அரங்கம்: 'கரோனா' தந்த மாற்றம்!

சண்முகசுந்தரம்: என்ன சேது, ஏதோபோல இருக்கீங்க? கரோனா விடுமுறையெல்லாம் எப்படிப் போனது?
அரங்கம்: 'கரோனா' தந்த மாற்றம்!
Updated on
4 min read


அரங்கம் -1
இடம்: பள்ளிக்கூடம். ஆசிரியர் ஓய்வு அறை.
பாத்திரங்கள்: தமிழாசிரியர் சண்முகசுந்தரம், கணித ஆசிரியர் சேதுராமன்.
(கரோனா நோய்த் தொற்றுக்காக அரசு அறிவித்திருந்த சுய ஊரடங்கைத் தளர்த்திய நான்கு நாள்களுக்குப்
பிறகு பள்ளிக்கு சண்முகசுந்தரமும் சேதுராமனும் வந்திருந்தனர். ஆசிரியர் ஓய்வறையில் சேதுராமன் மிகவும் வருத்தமாக உட்கார்ந்திருந்தார்.)

சண்முகசுந்தரம்: என்ன சேது, ஏதோபோல இருக்கீங்க? கரோனா விடுமுறையெல்லாம் எப்படிப் போனது?
சேதுராமன்: எங்கே போனது... சிரமப்பட்டுத் தள்ள வேண்டியதாயிற்று நானும் என் மனைவியும்.
சண்முகசுந்தரம்: என்னாயிற்று? பிள்ளைகள் உங்களோடுதானே இருந்தாங்க?
சேதுராமன்: எங்கே இருந்தாங்க... மார்ச் முதல் வாரத்தில் எங்க அம்மா சென்னை வந்திருந்தார். அப்போது சேர்ந்தாற்போல நான்கு நாள் விடுமுறை இருந்ததால பாட்டியோட கிராமத்துக்குப் போறேன்னு போனவங்கதான்... இந்த கரோனா அறிவிப்பு வந்து பேருந்து, ரயிலையெல்லாம் நிறுத்தினதால இருவரும் அங்கேயே தங்கிட்டாங்க. நானும் மனைவியும் இங்கே பிள்ளைகள் இல்லாமல் ஆளுக்கொரு பக்கமாக செல்ஃபோனை வச்சிகிட்டு முடங்கிக் கிடந்தோம்.
சண்முகசுந்தரம்: இப்பதான் ஊரடங்தைத் தளர்த்திட்டாங்களே... பிள்ளைங்க வீட்டுக்கு வந்திருப்பாங்களே...
சேதுராமன்: எங்கே வந்தாங்க... ஊரடங்கைத் தளர்த்தி நாலு நாள்தான் ஆகுதாம். பேருந்து, ரயிலில் ரொம்பக் கூட்டமா இருக்குமாம்... சென்னை சகஜ நிலைக்குத் திரும்பியதும் அனுப்பறேன்னு அம்மா பிடிவாதம் பிடிக்கிறாங்க... என்னையும் அங்கே வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க... என்ன பண்றதுன்னே தெரியலை... பிள்ளைங்க இல்லாம வீடே வெறிச்சோடிக் கிடக்கு சண்முகம்... எங்க நிம்மதியே போச்சு...
சண்முகசுந்தரம்: சரி...சரி... கவலைப்படாதீங்க! பாட்டி-தாத்தாவுக்கு ஒத்தாசையா கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டுமே...
சேதுராமன்: ஒத்தாசையா...? உங்களுக்கு என் பிள்ளைகளைப் பற்றித் தெரியாது. அக்காவும் தம்பியும் ரொம்ப சேட்டை. வீட்டு வேலை ஏதாவது செய்யச் சொன்னா... இரண்டு பேரும் போட்டிப் போடுவாங்க... நாங்க ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டோம்... அதுதான் இப்பப் பிரச்னையா இருக்கு. பாவம் எங்க அம்மா... என்ன பாடுபட்றாங்களோ...?
சண்முகசுந்தரம்: எல்லாம் சரியாயிடும் சேது.... அப்புறம்... நம்ம பள்ளி சார்பா நாம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நூல் கொண்டு வரலாம்ணு விரும்பறேன்.
சேதுராமன்: எதைப் பற்றி?
சண்முகசுந்தரம்: இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா விடுமுறை அனுபவத்தைத்தான். மாணவர்களிடம் இந்த சுய ஊரடங்கின்போது வீட்டில் இருந்தபடி ஆக்கப்பூர்வமாக என்னென்ன செய்தீர்கள் என்று கேட்டு, அவற்றையெல்லாம் அந்த நூலில் பதிவு செய்யலாம்...
சேதுராமன்: இதனால யாருக்கு என்ன பயன்? இதையெல்லாம் யாரு படிப்பாங்க...? எனக்கு இதில் உடன்பாடில்லை சண்முகம். என்னால் உங்களுக்கு உதவ முடியாது...ப்ளீஸ்... என்னை விட்டுடுங்க...
சண்முகசுந்தரம்: சரி... உங்களை நான் கட்டாயப்
படுத்த விரும்பலை.

