குறள் நெறிக் கதைகள்!: பிறருக்குத் தீங்கு செய்ய நினையாதே!

முன்னொரு காலத்தில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அதில் தாமரை மலர்களும்,அல்லி மலர்களும் பூத்துக் குலுங்கின. அந்தக் குளத்தில் தவளை ஒன்று வசித்து வந்தது.
குறள் நெறிக் கதைகள்!: பிறருக்குத் தீங்கு செய்ய நினையாதே!


முன்னொரு காலத்தில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அதில் தாமரை மலர்களும்,அல்லி மலர்களும் பூத்துக் குலுங்கின. அந்தக் குளத்தில் தவளை ஒன்று வசித்து வந்தது. அது அளவில் பெரியதாகவும் , பச்சை  நிறத்திலும்  இருந்தது. அக்குளக் கரையில் சற்று தொலைவில் பாம்பு ஒன்று புற்றில் வசித்து வந்தது. 

தவளை சில நேரங்களில் பூச்சிகளைப் பிடிப்பதற்காக குளக் கரைக்கு வந்து நிற்கும். இதைக் கண்ட பாம்பு தவளையைப் பிடிப்பதற்காகப் பாய்ந்தோடி வரும். ஆனால் அதற்குள் தவளை நீருக்குள் பாய்ந்து சென்று மறைந்து விடும். அது தாமரை இலையின் மேல் சென்று அமர்ந்து விட்டால் யாராலும் அதை அடையாளம் காண இயலாது.

இப்படி இருக்கையில் எப்படியோ எலி ஒன்று தவளைக்கு நண்பன் ஆனது. ஒரு நாள் எலியிடம், தாமரை இலை மீது அமர்ந்திருந்த தவளை,  ""நண்பா! நம் இருவருக்கும் பொதுவான எதிரி ஒருவர் உண்டென்றால் அது இந்தப் பாம்பு தான்!  அதை எப்படியாவது ஒழித்துக் கட்ட  நான் ஒரு திட்டம் வைத்துள்ளேன்!  நீ ஒத்துழைத்தால் அவனை அடியோடு ஒழித்து விடலாம்!'' என்றது. 

""சொல் நண்பா! நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் !'' என்றது எலி.

""நண்பகல் வேளைகளில் இங்கு பருந்துகளும் கழுகுகளும் சுற்றி வட்டமிடுகின்றன. நீ பாம்புப் புற்றின் அருகே சென்று ஓசை எழுப்பி விட்டு ஓடி விடு! உன் இருப்பை அறிந்த பாம்பு உன்னைப் பிடிக்க வெளியே ஓடி வரும்! நீ எப்படியாவது அதனிடம் சிக்காமல் ஓடி விட வேண்டும்! வானில் பறக்கும் பருந்து மற்றும் கழுகுகளின் கண்களுக்கு பாம்பு தப்ப முடியாது! அவை பறந்து வந்து அந்த  பாம்பைக் கொத்தி தின்று விடும்!'' என்றது.

இது நல்ல திட்டமாக இருந்தாலும் பருந்து, கழுகு என்ற பெயரைக் கேட்டதுமே எலிக்கு கிலி பிடித்துக் கொண்டது.

""அவை பாம்பைப் பிடிக்காமல் என்னைப் பிடித்து விட்டால்?'' என்று நினைத்த எலி பயந்து போய் மெளனமானது.

""நண்பா! என்ன யோசிக்கிறாய்? இது சற்று கடினமான காரியம்தான்! உன் உயிரைப் பணயம் வைத்து செய்ய வேண்டிய செயல்தான்! ஆனால் இதில் வெற்றி பெற்று விட்டால் நாம் இருவரும் சுதந்திரமாக சுற்றித் திரியலாம்!'' என்று ஆசை வார்த்தை காட்டித் தந்திரமாகப் பேசியது தவளை.

தவளைக்கு உண்மையிலேயே எலியின் மீது அக்கறை இல்லை. அதன் ஒரே எண்ணம் பாம்பை அழிக்க வேண்டும் என்பதே! "இச் செயலில் தோற்றாலும் அழியப் போவது எலிதானே!எலியைப் பாம்பு பிடித்துத் தின்னும் அல்லது பருந்தும் கழுகும் கொத்தித் தின்னப் போகின்றன! நமக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை! நாம் நடப்பவற்றை வேடிக்கை பார்ப்போம் !'என்று தனக்குள் எண்ணிக் கொண்டது தவளை.

தவளையின் தீய எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத எலி மறு நாள் திட்டமிட்ட
படியே செயல் பட்டது. எலியின் இருப்பை அறிந்த பாம்பு எலியைப் பிடிக்கப் பாய்ந்தோடி வந்தது. பாம்பிடம் இருந்து தப்பிக்க எலி ஒரு புலியைப் போல் ஓடி ஒரு பொந்துக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.

தாமரை இலை மேல் அமர்ந்து இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தவளை தன்னையும் அறியாமல் ""நண்பா! மாட்டிக்கொண்டு விடாதே! இன்னும் வேகமாக ஓடு!''என்று தன் குரலில் ""கர்''   ""புர்'' என்று கத்தியது.

வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகளும் கழுகுகளும் தரையில் ஊர்ந்து கொண்டிருந்த கரு நாகத்தைப் பார்த்து விட்டன. கொத்தித்தின்னப் பறந்தோடி வந்தன. அப்பறவைகளின் நிழலுக்கே பயந்து ஓடிய பாம்பு எப்படியோ தன்  புற்றுக்குள் சென்று ஒளிந்து கொண்டது. தன் ஒரே  எதிரி அழியப் போகிறான்  என்ற சந்தோஷத்தில் தவளை தன்னை மறந்து ""அடேய்! பாம்பு ! நீ இன்று எப்படி  தப்பிக்கிறாய் என்று பார்க்கிறேன்? நல்லா மாட்டிக்கிட்டியா?'' என்று கத்தத் தொடங்கியது.  

பறந்து வந்த கழுகும் பருந்தும் பாம்பைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தன. சீற்றம் கொண்ட பருந்து கோபம் கொண்டு தாமரை இலை மீது அமர்ந்திருந்த தவளையைக் கொத்திக் கொண்டு பறந்து சென்றது.

ஆம்! பிறருக்குத் தீங்கு செய்ய நினைத்த தவளைக்குத் தானே தீங்கு தேடி வந்தது.இதையேதான் வள்ளுவரும் “தீவினையச்சம்” என்ற அதிகாரத்தில், 

மறந்தும் பிறன் கேடு சூழற்க – சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.”      
- என்கிறார். 

இதன் பொருள் ""பிறருக்குத் தீங்கு தரும் செயல்களை மறந்தும் நினைக்கக் கூடாது!அப்படி நினைத்தவனுக்கு அறமே தீமை செய்துவிடும் !'' என்பதாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com