சூப்பர் சிவா! - 2: காப்பியடிச்சு மாட்டிக்கிட்டான்!.....
By சுகுமாரன் | Published On : 30th March 2019 10:00 AM | Last Updated : 30th March 2019 10:00 AM | அ+அ அ- |

விக்டர் சார் எல்லோரையும் பேப்பர் எடுக்கச் சொன்னார்.... பேப்பரில் "போயம்' எழுதி வைத்திருக்கிறார்களா என்பதை த் தெரிந்துகொள்ள உயர்த்திக் காட்டச் சொன்னார். அவனும் தைரியமாகக் காட்டினான்.
விக்டர் சார் "ஸ்டார்ட்' என்று சொன்னதும் சிவா தாளில் இருந்த தடத்தின் மேல் எழுதினான்.
எல்லோரும் எழுதிய பிறகு விக்டர் சார், போயமை திருத்துவதற்கு பக்கத்தில் இருப்பவனிடம் மாற்றிக் கொள்ளச் சொல்லுவார். "மிஸ்டேக்' எண்ணிக்கையை எழுதச் சொல்வார். இது வழக்கமாக நடப்பது.
இன்று முன் பெஞ்சில் இருக்கும் மாணவனிடம் மாற்றிக் கொள்ளச் சொன்னார். சிவாவின் கெட்ட நேரம் முன் பெஞ்சில் அருள் இருந்தான்.
ஒரு "மிஸ்டேக்' கூட இல்லாததைப் பார்த்து திகைத்து விட்டான்! சிவா எப்படி இங்கிலீஷ் படிப்பான் என்பது அவனுக்குத் தெரியுமே!
அருள் சிவா பேப்பரை ஆராய்ந்தான். போயமை தடம் ஏற்படுத்தி அதன் மேல் எழுதியிருப்பதை அருள் கண்டுபிடித்து விட்டான். விக்டர் சாரிடம் கொடுத்து கண்டுபிடித்ததை சொல்லியும் விட்டான்!
அருள் பேப்பரை தன்னிடம் கொடுக்காமல் சாரிடம் கொண்டுபோய்க் கொடுக்கும்போதே சிவாவுக்கு விளங்கிவிட்டது! உள்ளுக்குள் பயமும் வந்தது.
விக்டர் சார் உடனடியாகக் கூப்பிடுவார் என்று நினைத்தான். அவர் கூப்பிடவில்லை. கேள்விகளுக்கு கரும்பலகையில் பதில் எழுதிப் போட ஆரம்பித்தார். மாணவர்கள் எல்லோரும் நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்தார்கள். சிவாவும் எழுதினான். ஆனால் அவனுக்குக் குழப்பமாக இருந்தது. "டிரேஸ்' பண்ணி எழுதியதை அவர்கள் கண்டுபிடிக்கவில்லையோ என்று நினைத்து நிம்மதி அடைந்தான். அந்த நிம்மதி நீடிக்கவில்லை. சார் அவனைக் கூப்பிட்டார்.
சிவாவை ஒருமுறை உற்றுப் பார்த்த அவர் அவனைப் பாராட்டுவதுபோல் கேட்டார்.
""டேய், புத்திசாலித்தனமா காப்பி அடிக்கிறியோ?''
""இல்ல சார்.... நான் காப்பி அடிக்கவில்லை சார்...'' என்று சிவா மறுத்தான்.
""உண்மையைச் சொல்லு.... இல்லைன்னா உன்னை ஹெட்மாஸ்டர்ட்ட அனுப்பிடுவேன், அவர் தோலை உரிச்சுடுவார்'' என்று விக்டர் மிரட்டினார். ஆனால் சிவா அசையவில்லை.
இங்கிலீஷ் பீரியட் முடிந்ததும் விக்டர் சார் அவனை "ஹெட் மாஸ்டர்' அறைக்கு அழைத்துச் சென்றார்.
அவர் கையில் அவன் எழுதிய பேப்பர் இருந்தது. பலி இடுவதற்குச் செல்லும் ஆடு போல் அவன் பின்னால் நடந்தான்.
இரண்டாவது பீரியட் முடிந்ததும் "இன்டெர்வெல்' என்பதால் மாணவர்கள் எல்லோரும் வெளியே இருந்தார்கள். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் தம்பியும் எதிரே வந்தான். அண்ணன் தலை குனிந்து செல்வதை திகைப்போடு பார்த்தான். பின்னால் வந்த செல்வத்திடம் விசாரித்தான். ""உங்க அண்ணன் காப்பியடிச்சு மாட்டிக்கிட்டான்...'' என்று உண்மையைக் கூறிவிட்டான்.
தம்பிக்கு விஷயம் தெரிந்துவிட்டதால் சிவாவுக்குக் கவலை ஏற்பட்டது! அவன் செய்த தவறு வீட்டுக்குத் தெரியாமல் இருக்க என்ன செய்வது என்பதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.
சிவாவை "ஹெட் மாஸ்டர்' அறைக்கு வெளியே வைத்துவிட்டு விக்டர் சார் உள்ளே சென்றார்.
சிறிது நேரம் கழித்து அவன் அழைக்கப்பட்டான். விக்டர் சார் அவனுடைய பேப்பரில் உள்ள தடங்களை காட்டிக் கொண்டிருந்தார். அதை ஹெட்மாஸ்டர் தடவித் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். பற்களை நறநறவென்று கடித்தார்! இந்தச் சின்ன வயசிலேயே இவ்வளவு மூளை வேலை செய்கிறதா?...காப்பி அடிக்கிறதுக்கு காட்டுகிற திறமையை படிக்கிறதுலே காட்ட வேண்டிதுதானே!....'' என்று கேட்டார்.
சிவா காப்பியடிக்கவில்லை என்றதும் ஹெட்மாஸ்டருக்கு ஆத்திரம் வந்தது. மேசையிருந்த பிரம்பை எடுத்து விளாசினார். அடி வாங்கிய கையை பின்பக்கம் டிரவுசரில் சிவா தேய்த்தான். வலியைத் தாங்கமுடியாமல் ""இனிமே காப்பியடிக்க மாட்டேன் சார்...'' என்று சொல்லி அழுதான்.
அடிப்பதை நிறுத்திய ஹெட்மாஸ்டர் அவன் எழுதிய பேப்பரைக் கசக்கி அவன் முகத்தில் வீசியெறிந்தார்! அதை எடுத்துக்கொண்டு சிவா வெளியே வந்தான்.
அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த "டிரில் மாஸ்டர்' அவன் அழுதுகொண்டு வருவதைப் பார்த்தார். ஹெட் மாஸ்டர் அறைக்குள் சென்ற அவர் சிவா செய்த காரியத்தை அறிந்துகொண்டார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்.
ஆப்பம் மாதிரி உள்ளங்கை வீங்கியிருப்பதை சிவா அவ்வப்போது பார்த்துக்கொண்டான். சில நேரம் "விண்' என்று வலி எடுக்கும். அப்போது கையை பின் பக்கம் துடைத்துக் கொண்டான்.
அண்ணன் செய்வதை தம்பி உதயன் பார்த்தான். தம்பி பார்ப்பதை அண்ணனும் பார்த்தான். தம்பிக்கு தன் மீது இரக்கம் வரும், இரக்கத்தின் காரணமாக வீட்டில் தான் காப்பியடித்து அடி வாங்கியதை சொல்ல மாட்டான் என்று சிவா நினைக்கவில்லை.
தம்பி வாய் திறக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவன் தின்பதற்கு ஏதாவது வாங்கிக் கொடுத்து அவன் வாயை அடைக்க வேண்டும். சிவாவிடம் காசு எதுவும் இல்லை. காசு கிடைக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசித்தான். வீட்டில் மளிகைக் கடைக்கு அனுப்பினால் பொருள் வாங்கும்போது "கமிஷன்' கிடைக்கும். ஆனால் இந்த வாரம் அனுப்ப மாட்டார்கள். அதனால் கமிஷன் கிடைக்க வழியில்லை.
சந்திரா அக்கா கடைக்கு அனுப்புவார்கள். ஆனால் "கமிஷன்' அடிக்க முடியாது. ஆறுமுகம் கடையில் கொசுறாக தூள் வெல்லம் கொடுப்பார்கள். அதைத் தம்பிக்குக் கொடுத்தால் வீட்டில் சொல்லாமல் இருப்பான். என்று சிவா நினைத்தான். அதை தம்பியிடம் சொன்னான். அவனும் "சரி' என்றான். இப்போது சிவாவுக்கு நிம்மதியாக இருந்தது. வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக சந்திரா அக்கா வீட்டுக்குப் புறப்பட்டான். அண்ணன் புறப்படுவதை தம்பி கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டான். கிடைக்கபோகும் வெல்லத்தை நினைத்து இப்போதே அவன் வாயில் எச்சில் ஊறியது.
வாசல் கதவைத் திறந்து கொண்டு சிவா வெளியே போவதைப் பார்த்து அம்மா, ""டேய், எங்கேடா போறே,.... ஸ்கூல்லேர்ந்து வந்ததும் வராதுமா...'' என்று குரல் கொடுத்தாள்.
""இதோ வர்றேம்மா....'' என்று சிவா கதவை சாத்தினான். வீங்கிப் போயிருந்த வலது கையை கால் சட்டைப் பைக்குள் வட்டு மறைத்திருந்தான்.
சந்திரா அக்கா வீடு எதிர் வரிசையில் அவனுடைய வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்த தெருவிலுள்ள பிள்ளைகளுக்கு சந்திரா அக்காதான் கதை சொல்லுவாள். விடுமுறை நாட்களில் சந்திரா அக்காவின் அண்ணன் கிருஷ்ணனுடன் சேர்ந்து சிவா காடு மேடெல்லாம் சுற்றித் திரிவான்.
"அக்கா' என்று கூப்பிட்டுக்கொண்டே சிவா வீட்டுக்குள் போனான். அக்காவைக் காணவில்லை.
"இங்கே வாடா.... அக்கா ஊருக்கு போயிருக்கா....'' என்று சந்திரா அக்காவின் அப்பா அவனைக் கூப்பிட்டார்.
""கடைக்குப் போய் மூக்குப்பொடி வாங்கிட்டு வா'' என்று வேலை வைத்தார். அவனைத்தான் மூக்குப்பொடி வாங்க அனுப்புவார். சந்திரா அக்காவிடம் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போது மூக்குப்பொடி வாங்கி வரச் சொல்லுவார். அவன் போக மாட்டேன் என்பான். அவன் கடைக்கு போயிட்டு வரும் வரை அக்கா கதை சொல்வதை நிறுத்துவார். அதற்குப் பிறகுதான் அவன் கடைக்குப் போவான்.
சிவா கடைக்குப் போய் ரத்தினம் பட்டணம் பொடியை கேட்டு வாங்கினான். கடைக்காரன் சிறு மட்டையில் வைத்து மடித்துக் கொடுத்தான். அந்த மட்டை எப்போதும் சந்திரா அக்கா அப்பாவின் வேட்டி இடுப்பு மடிப்பில் வைத்திருப்பார்.
தொடரும்....
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...