அரங்கம்-2
இடம்: தலைமை ஆசிரியர் அறை.
பாத்திரங்கள்: சண்முகசுந்தரம், வகுப்பு மாணவர்கள்
தலைமை ஆசிரியர் கண்ணப்பன், சேதுராமன்.
(கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறந்த முதல் நாள். தலைமை ஆசிரியர் அறையில் மாணவர்கள், சண்முகசுந்தரம், சேதுராமன், ஆசிரியர்கள்
சிலர் கூடியிருந்தனர். சேதுராமன் காரணம்புரியாமல் நின்றிருந்தார்.)

கண்ணப்பன்: வாங்க... சேதுராமன், இந்த நூலை நீங்கள்தான் முதன்முதலில் என் கையால் வாங்கணும்னு தமிழாசிரியர் ஆசைப்படுகிறார்.
சேதுராமன்: (ஒன்றும் புரியாமல் அந்த நூலை வாங்கிப் பார்த்தவர் அதிர்ந்து மகிழ்ந்தார்) என்ன சார் இது? நூலின் அட்டைப் படத்தில் என்னுடைய பிள்ளைகள்?
கண்ணப்பன்: எட்டாம் பக்கத்தை முதலில் பாருங்க...
(எட்டாம் பக்கத்தைப் புரட்டினார். தன் மகனும் மகளும் தாத்தா-பாட்டியுடன் இருப்பதைப் போன்ற
புகைப்படத்துடன் கூடிய அவர்களது பேட்டி
அதில் இடம்பெற்றிருந்து.)
சேதுராமன் : என்ன சண்முகம் இது? எப்படி இவ்வளவு சீக்கிரமாக இந்நூலை தயார் செய்தீர்கள்? என் பிள்ளைகளையும் மற்ற மாணவர்களையும் எப்படித் தொடர்பு கொண்டீர்கள்?
சண்முகசுந்தரம்: இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு சேது? இன்றைய தொழில்நுட்பம்தான் நம்ம வேலையை சுலபமாக்கிடுதே... என் வகுப்பு மாணவர்களுக்கென்று கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) குழு ஒன்றை உருவாக்கினேன். அதில் மாணவர்களிடம் நான் கேட்க நினைத்த கேள்விகளைப் பட்டியலிட்டு அனுப்பினேன். அவர்களின் அனுபவங்களை அதில் புகைப்படங்களுடன் பதிவிடச் சொன்னேன். சிலர் ஆங்கிலத்திலும், சிலர் தமிழிலும் சுய ஊரடங்கின்போது வீட்டில் என்னென்ன செய்தார்கள் என்கிற தங்களுடைய அனுபவங்களைப் பதிவு செய்திருந்தனர். உங்கள் பிள்ளைகள் பதிவு இந்த நூலுக்கு "ஹைலைட்'டாக இருந்ததால், அட்டைப் படத்தில் அவர்களை இடம்பெறச் செய்தேன். உங்கள் பிள்ளைகள் இருவரும் கரோனா நோய்க் கிருமி பற்றிய நிறைய மருத்துவத் தகவல்களை என் குழுவில் பதிவிட்டிருந்தார்கள். வீட்டிலேயே கணினி இருந்ததால் என் வேலை மேலும் சுலபமானது.
(சேதுராமன் சண்முகசுந்தரத்தைக் கையெடுத்துக் கும்பிட்டு, மனம் நெகிழ தன் நன்றியைத் தெரிவித்தார்)
கண்ணப்பன்: அதுமட்டுமல்ல சேதுராமன், இந்த நூல்தான் பள்ளியின் இந்த ஆண்டுக்கான மிகச்
சிறப்பான நூல் என்று கல்வித்துறையே பாராட்டியிருக்கிறது. இதை எல்லாப் பள்ளி நூலகங்களுக்கும் கல்வித்துறை சார்பாகவே வாங்கி அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
சேதுராமன்: ரொம்ப நன்றி சார். சண்முகத்துக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை... நான் அவருக்கு உதவி செய்யாததுதான் மனதை உறுத்துகிறது.
சண்முகசுந்தரம்: அதனாலென்ன... அடுத்த நூலுக்கு செய்துவிடுங்கள் (சிரித்தார்). இப்போது மகிழ்ச்சிதானே...
(சேது தலையாட்டினார். எல்லோரும் மகிழ்ச்சியாக முதல் நாள் வகுப்புக்குக் கிளம்பினார்கள்)

