பூனை

பூனை




காட்சி : 1
இடம் : கோமிடறு காடு / குகை
நேரம் : வெவ்வேறு நேரங்கள்
மாந்தர் : மஹாசிங்கம்,  பூனை
காலை 7. 15 : மஹாசிங்கம்  தூங்கி எழுகிறது. 
உடலைச் சிலுப்புகிறது. கொட்டாவி விடுகிறது.
காலை 7.20 : மஹாசிங்கம் குகை வாசலில் வந்து 
நிற்கிறது.
காலை 7.25 : மஹாசிங்கம் காலைத் தூக்குகிறது. 
ஒரு பூனை வேகமாகக் குறுக்கே செல்கிறது. 
மஹாசிங்கத்தின் முகம் மாறுகிறது.

காட்சி : 2
இடம் : கோமிடறு காடு / குகை
நேரம் : காலை 10 மணி
மாந்தர் : மஹாசிங்கம்,  அயன்நரி
(மஹாசிங்கம் கவலையுடன் காணப்படுகிறது.)
அயன்நரி : பூனைதானே,  மஹாராஜா..  அதனால் என்ன வந்துவிடப்போகிறது..?
மஹாசிங்கம் : அப்படி விட்டுவிட முடியுமா,  மந்திரியாரே..  ஆறறிவு மனிதர்களே இந்தப் பூனை கடப்பதைப் பார்த்தால் பதறுகிறார்களாமே..!
அயன்நரி :  உண்மைதான்,  மன்னா..  ஆனால்..
மஹாசிங்கம் : (இடைமறித்து)  மந்திரியாரே,  வெளியே புறப்படும் நேரத்தில் ஒரு தடை வந்திருக்கிறது..  அதை எப்படித் தகர்க்க வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்..
அயன்நரி : எப்படி என்றால்.. (பெருமூச்சு விட்டு)  ஒரு சோதிடரை அழைத்து தங்களுக்கு இப்பொழுது நேரம் எப்படி இருக்கிறது என்று கேட்டுப் பார்க்கலாம்..
மஹாசிங்கம் : நல்ல யோசனை.. ஆனால்,  காட்டு சோதிடருக்கு எங்கே போவது..?
அயன்நரி  :  எனக்கு ஒருவரைத் தெரியும்!

காட்சி : 3
இடம் : கோமிடறு காடு / நதிக்கரை
நேரம் : காலை 10. 35
மாந்தர் : மஹாசிங்கம்,  பசுங்கிளி, அயன்நரி
(மஹாசிங்கம்  உருட்டப்பட்ட சோழிகளை 
அமைதியாகப் பார்க்கிறது.)
பசுங்கிளி : கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலைதான்..  கவனமாக இருந்திராவிட்டால் நிச்சயம் ஆபத்து.. எதையும் பொறுப்பாகப் பேச வேண்டும் ..
அயன்நரி :  புரியவில்லையே,  சோதிடரே! மஹாராஜா யாரிடம் பொறுப்பாகப் பேசவேண்டும்?
பசுங்கிளி : ம்...ஸ்ஸ்ஸ்.. நான் என்னுடைய நேரம் எப்படி இருக்கிறது என்று பார்த்தேன்..  இருங்கள் ,  இப்போது மஹாராஜாவின் நேரத்தைப் பார்க்கலாம்..
(பசுங்கிளி சோழிகளை உருட்டுகிறது.)
மஹாசிங்கம் : இதாவது எனக்கானதா இல்லை உமது உறவினர் எவருடையதாவதா.?
பசுங்கிளி : உங்களதுதான்,  அரசே.. ம்ம்ம்..  எல்லாம் வெகு சுலபமாகப் போய்விட்டது.. 
மஹாசிங்கம் : என்ன செய்ய வேண்டும்?
பசுங்கிளி : குறுக்கே சென்ற அந்தப் பூனையைப் அழைத்து, அது சொல்லும்  ஆசையை நிறைவேற்றி வைத்தால் போதும்.. சுபம்.
மஹாசிங்கம் : சுபம்.
அயன்நரி : (முணுமுணுப்பாக) சுத்தம்!

