

கூடிக் குரலெழுப்பும் - சிட்டுக்
குருவிகள் கூட்டத்தைத்
தேடிப் பார்க்கின்றேன் - கண்ணில்
தென்பட வேயில்லை
மின்னணுக் கதிர் வீச்சு - கேபிள்
விண்ணுயர் கோபுரங்கள்
சொன்னார் அறிவியலார் - குருவியைத்
துரத்தி விடுகிறதாம்!
ஊரைச் சுற்றி மாடி - வீடுகள்
உயர்ந்து நிற்பதனால்
கூரை வீடுகளும் - விரைவாய்க்
குறைந்து போயினவே!
உத்திரம் வாரைகள் - கூரையை
உயர்த்தும் கழி, கம்பம்
மொத்த மாகக் காணோம் - எனினும்
முயன்றால் புதுமை வரும்
செயற்கைக் கூடுகளை - முயன்றே
தேர்வோம் விதவிதமாய்
உயர்ந்த தளத்தடியில் - சிட்டுகள்
உறைவிடம் காணட்டும்!
தானிய மணிகளையும் - கீழே
தரையில் விசிறிடுவோம்
ஏனினி சந்தேகம்? - சிட்டுகள்
இனமும் பெருகிவிடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.