அரங்கம்- 3
இடம்; ஆசிரியர்கள் ஓய்வு அறை.
பாத்திரங்கள்: சேதுராமன், சண்முகசுந்தரம்.
(சேதுராமன் நூலைத் திறந்து தம் பிள்ளைகளின் அனுபவங்களை ஆவலோடு படிக்கத் தொடங்கினார்)
(மகள் திவ்யா இப்படிக் கூறியிருந்தாள்)

"நான் அம்மா-அப்பா செல்லம். அவங்களோட இருக்கிறப்போ எந்த வேலையும் செய்ய மாட்டேன். தம்பியோடு அடிக்கடி சண்டையும், போட்டியும் போடுவேன். ஆனால், என் பாட்டி வீட்டுக்குப் போனவுடன், பாட்டி சொல்லிக் கொடுத்த வேலைகளை எல்லாம் மகிழ்ச்சியாகச் செய்தேன். சமையலுக்குப் பூண்டு, வெங்காயம் உரித்துக் கொடுத்தேன். பாட்டி தாத்தாவுடன் நாங்கள் இருவரும் ஒற்றுமையாக சேர்ந்து பல்லாங்குழி விளையாடினோம். இது கணித அறிவையும் நினைவாற்றலையும் வளர்க்கும் என்றார் பாட்டி. அதேபோல பரமபதம் என்ற விளையாட்டு. இதில் ஏணி மீது ஏறியும், பாம்பு வாலைப் பிடித்து இறங்கியும் விளையாடினோம். நேரம் போனதே தெரியவில்லை. இந்த விளையாட்டு வாழ்வில் உயர்வும் தாழ்வும் மாறி மாறி வருவது இயல்பு என்றும், ஏணியில் ஏறி வெற்றியையும், பாம்பில் இறங்கி தோல்வியையும் சந்திப்பதைப் போல வாழ்வில் வெற்றியும் தோல்வியும் வரும். அதை மகிழ்ச்சியுடனும், மன உறுதியுடனும் நாம் ஏற்கப் பழக வேண்டும் என்றும் தாத்தா சொன்னார்.
அப்புறம்.... பாட்டி நிறைய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் காட்டினார். அதையெல்லாம் செல்ஃபோனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டேன். வீட்டில் இருந்த பழைய புகைப்
படங்களையும், பூஜை அறையையும் தூய்மை செய்து தந்தேன். பாட்டியிடம் "பூ' தொடுக்கக் கற்றுக் கொண்டேன். குறிப்பாக என் துணிகளை நானே துவைத்து, உலர்த்தி, மடித்தும் வைத்துக் கொண்டேன். இதை அம்மா கேட்டால் மிகவும் மகிழ்வார். இதுநாள்வரை என் பெற்றோருக்கு இப்படியெல்லாம் நான் உதவி செய்ததேயில்லை. ஆனால், இனிமேல் அவர்களுக்குக் கட்டாயம் உதவி செய்வேன். கரோனாவால் கிடைத்த இந்த விடுமுறையில் நான் பயனுள்ள பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.
(மகன் அருணின் பதிவைப் படிக்கத் தொடங்கினார்.)
தோட்டத்திற்குத் தினமும் தண்ணீர் பாய்ச்சுவது, மாடுகளுக்குத் தீனி வைப்பது, வீட்டைத் துடைத்து சுத்தமாக வைத்திருப்பது, கிணற்றில் தண்ணீர் இறைத்து நிரப்புவது எல்லாம் என் வேலை. தினமும் இதை செய்யும்போது உற்சாகமாக இருப்பதாக உணர்ந்தேன். தாத்தா அலமாரியில் வைத்திருந்த ஸ்டோரி புக்சையெல்லாம் படித்தேன். நிறைய ஓவியங்கள் வரைந்து பார்த்தேன். ஒன்பதாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி என்று கல்வித்துறை கூறியதால், பத்தாவது போகும் எனக்கு, பக்கத்து வீட்டு மனோகரிடமிருந்து பத்தாம் வகுப்பு நூல்களை முன்கூட்டியே தாத்தா வாங்கித் தந்தார். ஊருக்குப் போனால் அங்கே நீ படிக்க மாட்டாய் எனப் பாட்டி சொன்னதோடு, தினமும் ஏதாவது ஒரு பாடத்தைப் படித்து எழுதிக் காட்ட வேண்டும் என்று சொன்னார்.
நானும் அக்காவும் பாட்டி வீட்டில் வேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்தோம். பாட்டி எங்களுக்குக் கதைகள் கூறினார். நான் கசப்பு மருந்து சாப்பிட அடம் பிடிப்பேன். ஆனால், பாட்டி இவை கிருமி நாசினி, உடம்புக்கு மிகவும் நல்லது என்று கூறி, பச்சிலைகளை அரைத்துக் கொடுக்க, மறுக்காமல் சாப்பிட்டோம். கரோனா மற்றும் பலவகையான கிருமிகளைப் பற்றிய தகவல்களை நானும் அக்காவும் கூகுளில் சென்று தேடித் தொகுத்து வைத்திருக்கிறோம். தூய்மையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிந்து கொண்டோம். இந்த விடுமுறை பயனுள்ளதாகவும், பலவற்றையும் கற்றுக்கொள்ள உதவியாகவும் இருந்ததற்கு எங்கள் தாத்தா-பாட்டிக்கும், என் பெற்றோருக்கும்தான் நன்றிகூற வேண்டும்!
(சேதுராமனுக்குப் பேச்சே எழவில்லை... கண்கள் நீரை வார்த்தன... அப்போது அறைக்குள் நுழைந்த சண்முகசுந்தரம் அவர் தோளைத் தட்டி ஆறுதல்
கூறினார்.)
சேதுராமன்: சண்முகம் என்னையும் என் பிள்ளைகளையும் ரொம்பவே கெளரவப்படுத்திட்டீங்க... என்னமா எழுதியிருக்காக என் பசங்க... என்னாலேயே நம்ப முடியலை... ஆனால் உங்களுக்குப் போய் நான் உதவ முடியாதுன்னு சொன்னதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு...
(நா தழுதழுத்தது)
சண்முகசுந்தரம்: வருத்தப்பட என்ன இருக்கு சேது? உங்க நிலையில யாராக இருந்தாலும் அதைத்தான் சொல்லியிருப்பாங்க... விடுங்க... பிள்ளைகள் நல்லது செய்தால் அதை உடனுக்குடன் நாம் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தணும். அதைத்தானே இந்தக் காலத்துப் பிள்ளைகள் விரும்பு
கிறார்கள்.
சேதுராமன்: உண்மைதான் சண்முகம்.
(இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர்)