காட்சி : 4
இடம் : கோமிடறு காடு /எல்லை
நேரம் : முற்பகல் 11.20
மாந்தர் : அயன்நரி,  பசுங்கிளி,  வயல்எலி
(வயல்எலி  தலையைச் சாய்த்து உற்றுப் பார்க்கிறது.)
அயன்நரி : நன்றாகச் சிந்தித்துப் பார்.. இந்தப் படத்தில் இருக்கும் பூனையை எங்காவது பார்த்திருக்கிறாயா..?
பசுங்கிளி : உனக்குத் தெரியாத பூனைகளே கிடையாது என்று தெரிந்துதான் வந்திருக்கிறோம்..
வயல்எலி : ஆம் .. எனக்குத் தெரியும்..  ஆனால், அது  இந்தப் படத்தில் இருப்பதுபோல் இவ்வளவு அசிங்கமாக இருக்காது..
அயன்நரி : இதை வரைந்தவர் நம் மஹாராஜா..
(வயல்எலி அதிர்ச்சியாகிறது.)
வயல்எலி : நாக்கு குழறிவிட்டது..  நிஜப் பூனையைவிட இந்தப் படத்தில் இருப்பது அழகாக இருக்கிறது என்று சொல்ல வந்தேன் ..
அயன்நரி : ம்ம்ம்.. பிழைக்கத் தெரிந்தவன்..  இந்தப் பூனையின் இருப்பிடத்தைக் கூறு..  
வயல்எலி : இருப்பிடம் எல்லாம் எனக்கு நன்றாகத் தெரிந்ததுதான்.. ஆனால்,  அதை நான் சொல்லவேண்டும் என்றால் ஒரு மாதத்திற்கு கொறிக்கப் போதுமான தானியமணிகள்  எனக்கு வேண்டும்..  என்ன,  சம்மதமா..?
(அயன்நரியின்  இமைகள் விரிகின்றன.)


காட்சி : 5
இடம் : கோமிடறு காடு / குகை
நேரம் : பிற்பகல் 1.55
மாந்தர் : மஹாசிங்கம்,  அயன்நரி, பசுங்கிளி, பூனை

(அயன்நரி  தலையில் காயத்துடன் நிற்கிறது.)

மஹாசிங்கம் : மந்திரியாரே,  இதென்ன தலையில் ஏதோ அடிபட்டதுபோல் காயம்..?
பசுங்கிளி : (அவசரமாக)  அதொன்றுமில்லை,  மன்னா..  வயலில் ஒரு மாதத்திற்குத் தேவையான தானியங்கள் சேகரிக்கும்போது.. காவலர் பார்த்துவிட்டதால்..
அயன்நரி : (இடைமறித்து)  அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்,  மஹாராஜா..  இதோ,  அந்தப் பூனை..
மஹாசிங்கம் பூனையைப் பார்க்கிறது.
பூனை : வணக்கம், வனவேந்தரே.. 
மஹாசிங்கம் : ம்ம்ம்.. உன்னை ஏன் அழைத்துவந்திருக்கிறோம் என்று தெரியுமல்லவா..?
பூனை : ஆம்,  வேந்தரே..  என்னுடைய ஒரு ஆசையைக் கேட்க..

மஹாசிங்கம் : சொல்..
பூனை : கிராமத்தில் இருக்கும் எனது உரிமையாளர் என்னைச் சரிவரக் கவனிப்பதில்லை..  அங்கு வந்து  அவரை ஒருமுறை மிரட்டிவிட்டு வந்தீர்கள் என்றால் போதும், வேந்தே..
(மஹாசிங்கத்தின் முகம் சுருங்குகிறது.)

காட்சி : 6
இடம் : கிராமம் / தெரு
நேரம் : இரவு 10.15
மாந்தர் : மஹாசிங்கம் , அயன்நரி,
வேட்டைநாய்கள்,   பூனை
(மஹாசிங்கம் பதுங்கிப் பதுங்கி வருகிறது.)

அயன்நரி :  மஹாராஜா,  தங்களுக்கு என்ன ஆயிற்று..? ஏன் இப்படி வருகிறீர்கள்..?
(தொலைவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்கிறது.)

மஹாசிங்கம் : ம்ம்ம்.. எனக்குச் சில கிராமத்து விலங்குகளைக் கண்டால் கொஞ்சம்..
அயன்நரி : தங்களுக்கு பயமா?  மனிதர்கள் உங்களை பயமற்றவர் என்பதற்கு உதாரணமாகச் சொல்கிறார்களே..
மஹாசிங்கம் : அதற்கெல்லாம் நான் என்ன செய்வது,  மந்திரியாரே.. 
(இரண்டு வேட்டைநாய்கள் 
அவர்கள் முன் வருகின்றன.)

