அரங்கம்: சதுரங்கம்

மன்னர் தருமசேனர் - அமைச்சரே.. குல குரு முனிவர் ஆசிரமத்துக்குத் தேவையான தானியங்களை அனுப்பி விட்டீர்களா..?
அரங்கம்: சதுரங்கம்

காட்சி - 1
இடம் : அரண்மனை, மாந்தர் - மன்னர் தருமசேனர், அமைச்சர் நல்லசிவம்

மன்னர் தருமசேனர் - அமைச்சரே.. குல குரு முனிவர் ஆசிரமத்துக்குத் தேவையான தானியங்களை அனுப்பி விட்டீர்களா..?
அமைச்சர் நல்லசிவம் - அனுப்பி விட்டேன் மன்னா. கோயிலுக்கு சேரவேண்டிய தானியங்கள் எண்ணெய் இவற்றையும் காலக் கிரமத்தில் அனுப்பச் சொல்லி இருக்கிறேன் அரசே.
மன்னர் - சரி.. என் கடமைகளை விரைந்து முடிக்க வேண்டும். புலவர் நல்லூர் கிழார் மகளுக்குத் திருமணம் என்று சொன்னார். அவருக்கு ஆயிரம் கழஞ்சுகள் நாணயமும் பட்டாடைகளும் உடனே அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்.
அமைச்சர் - அப்படியே செய்கிறேன் மன்னா.. அரசே தங்கள் குரலில் ஒரு நடுக்கத்தையும் ஒரு கலக்கத்தையும் உணர்கிறேன். காரணம் தெரிந்து கொள்ளலாமா ?.
மன்னர் - என் காலம் முடிவடையப் போகிறது. அண்டை நாட்டு மன்னர் பூபதி பெரும் படையுடன் வந்து கொண்டிருக்கிறாராம். ஒற்றன் செய்தி அனுப்பியுள்ளான்.
அமைச்சர் - (அதிர்ச்சியுடன்) என்ன.?. போரா? நம் மீதா.? அவர் தங்களின் நண்பராயிற்றே.
மன்னர் - ஆம்.. சென்ற வருடம் வரை.. புதியதாக பொறுப்பேற்றுள்ள அவரது தளபதி வில்லவன் அவர் மைத்துனன் முறையாம். அவன் வந்ததில் இருந்து ஏதேனும் கோள் வைத்து நம் நாட்டைப் பிடிக்க பூபதி மனதில் ஆசையைக் கிளப்பி விட்டுள்ளான். இரவோடு இரவாக ஒரு பெரும் படை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது, அதனால் என் கடமையைச் செய்து முடித்துவிட வேண்டும் விரைவாக.
அமைச்சர் - கவலை வேண்டாம் மன்னா. நாம் வீரத்தில் சளைத்தவர்கள் அல்ல. மோதிப் பார்த்துவிடலாம் ஒரு கை.
மன்னர் - இல்லை அமைச்சரே. நான் அண்டை நாடு நட்பாயிருந்ததால் அலட்சியமாகப் படை வலிமையைப் பெருக்கவில்லை. ஆயுதங்களை சேகரிக்க வில்லை. ஆனால் பூபதியோ போருக்குத் தன்னை ஒரு வருடமாகத் தயார் படுத்தி வருகிறான். நாம் போரிட்டால் தோல்வி அடைவதுடன் நம் மொத்த படையும் நாசமாகிவிடும்
அமைச்சர் - தங்களின் இறுதி முடிவு ?
மன்னர் - சரணடையப் போகிறேன்.
அமைச்சர் - என் இறுதி மூச்சு உள்ளவரை அது நடக்காது. நான் என் உடலில் கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரை தங்களைக் காக்க வாளெடுத்துப் போரிடுவேன்.
மன்னர் - தங்கள் வீரத்தையும் விசுவாசத்தையும் நான் அறிவேன். ஆனாலும் இது தக்க சமயம் அல்ல. உயிர்ச் சேதம் தான் மிஞ்சும். நான் சொல்வதைக் கேளுங்கள்.
அமைச்சர் - மன்னா. வாழ்வோ தாழ்வோ கடைசிவரை நான் தங்கள் அருகில் இருக்க மட்டும் அனுமதியுங்கள்.
மன்னர் -– (ஒரு நீண்ட பெருமூச்சை விடுகிறார்.) இது தான் இறை சித்தம் போலும்.

