கிராமத்தின் அழகு

கோடை விடுமுறைக்கு ஏதாவது வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்பது தினேஷின் நீண்ட நாள் ஆசை. அவனுடன் படிக்கும் அஸ்வின் ஆண்டுதோறும் துபாய்க்கு சென்றுவிடுவான்.
கிராமத்தின் அழகு

தினேஷின் உலகம்!  14
கோடை விடுமுறைக்கு ஏதாவது வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்பது தினேஷின் நீண்ட நாள் ஆசை. அவனுடன் படிக்கும் அஸ்வின் ஆண்டுதோறும் துபாய்க்கு சென்றுவிடுவான். அவனுடன் படிக்கும் சில மாணவர்கள் வெளிநாடுகளுக்கு ஒருமுறையேனும் சென்று வந்துள்ளார்கள். அவர்கள் விமான பயணம் பற்றியும், வெளிநாடுகள் பற்றியும் கூறும்பொழுது அவனுக்கு ஆச்சரியமாகவும், பொறாமையாகவும் இருக்கும். 
" அப்பா இந்த லீவுக்கு சிங்கப்பூர் போலாமா?'' தினேஷ் தன் தந்தையிடம் கேட்டான். 
" இந்த வருஷம் நீ கிராமத்துல இருக்குற அத்தை வீட்டுக்கு தான் போகப் போற!'' என்றார் அப்பா. 
" அய்யய்யோ! கிராமம் சுத்த போர்! அதுக்கு நான் இங்கேயே இருக்கேன்!'' என்றான் தினேஷ் அலுப்புடன். 
"இங்கே இருந்தா என்னேரமும் டி.வி. முன்னால உட்கார்ந்துகிட்டு ரொம்ப போர் அடிக்குதுன்னு பாட்டியை படுத்தி எடுத்துக்கிட்டே இருப்ப! நீ அங்க போனா தான் சரிப்படும்!'' என்றார் அப்பா கண்டிப்பான குரலுடன். தினேஷ் அதுவரை கிராமத்துக்கே போனதில்லை. 
"தினேஷ் இந்த லீவுக்கு நீ எங்க போகப் போற?'' என்று நண்பர்கள் கேட்டபொழுது பதில் கூறாமலேயே இருந்தான். அப்பாவின் பிடிவாதத்துக்கு முன் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறு வழி இல்லாமல் கிராமத்துக்கு வந்து சேர்ந்தான். அவனது அத்தை அன்போடு வரவேற்றார். அத்தை மகன் ஆனந்த் ஓடிவந்து இவனது பையை சினேகத்துடன் வாங்கிக் கொண்டான். அவன் ஏழாம் வகுப்பில் படித்து கொண்டு இருந்தான். 
அத்தை வீடு மிகவும் பெரியதாக இருந்தது. வாசலில் 2 பெரிய வேப்ப மரங்கள் இருந்தன. பெரிய தூண்களுடன் விசாலமான திண்ணைகள் இருந்தன. அவை இரண்டும் சென்னையில் இருக்கும் அவன் வீட்டு கூடத்தைவிட மிகப்பெரியதாக இருந்தன. நடுவில் முற்றத்துடன் கூடிய வீடு. நல்ல காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் இருந்தது. 
"வாடா தங்கம்! இப்பத்தான் அத்தை வீட்டுக்கு முதல்முறையா வர்ற இல்லையா? போ! போய் கை கால் கழுவிக்கிட்டு வா! காபி தர்றேன்!'' என்றார் அத்தை. 
சமையலறையை தாண்டி கொல்லைப்புறத்தில் கிணறும் அதை ஒட்டி குளியலறையும் இருந்தன. சென்னையில் கிணற்றையே பார்த்திராத அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சற்றுத் தள்ளி ஒரு மாட்டுத் தொழுவம் இருந்தது. அதில் 3 பசு மாடுகளும் 2 கன்று குட்டிகளும் கட்டப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் அவனுக்கு குஷி தாங்கவில்லை. கூடத்திற்கு ஓடிச்சென்று தந்தையிடம், "அப்பா! அத்தை வீடு ரொம்ப அழகா இருக்குப்பா!'' என்றான் முகம் மலர. அவன் தந்தைக்கும் மகிழ்ச்சி! 