மஹாசிங்கம் : ஐயோ..!
(மஹாசிங்கம் ஓடி மறைந்துகொள்கிறது.)

அயன்நரி : மஹாராஜா..  நாய்கள் உங்களை நோக்கித்தான் வருகின்றன.
(வேட்டைநாய்கள் மஹாசிங்கத்தை 
நோக்கி ஓடுகின்றன.)
மஹாசிங்கம் : ஐயோ .. கடவுளே !
(வேட்டைநாய்கள் மஹாசிங்கத்தை 
நோக்கிப் பாய்கின்றன.)
அயன்நரி : (நடுநடுங்க)  மஹாராஜா..!
(பூனை,  மஹாசிங்கத்திற்கும் வேட்டைநாய்களுக்கும் இடையே குதித்து உரக்கக் கத்துகிறது.)
பூனை : (முதுகு தூக்க நின்று)  உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
(வேட்டைநாய்கள் ஓடுகின்றன.)

மஹாசிங்கம் : பூனையே..  நல்ல வேலை செய்தாய்..  உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..
பூனை : கவலைப்பட வேண்டாம், வேந்தரே .. நான் இருக்கும்வரை உங்களை எந்த ஆபத்தும் நெருங்காது...
(அயன்நரி கண்களை இமைக்காமல் 
வாயைப் பிளக்கிறது.)

காட்சி : 7
இடம் : கோமிடறு காடு /எல்லை
நேரம் : காலை 10 மணி
மாந்தர் : அயன்நரி, வயல்எலி

(அயன்நரி மூட்டைமுடிச்சுடன் 
வேகமாக நடந்து செல்கிறது.)

(குரல்) : மந்திரியாரே...  நில்லுங்கள்.. 
(வயல்எலி வேகமாக ஓடிவந்து சேர்கிறது.)

வயல்எலி : (உடன் நடந்தபடி) நேற்று மிரட்டிய மிரட்டலில் அந்தக் கிராமத்து ஆள் ஊரைவிட்டே சென்றுவிட்டார்.. மஹாராஜா என்றால் சும்மாவா..அவருக்கு அஞ்சாதவர்களா..!
(அயன்நரி வயல்எலியை 
முறைத்தபடியே வேகமாக நடக்கிறது.)

வயல்எலி : ஆமாம்..  அந்தப் பூனையை என்ன செய்தீர்கள்..? அது எவ்வளவு அதிர்ஷ்டக்காரப் பிறவி தெரியுமா..?
அயன்நரி :  அப்படி என்ன அதிர்ஷ்டம்?
வயல்எலி : பின்னே..  நேற்று காலை நான் புறப்படும்போது குறுக்கே சென்றது..  அதிர்ஷ்டம் பாருங்கள்..  அன்றே எனக்கு ஒரு மாதத்திற்கான உணவு சுலபமாகக் கிடைத்தது.. 
(அயன்நரி நடப்பதை நிறுத்தி 
அமைதியாகப் பார்க்கிறது.)

வயல்எலி : அதைப் பார்த்துவிட்டாலே நல்ல நேரம்தான்..  அப்படிப்பட்ட பூனையைத் தாங்கள் ஒன்றும் செய்யவில்லைதானே,  மந்திரியாரே..
அயன்நரி : ( கோபமாக)  இதோ பார் .. உன்னுடைய அந்த அதிர்ஷ்டக்காரப் பூனை இனி  சிங்கத்தின் குகையில்தான் எப்போதும் இருக்கப்போகிறது..  தேவைப்
படும் நாள்களில் போய் பார்த்துவிட்டு வா..
வயல்எலி : (ஆச்சர்யமாக)  அந்தப் பூனைக்குக் குகையில் என்ன வேலை..?
அயன்நரி : அதுதான் இந்தக் காட்டின் புது மந்திரி..!
(அயன்நரி தலைக் காயத்தைத் தடவிக்கொண்டே நடக்கிறது---வயல்எலி புரியாமல் பார்க்கிறது.)
- திரை -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com