காட்சி - 2
இடம் - கோட்டை வாசல். மாந்தர் - பூபதி,வில்லவன்,
(பூபதி படை கோட்டை வாசலை அடைகிறது. மன்னர் தருமசேனர் தன் உடை வாளை பூபதி காலடியில் சமர்ப்பித்து தன் தளபதி, வீரர் களுடன் சரண்அடைகிறார்)

யானை மேலிருக்கும் மன்னன் பூபதி - ( தளபதி வில்லவனைப் பார்த்து) – தளபதி இவர்களை என்ன செய்யலாம்
தளபதி வில்லவன் - தருமசேனரையும் அவர் ஆட்களையும் அவர் நாட்டு சிறையில் அடைத்து விடலாம் தாங்கள் இங்கு அரியணையில் அமர்ந்து கொஞ்ச காலம் ஆட்சி செய்யுங்கள். மக்கள் தங்களை ஏற்கும் வரை இருங்கள். பின் தங்களுக்கு விருப்பமான ஒருவருக்கு ஆட்சி அதிகாரத்தைத் தந்து விட்டு நாடு திரும்பலாம் இந்த நாட்டின் மன்னனாக இருக்க எனக்கும் ஒரு ஆசை உள்ளது. தாங்கள் விருப்பப்பட்டால்,,
பூபதி - அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்த மன்னர் இருந்த சிம்மாசனம் காலியாகவே இருக்கட்டும்.

காட்சி - 3
இடம் - சிறைச்சாலை, மாந்தர் - மன்னர் தருமசேனர், அமைச்சர் மற்றும் தளபதி வீரர்கள்,சிறை அதிகாரி

நேரம் - மதியம்
பூபதி மன்னரின் அதிகாரி - (சிறை பொறுப்பு வகிப்பவர்) இந்தாப்பா கைதிகளா.. வரிசையா வாங்க.. வந்து களியும் கீரைக் கூட்டும் மோரும் வாங்கிப் போங்க. அவரவர் மண் சட்டியை கையில் எடுத்து வாங்க.
(எல்லோரும் வரிசையாக நிற்க)
வீரர் களும், அமைச்சர் தளபதியும் - (தருமசேனரிடம்) - மன்னா!... தாங்கள் வரிசையில் வரவேண்டாம். நாங்கள் வாங்கிவருகிறோம்.
தருமசேனர் - வேண்டாம். சிறையின் சட்டப் படி நானும் வரிசையில் வருகிறேன்.
சிறை அதிகாரி - ( தன் நீண்ட மீசை தாடியை நீவியபடி) ஓ!.... நீங்கள் தான் பழைய மன்னரா?.... இந்தாருங்கள் பிடியும். தங்களுக்கு எதுவும் சலுகை இங்கு கிடையாது!
தருமசேனர் - (பதில் ஏதும் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துபடி உணவை வாங்கிச் செல்கிறார்.
(இக்காட்சியைக் கண்ட தும் அமைச்சரும் தளபதியும் துக்கம் மேலிட கண்ணீரைத் துடைத்துக் கொள்கின்றனர்,)

சிறை அதிகாரி - தருமசேனரே!..... விரைவில் உங்கள் எல்லோரையும் வேறு இட த்துக்கு மாற்ற உள்ளோம். அங்கு ஒவ்வொருவரும் வேலை செய்யவேண்டும். உங்களுக்கு கல் உடைக்கும் பணி தரச் சொல்லி இருக்கிறேன்.
(தருமசேனர் புன்னகையை பதிலாகத் தருகிறார்.)

காட்சி - 4
இடம் - சிறைச்சாலை, மாந்தர் - தருமசேனர், அமைச்சர் நல்லசிவம், தளபதியும் வீரர்களும், சிறை அதிகாரி.(இரவு எல்லோரும் படுக்க ஆயத்தமாகின்றனர்)

