சுடச்சுட

  
  sm14

  என்ன குழந்தைகளே நலமாக இருக்கிறீர்களா?
   நான் தான் நுணா மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயல் மொரிண்டா கொரியா என்பதாகும். நான் ரூபியேசி குடும்பத்தைச் சேர்ந்தவள். நான் எல்லாவித நிலங்களிலும் வளரக் கூடிய சிறு மரம். எனக்கு மஞ்சணத்தி என்ற வேறு பெயருமுண்டு. என் மரத்தின் உட்புறம் மஞ்சள் வண்ணமாயிக்கும், அதனால் என்னை மஞ்சணத்தின்னு செல்லமா கூப்பிடறாங்க. நான் சங்கக் காலத்தோடு தொடர்புடையவள். சுற்றுச்சூழலின் நண்பன். அதாவது, நான் காற்றின் வேகத்தைத் தடுத்து, தூசியினை வடிகட்டி சுற்றுச் சூழலுக்கு உதவுகிறேன்.
   என் பூக்கள் மார்ச், ஜுன் மாதங்களில் பூத்து வெள்ளை நிறத்திலிருக்கும். காய்கள் நான்கு முனைகளுடன் உருவாகும். வெப்பத்தைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், மூட்டு வலியைப் போக்கவும், புற்று நோயை வராமல் தடுக்கவும். இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், இரும்பு சக்தியை அதிகரிக்கவும், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணமாக்கவும் நான் பயன்படுகிறேன். தோல் நோய்களை குணமாக்கும் சக்தி எங்கிட்டே இருக்கு.
   என் இலைச் சாறு நாள்பட்ட புண்களையும் போக்கும் சக்தி கொண்டது. இலையிலிருந்து ஒரு வித உப்பு தயாரிக்கிறாங்க, இதை மருந்தாகவும் பயன்படுத்தறாங்க. என் இலைச் சாற்றை மூட்டுகளில் பூசினால் மூட்டு வீக்கம், மூட்டு வலி, மூட்டுவாதம் ஆகியவை குணமாகும். என் இலைகள் நிலங்களுக்கு நல்ல உரமாகும்.
   என் மரப் பட்டை தைலத்தால் காய்ச்சல், குன்மம், கழலை முதலியவை குணமாகும். என் காயை முறைப்படி புடம் போட்டுப் பொடித்து பல் துலக்கினால் பல் சொத்தை நீங்கும். காயைப் பிழிந்து சாறு எடுத்து தொண்டையில் பூசினால், தொண்டை கரகரப்பு நீங்கும். என் வேரை கஷாயமிட்டுக் குடித்தால் மலச்சிக்கல் இருக்காது. என் வேரிலிருந்து வரும் நீர் இரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். என் பட்டை தோல் பதனிட உதவுகிறது. மரக்குவளைகள், பொம்மைகள், மரத்தட்டுகள், தறி நெசவிற்கு உதவும் பாபின் போன்றவற்றை செய்யவும், காகிதம் தயாரிக்க மரக்கூழ், மேசை, நாற்காலிகள் செய்யவும் பயன்படுகிறேன். என் விறகுகள் அடுப்பெரிக்க பயன்படுது. நான் உறுதியான அதே சமயம் மிகவும் லேசானவள் என்பதால், ஏர், வில்வண்டி, பாரவண்டி போன்றவற்றில் மாடுகளைப் பூட்டும் நுகத்தடி செய்யவும் பயன்படுகிறேன். வண்டியிழுக்கும் மாடுகளின் கழுத்து வலியைக் குறைக்க நம் முன்னோர் என்னைத் தான் தேர்ந்தெடுத்துகிறார்கள் என்பது எனக்குப் பெருமை இல்லையா குழந்தைகளே!
   என் பட்டையைக் கொதி நீரில் போட்டு ஊற வைத்தால் சாயம் இறங்கி விடும். வெண்மையான துணிகளுக்கு காவி நிறம் ஊட்டலாம். வெண் நுணாவிலிருந்து குளிர் பானம் தயாரித்து இப்போதெல்லாம் வெளிநாட்டுக்கும் அனுப்புறாங்க. இந்தப் பானம் (நோனி) மருத்துவ குணம் உடையது. இது சர்வரோக நிவாரணி. நான் தோல் வியாதிகளுக்கு நல்ல மருந்து. என் காயை ஊறுகாய் செய்து உணவோடு உண்டு வந்தால் காணாக்கடி, நச்சுத் தன்மை முதலியவை உடலிலிருந்து படிப்படியாக நீங்கி, உடல் நலமடையும். நான் தமிழாண்டு சார்வரியைச் சேர்ந்தவன்.
   மரங்கள் நமக்கு நீர் வளம், நில வளங்களை அளிக்கிறது. மரங்களை அழிக்காமல் பாதுகாத்து மழையைப் பெறுவோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
   (வளருவேன்)
   - பா.இராதாகிருஷ்ணன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai