அகில்குட்டியின் டைரி!: வாழ்க செல்ஃபோன்!
By அகில்குட்டி | Published On : 09th November 2019 01:24 PM | Last Updated : 09th November 2019 01:24 PM | அ+அ அ- |

இன்னைக்கு டீச்சர் ஒரு செய்தி சொன்னாங்க!.....
""இன்னைக்கு என் நம்பருக்கு ஒரு செய்தி வந்திருக்கு! அதில் மாவட்ட அளவில் நடந்த திருவள்ளுவர் கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் நம் வகுப்பு மாணவி வாணிக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு அப்படீங்கற தகவல்!''
சூப்பர்! வாணி பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருந்தாள்! அதுவும் மாவட்ட அளவில்! அவள் இன்றைக்குப் பள்ளிக்கு வரமாட்டாள்! லீவு! ஊரில் ஒரு நெருங்கிய உறவினர் வீட்டில் விசேஷம் என்று அவளுடைய அம்மா வகுப்பு ஆசிரியரிடம் வாணிக்கு லீவு கேட்டுக் கடிதம் கொடுந்திருந்தாங்க!.... அவள் ஊருக்குச் சென்று விட்டாள்! வருவதற்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்!
எங்க வகுப்பிலே படிக்கிற எல்லோரும் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல நினைச்சாங்க! வகுப்பிலே படிக்கிற எல்லோரோட பெற்றோர்களின் செல்ஃபோன் நம்பரையும் வகுப்பு ஆசிரியை.... அதான் கிளாஸ் டீச்சர் வாங்கி வெச்சிருப்பாங்க.... ஏதாவது செய்தி சொல்லணும்னா வேணும் இல்லையா!....அதனாலேதான்!..... வாணி இன்னைக்கு வகுப்புக்கு வந்திருந்தா எல்லோரும் அவளுக்கு நேரிலேயே வாழ்த்து சொல்லியிருப்போம்! எல்லோரும் என்ன செய்யலாம்னு யோசிச்சோம்! கிளாஸ் டீச்சர் கிட்டே, ""இந்த நல்ல செய்தியை அவளுக்கு சொல்லி எங்களோட வாழ்த்துக்களை அவளுக்கு சொல்ல விரும்பறோம்!...'' அப்படீன்னோம்!
உடனே டீச்சர், ""அப்படியா?..... சரி எல்லோரும் இங்கே வாங்க!.... வந்து குரூப்பா நில்லுங்க..... அகில்!.... நீ என்னோட செல் ஃபோனை எடுத்துக்கோ!.... நான், நீங்க எல்லோரும், சேர்ந்தாப்போல், "வாணி!..... திருவள்ளுவர் கழகம் நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் உனக்கு முதல் பரிசு கிடைச்சிருக்கு!... எங்களோட வாழ்த்துக்கள்!'.... அப்படீன்னு சொல்லுவோம்!...... அதை அப்படியே வாட்ஸ் அப்பிலே எடுத்து அவ அம்மா நம்பர் தர்றேன்..... அந்த நம்பருக்கு அனுப்பிடு!....'' அப்படீன்னாங்க!
எல்லோரும் நின்னாங்க..... எல்லோரும் கோரஸாக, ""வாணி!..... திருவள்ளுவர் கழகம் நடத்திய மாவட்ட அளிவிலான பேச்சுப் போட்டியில் உனக்கு முதல் பரிசு!.... எங்களோட வாழ்த்துக்கள்!'' அப்படீன்னு சொன்னாங்க....
வீடியோவா அதை அப்படியே எடுத்து வாட்ஸ் அப்பில் டீச்சர் சொன்ன நம்பருக்கு அனுப்பிட்டேன்! ஆனால் செய்தி போகவில்லை!
நான் நெட்டை ஆன் செய்யவில்லை!.... பிறகு டீச்சர் நெட்டை ஆன் செய்து மறுபடியும் அனுப்பினாங்க..... வீடியோ போய்ச் சேர்ந்தது!
பிறகு நான் மட்டும் நிற்க டீச்சர் கூறியபடி நானும் வாழ்த்துச் செய்தியைச் சொன்னேன். அதையும் டீச்சர் அனுப்பினாங்க. சற்று நேரத்தில் வாணி பதிலுக்கு வாட்ஸ் அப்பில் நன்றி கூறி செய்தி அனுப்பியிருந்தாள்! வாணிக்கு ரொம்ப சந்தோஷம்!.....
கிளாலே கொஞ்ச நேரம் சந்தோஷமாகவும், கலகலப்பாகவும் இருந்தது! வாழ்க திறன்பேசி! ஓ.கே!....செல்ஃபோன்!