அமைச்சர் நல்லசிவம் - மன்னா.. இங்கு தாங்கள் படுங்கள் ..காற்று வருகிறது.
தருமசேனர் - அமைச்சரே என்னை தங்களின் அன்பு தொல்லை செய்கிறது. நான் இப்போது சாதாரண போர்க்கைதி தான்.
தளபதியும் வீர ர்களும் - அது எப்படி அரசே.. நாங்கள் உங்களின் உப்பைத் தின்றவர்கள். ஊதியம் தங்களிடம் பெற்றவர்கள். விசுவாசம் வேண்டாமா எங்களுக்கு.
தருமசேனர் - எல்லோரும் நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்..நானும் அமைச்சரும் சதுரங்கம் விளையாடுவோம். சில சமயங்களில் நான் ஆட்டத்தில் வெல்வேன். சில சமயம் அவர் வெல்வார். சதுரங்க ஆட்டத்தில் ராஜா, ராணி, கோட்டை, மந்திரி, குதிரை சிப்பாய்கள் இருப்பர். ஆடும் வரை ராணிக்கு வலிமை அதிகம். ராஜா பிடிபட்டு விட்டால் ஆட்டம் முடிந்து விடும். இல்லையா அமைச்சரே ?
அமைச்சர் - ஆம் மன்னா அது தான் ஆட்ட விதி.
தருமசேனர் - ஒன்றை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஆட்டம் நடக்கும் வரை தான் ஒவ்வொரு காய்க்கும் ஒரு திறன் அதிகார அளவு உள்ளது. ஆட்டம் முடிந்த பின் ராஜா, ராணி சிப்பாய் எல்லா காய்களையும் ஒரே பெட்டிக்குள் ஒன்றாக வைப்பர். அப்போது அரசருக்கு அரசிக்கு மந்திரிக்கு என தனி பெட்டிகள் கிடையாது. அது போல என் ராஜாங்க ஆட்டம் முடிந்து விட்ட து நானும் உங்களைப் போல் சம அந்தஸ்து உள்ளவன் அவ்வளவே. நமக்குள் எந்த வகையிலும் ஏற்றத் தாழ்வு இல்லை.
(எல்லோரும் அமைதி காக்க)

சிறை அதிகாரி - (கதவைத் திறந்து உள்ளே வந்து தருமசேனரைக் கட்டிக் கொண்டு) என்னை மன்னித்து விடுங்கள் நண்பரே
தருமசேனர் - தாங்கள் சிறை அதிகாரி அல்லவா.. நான் எதற்கு மன்னிக்க வேண்டும்
(சிறை அதிகாரி தன் தாடி மீசையைக் களைய ,,,,)

எல்லோரும் - (வியப்புடன்) .. ஆ மன்னர் பூபதியா!
பூபதி - தருமசேனரே, தவறான தகவலை எனக்குத் தந்து தங்கள் மேல் போர் தொடுக்க வைத்துவிட்டான் என் மைத்துனன் வில்லவன்! தாங்கள் எங்கள் நாட்டின் மேல் போர் தொடுக்க இரகசியமாக படை தயார் செய்துவருவதாவும் அதற்குள் முந்திக் கொண்டு படை எடுக்கச் சொ ன்னான். உண்மை என்னவென்று விசாரித்து அறிந்தேன். தாங்கள் சொன்ன சதுரங்கம் கதை எனக்கும் பொருந்தும். என் ஆட்சிக்கும் ஒரு நாள் முடிவு வரும். தவறை உணர்ந்தேன். தங்கள் சிம்மாசனம் காலியாகவே உள்ளது. நாளை மறுபடி அதில் தாங்கள் அமர்ந்து ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும்
தருமசேனர் - இதுவும் இறைவன் கட்டளை. தங்களை பார்த்ததும் குரல் தெரிந்த குரலாய் இருக்கிறதே என அப்போதே சந்தேகப்பட்டேன். நண்பரே.

காட்சி - 5,
இடம் - தருமசேனர் அரச சபை, மாந்தர் - தருமசேனர், பூபதி, வில்லவன் மற்றும் படை வீரர்கள்.
(மறு நாள் காலை தருமசேனர் சிம்மாசனத்தில் அமர பூபதி அவரை வாழ்த்தி உடை வாளை திரும்பவும் அளிக்கிறார் )

பூபதி - ம்.. படை கிளம்பட்டும் நம் நாட்டை நோக்கி.
(அப்போது அவர் மைத்துனன் வில்லவன் பூபதி காதில் மெல்ல ....)

வில்லவன் - அரசே ஒரு செய்தி.. என் அந்தரங்க ஒற்றன் அனுப்பியுள்ளான், நாம் இங்கு வந்த வேளையில் நம் நாட்டைக் கைப்பற்ற கந்தகத் தீவு மன்னன் கப்பல் படையுடன் வருகிறானாம்.
பூபதி - வரட்டும்.. மடையா.. நான் உன்னை அங்கு வந்து கவனித்துக் கொள்கிறேன். கந்தகத் தீவு மன்னன் கஜராஜன் மகனுக்குத்தான் என் மகளை மணமுடிக்க உள்ளேன். திருமணம் நிச்சயம் செய்ய வரிசை பரிவாரங்களுடன் கப்பலில் வருகிறேன் என தகவல் எனக்கு வந்து விட்ட து. முதலில் உன் ஒற்றர்களை குதிரை மேய்க்க அனுப்பு. அதற்குத் தான் அவர்கள் லாயக்கு.
(பூபதி ரதம் முன்னே செல்ல படை பின் தொடர தருமசேனரும் அமைச்சர் தளபதி பிரதானிகள் எல்லோரும் கை அசைத்து வழி அனுப்புகின்றனர்.)

திரை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com