தன. அங்கு வருபவநர் யாராக இருந்தாலும் ஒரு பொம்மையையாவது வாங்காமல் திரும்ப மாட்டார்கள். அன்றுதான் தினேஷ் தன் தந்தையுடன் பொம்மை வாங்க வந்திருந்தான். எல்லா பொம்மையையும் எடுத்துச் செல்ல வேண்டும் போல் இருந்தது அவனுக்கு!
 அப்பாவிடம் இருந்த பணத்துக்கு ஏற்ப ஒரு கார் பொம்மை வாங்கினான். இருந்தாலும் மனம் திருப்தியடையவில்லை. அங்கிருந்த தாத்தா பொம்மையின் மூக்குக் கண்ணாடியையும், குரங்கு பொம்மைக்கு அருகிலிருந்த வாழைப்பழ சீப்பையும் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டான்.
 தினேஷிடம் இருக்கும் மிக மோசமான குணம் இது. தனக்கு ஒரு பொருள் பிடித்திருந்தால் அதை யாருடைய அனுமதியும் இன்றி எடுத்து வந்து விடுவான். அப்படி எடுப்பதில் அலாதியான சந்தோஷமும், பரவசமும் அவனுக்கு ஏற்படும். அது எவ்வளவு பெரிய பாவம் என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவனது பெற்றோருக்கும் இந்த விபரம் தெரியவில்லை. அப்படி அவன் எடுத்து வந்த பொருட்கள் ஒரு பெட்டி முழுக்க அவன் வீட்டில் இருந்தன.
 மறுநாள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான் தினேஷ். அன்று ஏனோ அவனது பள்ளி வாகனம் வரவில்லை. அதனால் நடந்து சென்று கொண்டிருந்தான். வழியில் வித்தியாசமாக வேடமணிந்த ஒருவன் கையில் பெட்டி ஒன்றை வைத்துக் கொண்டு, "தம்பி!.... சினிமா காட்டுகிறேன்!.... பார்க்கறியா?....வேடிக்கையான சினிமா!.... வித்தியாசமான சினிமா!....'' என்றான்.
 ஆர்வம் தாளாமல் "சரி '' என்றான் தினஷ்!
 "சரி!... இந்தப் பெட்டி மேலே உட்காரு!'' என்றான் அந்த மனிதன். பெட்டிக்கு மேல் அமர்ந்ததுதான் தாமதம்!.... தினேஷ் வேறு ஒரு உலகில் இருந்தான்! ஆம்!.... அதுதான் பொம்மைகளின் உலகம்!
 நேற்று கடையில் கண்ட அத்தனை பொம்மைகளும் அவன் முன் வந்து பேசின. தினேஷுக்கு ஆச்சரியமாய் இருந்தது! அவனஅ முன்னே வந்த தாத்தா பொம்மை, "ஏண்டா தம்பி?.... என் மூக்குக் கண்ணாடியை ஏன் எடுத்தே?.... எங்கே வெச்சிருக்கே?.... கண்ணாடி இல்லாம நான் எப்படிக் கஷ்டப்பட்டேன் தெரியுமா?.....'' என்றது.
 அதற்குள் தாவி வந்த குரங்கு பொம்மை "என் வாழைப்பழ சீப்பை எங்கே வெச்சே?...சொல்லு!'' என்றது.
 ""குடுக்காட்டி என்ன பண்ணுவே? '' என்றான் தினேஷ்.
 குரங்கு பொம்மை அவன் மேலே பாய முற்பட்டது! அதற்குள் அங்கிருந்த தாத்தா பொம்மையும், போலீஸ்காரர் பொம்மையும் அதைத் தடுத்து நிறுத்தின.
 போலீஸ்காரர் பொம்மை தினேஷிடம், "தம்பி, ஒன்னைப் பத்தி நெறைய கம்ப்ளெயின்ட் வந்திருக்கு!.... ஒழுங்கா மரியாதையா எடுத்த பொருளைத் திருப்பிக் குடு!... இல்லாட்டி தோலை உரிச்சுடுவேன்!'' என்றது.
 "என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?.... சும்மா மிரட்டிப் பார்க்கறீங்களா?.... ஒரு தீக்குச்சியை எடுத்து நான் உரசினா நீங்க அத்தனை பேரும் காலி!.... தெரியுமா?'' என்றான் சவடாலாக!
 அதற்குள் அங்கு வந்த கிளி பொம்மை, "ஐயோ!.... இவன் ரொம்ப மோசமானவன்!.... தனக்குப் பிடிச்ச பொருளையெல்லாம் திருடுவான்!.... வாய் கூசாமல் பொய் பேசுவான்!.... பெரியவங்களுக்கு மரியாதை குடுக்க மாட்டான்!.... '' என்று அவனைப் பற்றிக் குற்றப் பத்திரிக்கை வாசித்துக் கொண்டே போனது.