"தினேஷ் நீ இங்கே ஒரு வாரம் வரைக்கும் இரு! நான் அடுத்த வாரம் வந்து கூட்டிட்டு போறேன்!'' என்றார் அப்பா. 
"வாங்க மாப்பிள்ளை! எப்ப வந்தீங்க?'' என்று கேட்டபடியே வந்தார் ஒரு தாத்தா. 
" இப்பதான் வந்தோம் மாமா!'' என்று கூறிய தினேஷின் தந்தை, " தினேஷ்! இவர்தான் ஆனந்தோட தாத்தா! தாத்தாவுக்கு வணக்கம் சொல்லு!'' என்றார். 
"வணக்கம் தாத்தா!'' என்றான் தினேஷ். 
"வணக்கம்! வாங்க! வாங்க!'' என்றார் தாத்தா மகிழ்ச்சியுடன். 
மறுநாள் காலை பல் துலக்கிய உடன் கொல்லைப்புறத்தில் மாடுகளை மிரட்சியுடன் சற்று தொலைவில் நின்று வேடிக்கை பார்த்தான். 
மாடுகளுக்கு முன்னே நிறைய வைக்கோல் போடப்பட்டிருந்தது. கன்று குட்டிகள் இரண்டும் அவிழ்த்து விடப்பட்டதும் ஓடிச்சென்று தாயின் மடியில் பால் அருந்தின. சற்று நேரத்திற்கு பிறகு தாத்தா அவற்றை இழுத்துச்சென்று கம்பத்தில் கட்டினார். பின்னர் பால் கறக்க ஆரம்பித்தார். சென்னையில் இவை எதையுமே காண வாய்ப்பில்லாத தினேஷுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 
"தாத்தா நானும் கொஞ்சம் பால் கறக்கட்டுமா?'' என்று கேட்டான். 
"வேணாம் தினேஷ்! புது ஆள் கை வச்சா மாடு உதைக்கும்!'' என்றார் தாத்தா. 
பால் கேன் முழுவதும் வெள்ளை வெளேரென்ற நுரையுடன் பசும்பால் நிரம்பிக் கொண்டிருந்தது. 
ஆனந்தும் தாத்தாவும் ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். தினேஷ் அவர்களுடன் சென்றான். ஆற்றில் தண்ணீர் சிறிதளவே ஓடினாலும் பார்க்கவே அழகாக இருந்தது. தாத்தா சில எளிய உடற்பயிற்சிகளை அவர்கள் இருவருக்கும் கற்றுக் கொடுத்தார். 
"தினேஷ் நீ இன்னிக்கி ஆத்துல குளிக்க வேண்டாம்! நாளைக்கு குளிக்கலாம்! ஏன்னா புது தண்ணி உடம்புக்கு ஒத்துக்காது!'' என்றார் தாத்தா. 
தினேஷுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் கரையில் இருந்தபடியே அவர்கள் இருவரும் குளிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஆனந்தும் அவனது நண்பர்களும் அப்படி தண்ணீரில் ஆட்டம் போட்டனர். அவன் தன் நண்பர்களை தினேஷுக்கு அறிமுகம் செய்து வைத்தான். 
தாத்தாவிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தினேஷை மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்றனர். 
"இது யாரோட தோப்பு?'' தினேஷ் கேட்டான். 
"நம்ப தாத்தா உடையதுதான்!'' என்றான் ஆனந்த். தோப்பில் நிறைய மாங்காய்கள் காய்த்துக் குலுங்கின. பச்சையாய் இருந்த சில மாங்காய்களை அணில்கள் கடித்து இருந்தன. அவற்றின் தோல் பச்சையாக இருந்தாலும் சதைப்பகுதி செந்நிறத்தில் பழுத்து இருந்தன. தினேஷ் சில பழங்களை பறித்து சாப்பிட்டான். அவை அவ்வளவு சுவையாக இருந்தன. தன் புது நண்பர்களுடன் மாந்தோப்பில் ஓடிப்பிடித்து விளையாடினான். நேரம் போனதே தெரியவில்லை. மதிய உணவிற்கு வீட்டிற்கு சென்றார்கள். 
