தேறாதவனையும் தேற்றும் தேற்றா மரம் 

நான் தான் தேற்றா மரம் பேசறேன். என்னை உங்களுக்குத் தெரியாது குழந்தைகளே. ஆனால், எனக்கு உங்களை எல்லாம் தெரியும். நான் ஏறக்குறைய ஐசியு-வில் தான் இருக்கிறேன்
 தேறாதவனையும் தேற்றும் தேற்றா மரம் 
Published on
Updated on
2 min read

மரங்களின் வரங்கள்!
 என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா,
 நான் தான் தேற்றா மரம் பேசறேன். என்னை உங்களுக்குத் தெரியாது குழந்தைகளே. ஆனால், எனக்கு உங்களை எல்லாம் தெரியும். நான் ஏறக்குறைய ஐசியு-வில் தான் இருக்கிறேன். எனது தாவரவியல் பெயர் ஸ்டிரிக்னாஸ் பாட்டாடோரம். நான் லாகானியாசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் 30 முதல் 50 அடி உயரம் வரை வளர்ந்து உங்களுக்கு நல்ல நிழல் தருவேன். நான் தேறாதவனையும் தேற்றும் மகிமைக் கொண்டவன். நல்ல தழையமைப்பைக் கொண்டிருப்பதால் உங்களுக்கு நிழலையும், தந்து, சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க உதவுகிறேன்.
 சங்கக் காலத்தில் முல்லை நிலத்தில் செழிப்பாக வளரும் மரமாக நானிருந்தேன். "முல்லை இல்லமொடு மலர் கார் தொடங்கின்றே, இல்லம் முல்லையோடு மலரும்' என்ற அகநானுற்று வரிகள் என் பெருமையை உணர்த்துகின்றன. கார்காலத்தில் மலரும் என் பூக்களை சங்கக்கால மகளிர் சூடி மகிழ்ந்திருக்கின்றனர். எனக்கு கடகம், ஜலதம், அக்கோலம், சில்லகி, இல்லம், சில்லம், கதலிகம், பிங்கலம் என வேறு பெயர்களுமுண்டு. கலித்தொகையிலும், நற்றிணையிலும் என் பெயர் இருக்கு. நான் பளப்பளப்பாகவும், கரும்பச்சை நிற இலைகளையும், உருண்டையான விதைகளையும் கொண்டிருப்பேன். முன்பெல்லாம் தமிழகத்தின் மலைக் காடுகளிலும், சமவெளிகளிலும் நான் பரவலாகக் காணப்பட்டேன்.
 குழந்தைகளே, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூர பயணங்களின் போது நீரைத் தெளிவாக்கி சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்றும் கூட, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீரைத் தெளிவாக்கவும், சுத்தமாக்கவும் தேத்தாங்கொட்டையை பயன்படுத்தறாங்க. உங்கள் முன்னோர்கள் சேறும், சகதியுமாக கலங்கியிருக்கும் நீரைத் தெளிய வைக்க தேற்றாங்கொட்டையை பயன்படுத்தி வந்திருக்காங்க. நீரைத் தெளிய வைப்பதனால் தான் "இல்லம்' எனும் அழகிய தமிழ் பெயரில் என்னை அழைக்கிறாங்க. "இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கி நீர்போல் தெளிந்து' என்ற கலித்தொகை பாடல் வரியின் மூலம் என் பெருமையை நீங்கள் அறியலாம்.
 பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப் பொருட்களை கன உலோகங்களையும் சேர்த்து உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது. என் மரத்தின் கொட்டையை தேற்றாங்கொட்டை என அழைக்கிறாங்க. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப் போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமாகி விடும்.
 என் அனைத்து பகுதிகளும் மருத்துவத் தன்மை கொண்டவை. உடல் இளைக்கவும், தேறாத உடம்பைத் தேற்றவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் என் கொட்டையிலிருந்து லேகியம் செய்றாங்க. இது பசியைத் தூண்டி, உடம்பைத் தேற்றும். அதாவது உடல் மெலிந்தவர்கள் தேறிவிடுவார்களாம்.
 என் பழம், விதை இரண்டுமே சளியை விரட்டும். கபத்தைப் போக்கும், சீதபேதி, வயிற்றுப் போக்கை குணமாக்கும். புண்கள், காயங்களை ஆற்றும், கண் நோயைப் போக்கும், சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும். என் பழங்கள் நாவல் பழம் போன்றிருக்கும். என் விதைகள் வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, இரணம் போன்ற கோளாறுகளை சீர் செய்யும். குழந்தைகளே, அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனமடையும், தூக்கமும் கெட்டு விடும், அப்படிப்பட்டவர்கள் தேற்றான்கொட்டை தூளை நீர் விட்டு கொதிக்க வைத்து பால் சேர்ந்து அருந்தி வந்தால், இந்தப் பிரச்னை பறந்து போய் விடும்.
 நான் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் தலவிருட்சமாக இருக்கிறேன். மரங்கள் இயற்கையின் கொடை, நமக்கு நிழல் தருவதுடன், இதமான காற்றையும் தருகிறது. மரங்களைக் காப்போம், மழை பெறுவோம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
 (வளருவேன்)
 - பா.இராதாகிருஷ்ணன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com