தண்ணீர்!  

"தினேஷ் குழாயை வீணா திறக்காதே! தண்ணியை வேஸ்ட் பண்ணாதே!''... என்றார் பாட்டி சமையலறையில் இருந்தபடியே.
தண்ணீர்!  

தினேஷின் உலகம்! 16
"தினேஷ் குழாயை வீணா திறக்காதே! தண்ணியை வேஸ்ட் பண்ணாதே!''... என்றார் பாட்டி சமையலறையில் இருந்தபடியே. தோட்டத்தில் இருந்த குழாயில் தன் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தான் தினேஷ். வாசலில் தன் நண்பன் அழைத்ததும் அப்படியே போட்டுவிட்டு ஓடிப் போனான். குழாயிலிருந்து தண்ணீர் வீணாக கீழே கொட்டியது. வேகமாக ஓட முடியவில்லை. மூச்சிரைத்த படியே ஓடிவந்து குழாயை மூடினார் பாட்டி.
"உங்களுக்கு எல்லாம் எப்போதான் பொறுப்பு வருமோ?' என்று நினைத்தபடியே மீண்டும் சமையலறைக்கு சென்றார். அன்று மாலை தினேஷ் தன் நண்பர்கள் சிலரை வீட்டுக்கு அழைத்து வந்தான். வாசலில் இருந்த கார் ஷெட்டில் அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்மா அப்பாவும் கூட வீட்டில் இருந்தனர். பாட்டி அனைவரையும் அழைத்தார். 
"நான் இப்போ ஒரு விடுகதை கேட்பேன்! பதில் தெரிஞ்சவங்க கொள்ளலாம்!' என்றார். அனைவரும் ஆவலோடு பாட்டியின் முகத்தையே பார்த்தபடி இருந்தனர். பாட்டி சொல்லத் தொடங்கினார். 
" நானின்றி மண் இல்லை! மரம் இல்லை! காய் இல்லை! கனி இல்லை! உணவில்லை! மொத்தத்தில் உயிர் எதுவும் இல்லை! நான் யார்?'' என்று கேட்டார். 
"தண்ணீர்தானே அது? இதுகூட எங்களுக்கு தெரியாதா?'' என்றான் தினேஷ். 
" சரி! தண்ணீர் எப்படி பூமிக்கு வந்தது? தெரியுமா?... அந்தக் கதையைச் சொல்லட்டுமா?''....என்று கேட்டார் பாட்டி. 
" ஹாய்!.. கதை! கதைன்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி! சொல்லுங்க பாட்டி!' என்றனர் தினேஷின் நண்பர்கள். 
"கடவுள் பூமியை எப்படிப் படைத்தார் தெரியுமா? சூரியனிலிருந்து சின்னதா ஒரு நெருப்புத் துண்டு வெடித்து பிரிந்து வந்ததாம்! ''
"சின்னதுன்னா?....'' 
"சின்னதுன்னா ரொம்பச் சின்னது இல்லே!.... அந்த நெருப்புத்துண்டோட சைஸ், நம்ம பூமி அளவு!''
"யப்பா!.... அவ்வளவு பெரிசா?''
"அந்த நெருப்புத் துண்டுதான் நம்ம பூமி!..... நாளடைவில் அது கொஞ்சம் கொஞ்சமாஅணைந்து விண்வெளியில் சுற்றிக் கொண்டே இருந்ததாம்! கொஞ்சம் கொஞ்சமா பெரிய மண் உருண்டை மாதிரி ஆனதாம்! அப்படி சுத்தும் போது தன்னைத் தானே சுத்தி கொண்டு சூரியனையும் சுத்தி வந்ததாம்! இதனால் அதை சுத்தி காற்று மண்டலம் உருவானதாம்! காற்று மண்டலத்தால் மேகங்கள் உருவானதாம்! அந்த மேகங்கள் மழை பொழிய ஆரம்பித்ததாம்! எத்தனை வருடம் தெரியுமா? தொடர்ந்து பல வருடம் மழை பெய்து கொண்டே இருந்தது! அப்படி பொழிந்த மழை எல்லாம் பூமி உருண்டை மேலே இருந்த பெரிய பள்ளங்களில் நிரம்பினதாம்! அது என்ன தெரியுமா? அதுதான் கடல்! ....... இப்படி இருக்கும்போது சாத்தான் கடவுளுக்கு எதிராக சவால் விட்டானாம்! சாத்தான் என்றாலே கெட்டவன் தானே? அவன் எப்பவும் கடவுள் செய்யுற நல்ல செயல்களுக்கு எதிராகத்தான் இருப்பானாம்....... 
....."இந்த பூமியில இருக்கிற தண்ணியை எல்லாம் நான் உறிஞ்சி குடித்து விடுவேன்! அப்புறம் நீ எப்படி உயிர்களை படைக்க முடியும்?'' என்று சாத்தான் கேட்டானாம்! 
" உன்னால முடிஞ்சா குடிச்சு பாரு!''...ன்னு சொல்லி கடவுள் சிரித்தாராம்! 