மறுநாள் மாலை தினேஷ் சந்தைக்கு கூட்டிச் சென்றனர் தாத்தாவும் ஆனந்தும். பாதை ஓரத்திலேயே சாக்கை விரித்து நிறைய கடைகள் அமைத்திருந்தார்கள். நிறைய பூக்கள், பழங்கள், காய்கறிகள், மீன்கள் என்று பலவிதமான பொருள்கள் சந்தையில் விற்கப்பட்டன. 
குழந்தைகள் மகிழ குடை ராட்டினம் ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது. தள்ளுவண்டியில் ஒருவர் ஐஸ்க்ரீம் விற்றுக்கொண்டிருந்தார். மற்றொரு தள்ளுவண்டியில் ரோஸ் நிற பஞ்சு மிட்டாய் குழந்தைகளை வா! வா! என்று அழைத்தது. 
வண்ண வண்ண பலூன்கள், வண்ணக் கண்ணாடிகள், கண்ணைக் கவரும் வளையல்கள், ரிப்பன்கள் என எத்தனையோ பொருள்கள் சந்தையில் விற்கப்பட்டன. பொம்மை கடை, செருப்பு கடை, பாத்திரக்கடை, இரும்பு பொருள்களை விற்கும் கடை என்று நிறைய கடைகள் இருந்தன. 
"நேத்திக்கு நாம இங்க வந்தபோது ஒரு கடையும் இல்லையே? இன்னிக்கி எப்படி இவ்வளவு கடை வந்தது?'' ஆச்சரியத்துடன் கேட்டான் தினேஷ். 
"இதுக்கு பேர் தான்சந்தை! வாராவாரம் இந்த இடத்தில் சந்தை கூடும். நாளைக்கு காலையில எல்லாத்தையும் எடுத்துடுவாங்க! நிறைய பேர் தங்கள் வீட்டில விளையிற காய்கறிகள், பழங்கள் எல்லாத்தையும் கொண்டு வந்து விற்பார்கள்!'' என்றார் தாத்தா. 
தினேஷின் ஆச்சரியம் கூடிக்கொண்டே போனது. தாத்தா வீட்டிற்கு தேவையான மளிகை பொருள்கள், காய்கறிகள் போன்றவற்றை மிகவும் மலிவான விலையில் வாங்கினார். 
நண்பர்களுடன் தினம்தோறும் புதுப்புது விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தான் தினேஷ். களிமண்ணில் பொம்மை செய்ய கற்றுக்கொண்டான். ஒரு வாரம் எப்படி போனது என்றே தெரியவில்லை! அப்பா அவனை சென்னைக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். நண்பன் கண்ணன் பனை ஓலையில் செய்த சிறிய கிளி பொம்மையையும், ரவி காகிதத்தில் செய்த வண்ணத்துப்பூச்சியும் தமது அன்பு பரிசாக தந்தனர். அவற்றை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட தினேஷ் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டார். ஆனந்தையும் தன்னுடன் சென்னைக்கு வருமாறு அழைத்தான். பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றுக் கொண்டான். 
தன் தந்தையுடன் வாசலுக்கு வந்த தினேஷ் "இருங்கப்பா! நான் முக்கியமான ஒருத்தரை மறந்துட்டேன்!' என்று கூறிவிட்டு வீட்டின் பின்புறத்திற்கு ஓடினான். அங்கு கட்டியிருந்த பசுமாடுகள் இடம் சென்று,' நான் ஊருக்கு போயிட்டு வரேன்! நீங்கள்லாம் பத்திரமா இருங்க! அடுத்த முறை வரும்போது உங்களுக்கெல்லாம் பிடிச்ச "ஸ்னாக்ஸ்" வாங்கிட்டு வரேன்!' என்றான். 
அதைக் கேட்ட தாத்தாவும், மற்றவர்களும் வாய்விட்டு சிரித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com