செண்பக மரம்! 

நான் தான் செண்பக மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் மைக்கேலிய செம்பகா என்பதாகும். நான் மேக்னோலியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் வளரும் இடங்கள் மிகவும் செழிப்பாக இருக்கும்
 செண்பக மரம்! 

மரங்களின் வரங்கள்!
 அழகு மலராட, அபிநயங்கள் கூட !
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா ?
 நான் தான் செண்பக மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் மைக்கேலிய செம்பகா என்பதாகும். நான் மேக்னோலியேசி குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் வளரும் இடங்கள் மிகவும் செழிப்பாக இருக்கும், நீர் வளமும், மலை வளமும் அதிக அளவில் இருக்கும். நான் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறேன். சிவபெருமானுக்குரிய மலர்களில் எருக்கு, செண்பகம், செந்தாமரை, அலரி, புன்னை, நந்தியாவட்டை, தும்பை ஆகியவை சிறப்பித்துக் கூறப்படுகின்றன. இந்த வரிசையில் நானும் இடம் பிடித்திருப்பது எனக்குப் பெருமை தானே.
 இதை நிரூபிக்கும் வகையில் குற்றால மலையில் செண்பக மரங்கள் நிறைந்திருப்பதை நீங்கள் காணலாம். திரிகூடராசப்ப கவிராயர் தன் பாடல் ஒன்றில், "கொங்கலர் செண்பகச் சோலை குறும்பலா ஈசர்" அதாவது செண்பக வனச் சோலையில் வீற்றிருந்து குறும்பலா ஈசர் குற்றால நாதர் அருள்பாலித்து வருகிறார் என்று விவரிக்கிறார். என் பூக்கள் பார்ப்பதற்கு அழகாக நறுமணத்தோடு மஞ்சள் நிறத்திலும், ஆரஞ்சு நிறத்திலும் பூத்துக் குலுங்கும் அழகே தனி. என் இலைகள் நீண்டு வளர்ந்து மேற்புறம் பசுமையாகவும், பின்புறம் உரோமங்களுடனும், காற்றில் உள்ள தூசுகளை அகற்றும் தன்மையைக் கொண்டுள்ளது. என் பூக்களின் வாசனை காற்றோடு கலந்து சுற்றுப்புறத்தை மிக ரம்மியமாக வைத்திருக்க உதவுகிறது. என் விதை, வேர், பட்டை மருத்துவ குணங்கள் நிறைந்தது.
 என் பூக்களிலிருந்து தான் நுண்கிருமிகளைக் கொல்லும் கண்நோய் மருந்து, நறுமண எண்ணெய் தயார் செய்வார்கள். இந்த எண்ணெய் மூக்கடைப்பு, தொழுநோய், கீழ்வாதம், பித்த காய்ச்சல், சொறி, சிறங்கு ஆகிய நோய்களுக்கு அருமருந்தாகிறது. தலைவலிக்கும் சிறந்த மருந்து. என் பூக்களிலிருந்து அத்தர் எடுக்கப்படுகின்றது. என் பூக்கள் தலை நீர்க்கோர்வை, கண் நோய், தொண்டை வீக்கங்களைக் குணப்படுத்தும். செண்பக் பூ கஷாயம் நரம்பு தளர்ச்சியைப் போக்கும்.
 என் இலைகளை இடித்து சாறு எடுத்துத் துணியில் வடிகட்டி, அதில் 2 அல்லது 3 தேக்கரண்டி அளவு தேனும் சேர்த்துக் குடித்தால் எந்த வகையான வயிற்று வலியும் பறந்து போகும். அது உடல்சூட்டைத் தணித்து, பசியைத் தூண்டும். என் இளந்தளிரை அரைத்து தண்ணீரில் கலந்து கண்களில் விடுவதன் மூலம் பார்வை நன்றாகத் தெரியும். என் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வயிற்றுவலி, பாத வெடிப்புகள், அஜீரணம், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக பெரிதும் பயன்படுகின்றன. மேலும், நான் பிளைவுட், பென்சில், உயர்வகைப் பெட்டிகள், கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படறேன். என் கட்டைகளைக் காய்ச்சி வடிப்பதன் மூலமாக ஒரு வகையான கற்பூரத்தையும் தயாரிக்கிறாங்க.
 நான் தஞ்சாவூர் மாவட்டம், தென்குடித்திட்டை, திட்டை அருள்மிகு ஸ்ரீவசிஷ்டேஸ்வரர், திருஇன்னம்பூர், அருள்மிகு எழுத்தறிநாதர், கும்பகோணம், திருசிவபுரம் அருள்மிகு சிவபுரநாதசுவாமி, திருநாகேஸ்வரம், அருள்மிகு நாகநாதசுவாமி, கடலூர் மாவட்டம், பெண்ணாடம், அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் ஆகிய சிவஸ்தலங்களிலும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருசேறை, அருள்மிகு சாரநாதப் பெருமாள், கொற்கை, திருநந்திவிண்ணகரம், நாதன் தட்சிணஜகந்நாதம் ஆகிய விஷ்ணு ஸ்தலங்களிலும் நான் தல விருட்சமாக இருக்கிறேன். நான் "நந்தன' தமிழ் ஆண்டைச் சேர்ந்தவன்.
 மரம் நம் ஆரோக்கியத்தின் ஆதாரம். மரங்களால் சுற்றுச்சூழல் வளமாகும். உங்கள் வாழ்வும் நலமாகும். இறைத்தன்மையுடனும், மருத்துவத் தன்மையுடனும் மனித சமுதாயத்திற்குப் பயனளித்து வரும் பல்வேறு மரங்களுள் அடியேனும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமையடைகிறேன். நன்றி குழந்தைகளே ! மீண்டும் சந்திப்போம் !
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com