 "ஏய்!.... ஏய்!.... நிறுத்து!... இதெயெல்லாம் யார் உனக்குச் சொன்னது? '' என்று கத்தினான் தினேஷ்.
 "உங்க உலகம்தான் மனிதர்கள் உலகம்!.... அதே போல எங்க உலகம் "பொம்மைகள் உலகம்!' ..... உலகத்துல எந்த மூலையிலே இருந்தாலும் நீங்க செல்
 ஃபோன்லே பேசிக்கிறது மாதிரி நாங்க காற்று மூலமாப் பேசிக்குவோம்! அப்படித்தான் உன்னைப் பத்தி உன் வீட்டிலே இருக்கிற பொம்மையெல்லாம் எங்கிட்டே சொன்னது!'' என்றது கிளி பொம்மை!
 சிலை வடிவில் இருந்த ஒளவையார், திருவள்ளுவர், பாரதியார் பொம்மைகள் எல்லாம் தினேஷைக் கோபத்துடன் பார்த்தன!
 ஆள் உயரக் கரடி பொம்மை அவனருகில் வந்து, "அந்த நல்லவர்கள் பிறந்த மனித குலத்தில் பிறந்துட்டு இப்படி ஒரு நல்ல குணமும் இல்லாம இருக்கியே?.... உனக்கு வெட்கமா இல்லையா? '' என்றது.
 "என்ன?.... எல்லோரும் மிரட்டுறீங்களா?... உங்களாலே என்னை என்ன செய்ய முடியும்?.... நீங்க யாரு எனக்கு அறிவுரை சொல்றதுக்கு?....'' என்று ஆத்திரப்பட்டான் தினேஷ்!
 எல்லா பொம்மைகளும் அவனைச் சூழ்ந்து கொண்டன.
 " தோ பாரு தம்பி!.... உன்னை இங்க கொண்டு வந்தானே ஒரு மனுஷன்! அவன் இப்ப எங்க கட்டுப்பாட்டுலதான் இருக்கான்!.... அடுத்தவங்களுக்குத் துன்பம் கொடுத்துக்கிட்டே இருந்தான்.... அதனாலே அவன் தலையை எங்க மாஸ்டர் மந்திரக் கோலாலே தட்டின உடனேயே அவன் எங்க அடிமை ஆகிட்டான்! அவனாலே இனிமே தனிச்சு இயங்க முடியாது! நாங்க சொல்றபடிதான் கேட்க முடியும்! இப்ப அவன் எங்க கைப்பொம்மை! அது போல உன்னையும் ஆக்கிடுவோம்! ஆனா உனக்கு ஒரு சான்ஸ் தர்றோம்!.... பொய் பேச மாட்டேன்!.... அடுத்தவங்க பொருளைத் திருட மாட்டேன்!.... ன்னு எங்களுக்கு சத்தியம் செய்து குடுத்தா உன்னைய விட்டுடறோம்! '' என்றன!
 தினேஷ் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தாளாமல் பிரமை பிடித்தவன் போல் நின்றான்.
 "அதிரடியா கவனிச்சாதான் இவன் சரிப்படுவான்!....இவனை என் கிட்டே விடுங்க! '' என்றது போலீஸ்கார பொம்மை!
 "இது சரிப்படாது!.... மாஸ்டரைக் கூப்பிடுங்க! '' என்றன எல்லா பொம்மைகளும்!
 பொம்மைகளின் மாஸ்டர் மந்திரவாதி பொம்மை கையில் ஒரு கோலுடன் தினேஷின் தலையைத் தொட வந்தது. தினேஷ் பயந்துபோய் "ஓ!'' என்று அலறினான்.
 அவன் அருகில் படுத்திருந்த அவன் அம்மா எழுந்து, "ஏய்!....தினேஷ் என்னாச்சு?.... ஏதாவது கனவு கண்டியா? '' என்று அவனை உலுக்கி எழுப்பினார்.
 கண் திறந்த தினேஷ், "சே!.... கனவா? '' என்று புலம்பினான். முதல் வேலையாகத் தான் பிறரிடம் இருந்து எடுத்த பொருட்களை எல்லாம் அவர்களிடமே கொடுத்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டான். தினேஷின் பாட்டி அவனைக் குளிக்க வருமாறு அழைத்தார். எப்பொழுதும் அவரை, "நீ'..."வா' ..."போ' என்று ஒருமையில் அழைக்கும் தினேஷ், "சரிங்க பாட்டி!....நானே குளிச்சிக்கறேன்'' என்று மரியாதையாகப் பேசினான். தன் பேரனின் நடத்தையில் தெரிந்த திடீர் மாற்றம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
 தொடரும்....
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com