......கோபமான சாத்தான் பூமி பந்து மேல இருந்த தண்ணியை எல்லாம் அப்படியே விழுங்கினானாம். ஒரு சொட்டுதண்ணீர் உள்ளே போன உடனேயே அதை அப்படியே திரும்பவும் துப்பி விட்டானாம்! காரணம் அத்தனை தண்ணியும் ஒரே உப்பாக இருந்ததாம்! 
"அத்தனை தண்ணியும் உப்பா இருக்கு! இதுல எப்படி ஜீவராசிகள் வாழ முடியும்?'' னு நெனச்சுக்கிட்டு வந்த வழியே திரும்பவும் போயிட்டானாம்! ........ 
....... கடவுள் சாத்தான் எடுக்க முடியாதபடி நல்ல தண்ணீரை எல்லாம் பூமிக்கு அடியில மறைச்சு வைத்தாராம்! ஏன் தெரியுமா? தண்ணீர் முதல் உணவு மனிதனுக்கு! எல்லா உயிரினங்களின் தோற்றமும் தண்ணீரில் தான் துவங்கும்! அந்த தண்ணீரே மருந்தாகவும் இருக்கும்! தண்ணீரே உணவு பொருளை உருவாக்கி தரும்! இந்த தண்ணீர் இருக்கிற வரை உயிர்களுக்கு ஒரு குறையும் வராது! அதனாலதான் தண்ணீரை அளவோடு பயன்படுத்தனும்! வீண் பண்ண கூடாது! என்று சொல்கிறோம்!' என்றார் பாட்டி. 
" கடல் தண்ணியைச் சாத்தான் துப்பிட்டு போயிடுச்சே..... ஆனா மழைத்தண்ணி மட்டும் எப்படி உப்புக் கரிக்காமல் இருக்கு?'' என்று கேட்டான் ஸ்ரீராம். 
"ரொம்ப நல்ல கேள்வி ஸ்ரீராம்! இதுக்கு நான் பதில் சொல்றேன்!'' என்றார் அப்பா' 
"கடல் தண்ணி சூரிய வெப்பத்தாலே ஆவியா ஆகுது இல்லையா?''
"ஆமாம்!'' என்றார்கள் கோரஸாக. 
"உப்புத் தண்ணீரில் உப்பு எப்படி ஆவியாகும்!..... தண்ணீர் மட்டும்தானே ஆவியாகும்?.....கடலில் இருக்கும் தண்ணீர், அதைத் தவிர ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் இருக்கும் தண்ணீரும் ஆவியாகி மேகங்களாக மாறி மழை பொழியுது!'' என்றார் அப்பா. 
"கடலில் இவ்வளவு தண்ணீர் இருக்கும்போது எப்படித் தண்ணீர்ப் பஞ்சம் வரும்?''
"அப்படியில்லே!.... சில சமயங்களில் போதுமான அளவு தண்ணீர் ஆவியாகாது!.... அப்படியே ஆனாலும்.... பெய்கிற மழை கடலிலேயே பெய்து விடுகிறது!.... மறுபடியும் உப்புத் தண்ணீரா ஆயிடுது!!... நல்ல தண்ணீர் குறைச்சலாத்தான் கிடைக்குது!''
"இப்போ உலகத்திலே எவ்வளவு நீர் நல்ல நீரா இருக்கு?'' என்று கேட்டான் தினேஷ்.
"சரியான கேள்வி இது!.... சொன்னா திகைப்பா இருக்கும்! உலகத்திலே இருக்கிற தண்ணீரில் 97.5 சதவீதம் உப்புத் தண்ணீர்தான்!... மீதி 2.5 சதவீதம்தான் நல்ல தண்ணீர்....'' 
"ஐயய்யோ!.... அது நமக்கும், உயிரினங்களுக்கும், தாவரங்களுக்கும் போதுமா?'' என்று கேட்டான் தினேஷின் மற்றொரு நண்பன்.
"எப்படிப் போதும்?.... பல இடங்களிலே தண்ணீர்ப் பஞ்சம்தான்!.....ஜாம்பியா, உகாண்டா, நைஜீரியா போன்ற நாடுகளில் தண்ணீர் கிடைக்காம மக்கள் வருஷா வருஷம் இறந்து போறாங்களாம்!.... நம்ம நாட்டுல அந்த நிலைமை வரக்கூடாதுன்னு நீங்க நினைச்சா தண்ணீர் எங்க சொட்டிக்கொண்டு இருந்தாலும் உடனே குழாயை மூடனும்! எவ்வளவு அவசரமான வேலை செய்துகிட்டு இருந்தாலும் இதை செய்ய தவறக்கூடாது! தண்ணீரை ரொம்ப ரொம்ப சிக்கனமாக பயன்படுத்தனும்! உங்களுக்குப் பிறகு வரும் தலைமுறைக்கு நீங்க விட்டுட்டு போகும் மிகப்பெரிய சொத்து தண்ணீர்தான்!... தண்ணீர் பற்றி இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு!...அதையெல்லாம் நீங்க போகப் போகத் தெரிஞ்சுக்குவீங்க...'' என்றார் அப்பா பெருமூச்சு விட்டபடியே. 
தினேஷும் அவன் நண்பர்களும் சிந்திக்கத் தொடங்கினர். 
நிறைவு பெற்றது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com