அரங்கம் - 4
இடம்: சேதுராமன் வீடு.
பாத்திரங்கள்: சேதுராமன், சேதுராமனின் அம்மாகல்யாணி. மகன், மகள்.
(வீட்டின் கதவு திறந்ததும் எதிரில் அம்மாநின்றிருந்ததைப் பார்த்தவுடன்)

சேதுராமன்: (அம்மா... என்று அவரைக் கட்டிக்கொண்டார். ஓடிவந்த பிள்ளைகள் அப்பாவைக் கட்டிக் கொண்டனர். சில நொடிகளுக்குப் பிறகு) என்னை மன்னிச்சுடும்மா... பிள்ளைப் பாசத்துல உங்களிடம் ஏதேதோ பேசிட்டேன்.
கல்யாணி: பரவாயில்லப்பா... பிள்ளைகள் மேல் பாசம் அதிகம் வைக்கலாம், தவறில்லை. ஆனால் அந்தப் பாசம் அவங்களை சோம்பேறியா ஆக்கிடக்கூடாது. வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்கூட சில நேரம் நமக்கு நன்மையையே தரும். நீ ஆசைப்பட்டதைப் போலவே இனி உன் பிள்ளைகள் இருப்பார்கள். (பேரன், பேத்தியைப் பார்த்து) இல்லையா பசங்களா?...
இருவரும்: கண்டிப்பா நடந்துக்குவோம் பாட்டி...
அருண்: வாட் ய யூஸ்புஃல் எக்ஸ்பீரியன்ஸ் கிரேன்மா...
( சேதுராமனின் மனது இப்போது நிம்மதியை அனுபவித்தது. இதை சமையல் அறையிலிருந்து எட்டிப் பார்த்தார் அவர் மனைவி)
-திரை-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com